வெறும் 4.69 லட்சம் ரூபாய் விலையில் வெளியான புதிய எலெக்ட்ரிக் கார்.. அதிரடியாக விலைக்குறைப்பு செய்த நிறுவனம்
வாடிக்கையாளர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த மேம்படுத்தப்பட்ட டாடா டியாகோ EV ஃபேஸ்லிப்ட் மாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இந்த டியாகோ EV விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் காரை பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் டிசைனுடன் டாடா மேம்படுத்தியிருக்கும் நிலையில், மிகவும் குறைவான விலையிலும் வெளியிட்டிருக்கிறது. இந்தப் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் குறித்த தகவல்களை முழுமையாக இங்கே நாம் பார்க்கலாம்.
அதிரடி விலைக்குறைப்பு:
முதலில் இந்த எலெக்ட்ரிக் காரை மேம்படுத்தியிருக்கும் டாடா முன்பை விட 1.14 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் இந்தக் காரை வெளியிட்டுள்ளது. அடிப்படை வேரியன்டின் விலையே 1 லட்சம் ரூபாய் வரை குறைந்திருக்கிறது. முன்னதாக 7.99 லட்சம் ரூபாய் முதல் 11.14 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 6.99 லட்சம் ரூபாய் முதல் 9.99 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது புதிய டியாகோ EV.

இந்த அப்டேட் செய்யப்பட்ட மாடலுடன் வாடகை பேட்டரி (BaaS- Battery as a Service) திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். BaaS திட்டத்தின் கீழ் வெறும் 4.69 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த டியாகோ EV-யை நாம் வாங்க முடியும். இதுவரை 4.99 லட்சம் ரூபாய் விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்ஜி காமெட் EV-யே விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தது.
இந்த எம்ஜி காமெட் EV-யும் BaaS திட்டத்தின் கீழே 4.99 லட்சம் ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதனை விட 30,000 ரூபாய் வரை குறைவான விலையில் புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ EV-யை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. BaaS என்பது பேட்டரி நாம் தொடக்கத்திலேயே பணம் செலுத்தாமல், பயன்பாட்டு அடிப்படையில் கட்டணம் செலுத்தும் ஒரு நிதித் திட்டமாகும். எலெக்ட்ரிக் காரின் தொடக்க விலையைக் குறைப்பதற்காக இதனை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

2026 டியாகோ EV டிசைன்:
மேம்படுத்தப்பட்ட காரின் முகப்புப் பக்கத்தை முழுவதுமாக மறுவடிவமைப்பு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். ஸ்லீக்கான LED முகப்பு விளக்குகள், அதற்கு மேலே மெல்லிய கோடு போல LED DRLகள், பாடியின் நிறத்திலேயே குளோஸ்டு ஆஃப் கிரில் மற்றும் பம்பர் ஆகிய அம்சங்களுடன் டிசைனை டாடா மேம்படுத்தியிருக்கிறது. முந்தைய காரின் முகப்பில் நிறைய கருப்பு நிற எலமென்ட்களைப் பார்க்க முடிந்தது. புதிய காரின் முகப்பு முழுவதும் பாடியின் நிறத்திலேயே இருக்கிறது.
வித்தியாசமான வீல் ஆர்ச் கிளாடிங்குடன், புதிதாக வடிவமைக்கப்பட்ட 15 இன்ச் அலாய் வீல்களை புதிய டியாகோ EV-யில் கொடுத்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். காரின் பின்பக்கம் கனெக்டட் LED விளக்குகள் கொடக்கப்பட்டிருப்பதுடன், பம்பர்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. டோர் ஹேண்டில்கள் குரோம் ஃபினிஷுடன் கொடுக்கப்பட்டிருப்பது சற்று ப்ரீமியமாக இருக்கிறது. டேராடூன் டியூ, சோபோ சர்ஜ், பாங்காங் பல்ஸ், மதீரன் மான்சூன், ப்யூர் கிரே மற்றும் பிரிஸ்டீன் ஒயிட் ஆகிய நிறங்களில் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டிருக்கிறது.
உட்புறம் மற்றும் வசதிகள்:
காரின் உட்புறமும் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டூயல் டோன் ஃபினிஷ் கொண்ட டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 10.25 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பகுதியாக டிஜிட்டல் வடிவில் இருக்கும் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் வசதியையும் கொண்டிருக்கிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க AC வெண்ட்கள், கூல்டு கிளவ்பாக்ஸ், 4 ஸ்பீக்கர்கள், ரோட்டரி டிரைவ் செலக்டார் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பிற்காக அப்டேட் செய்யப்பட்ட டியாகோ EV-யில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு டூயல் ஏர்பேக்குகள் மட்டுமே ஸ்டாண்டர்டாகக் கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ESP-யுடன் கூடிய ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், EBD-யுடன் கூடிய ABS, 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பவர்ட்ரெயின், பேட்டரி மற்றும் ரேஞ்சு:
பவர்ட்ரெயின் மற்றும் பேட்டரி அளவில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறிய பேட்டரியுடன் 62 hp பவர் மற்றும் 110 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும், பெரிய பேட்டரியுடன் 75 hp பவர் மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெரிய பேட்டரி பேக்கானது 285 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் திறனையும், சிறிய பேட்டரியானது 223 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொடுக்கும் திறனையும் கொண்டுள்ளன. நிஜ உலகப் பயன்பாட்டில் 19.2 kWh பேட்டரி பேர், 160 கிமீ முதல் 170 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதேபோல் பெரிய பேட்டரியில் 205 கிமீ முதல் 215 கிமீ வரையிலான ரேஞ்சை எதிர்பார்க்கலாம்.
இந்த பேட்டரிக்கள் முன்பை விட 40 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் ஆகும் எனவும் டாடா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிறிய பேட்டரி பேக்கிற்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிமீ வரை டாடா வாரண்டி அளிக்கும் நிலையில், பெரிய பேட்டரி பேக்கிற்கு வாழ்நாள் வாரண்டியை முதல் உரிமையாளருக்கு மட்டும் அளிக்கிறது. இதனால் பேட்டரி விரைவில் கெட்டுப் போகுமோ என்ற பயமின்றி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கலாம்.
வேரியன்ட் வாரியாக விலை நிலவரம்:
புதிய மேம்படுத்தப்பட்ட டியாகோ EV ஹேட்ச்பேக்கை ஸ்மார்ட், ப்யூர் பிளஸ் மற்றும் கிரியேட்டிவ் பிளஸ் என மூன்று வேரியன்ட்களாக வெளியிட்டள்ளது டாடா மோட்டார்ஸ். ஸ்மார்ட் வேரியன்டானது 19.4 kWh பேட்டரி பேக் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. இதனையே 6.99 லட்சம் ரூபாய் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம்.
இடைநிலை ப்யூர் பிளஸ் வேரியன்டானது இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடனும் கிடைக்கிறது. சிறிய பேட்டரி பேக் கொண்ட ப்யூர் பிளஸ் வேரியன்டை 8.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், பெரிய பேட்டரி பேக் கொண்ட ப்யூர் பிளஸ் வேரியன்டை 9.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நாம் வாங்கலாம்.
டாப் எண்டான கிரியேட்டிவ் பிளஸ் வேரியன்டானது பெரிய 24 kWh பேட்டரி பேக் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. இதனை 9.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் நாம் வாங்கலாம். BaaS திட்டத்தின் கீழ் அடிப்படையான ஸ்மார்ட் வேரியன்டே 4.69 லட்சம் ரூபாய் என்ற குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
பொதுவாக ஃபேஸ்லிப்ட் அப்டேட் என்றால் விலை கூடுவதைத் தான் பார்த்திருப்போம். ஆனால் முன்பை விட 1 லட்சம் ரூபாய் வரை குறைவான விலையில் ஒரு கார் வெளியாவதை இப்போது தான் பார்க்கிறோம். இந்த டியாகோ EV ஃபேஸ்லிப்ட் தான் இந்தியாவில் இப்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராகும். டிசைன் ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பம் தான். எனினும் புதிய காரின் டிசைன் ப்ரீமியமாகவே எங்களுக்குத் தோன்றுகிறது.
முன்பு இருந்ததை விட கூடுதல் ரேஞ்சுடன் சற்று பெரிய பேட்டரி பேக்கை டாடா கொடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதற்குப் பதிலாக விலையைக் குறைத்திருக்கிறது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ற காராகவே இதனை பார்க்கிறது டாடா. எனவே தான் ரேஞ்சைக் கூட்டாமல், இன்னும் அதிக வாடிக்கையாளர்கள் வாங்கும் வகையில் விலையைக் குறைத்து, BaaS திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications