இந்த ஜூலை மாசம் ஏகப்பட்ட கார்கள் விற்பனைக்கு வருது! வேட்டியை வரிந்து கட்டும் மாருதி, டொயோட்டா, கியா, எம்ஜி!
இந்திய சந்தையில் நடப்பு ஜூலை மாதத்தில் ஏராளமான புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மிகவும் முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை, இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
எம்ஜி ஹெக்டர் ஹவாக் பிஹெச்இவி (MG Hector Hawk PHEV): இந்திய சந்தையில் தனது முதல் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனத்தை (Plug-in Hybrid Electric Vehicle), எம்ஜி மோட்டார் நிறுவனம் வரும் ஜூலை 16ம் தேதி (நாளை மறுநாள்) அறிமுகம் செய்யவுள்ளது. இது எம்ஜி ஹெக்டர் ஹவாக் என்ற பெயரில் அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், வுல்லிங் ஸ்டார்லைட் 560 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை நாம் தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. அதில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பேட்டரியானது, ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற அம்சங்கள் மூலம் அதுவாகவே சார்ஜ் ஆகி கொள்ளும்.
ஆனால் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரிய பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். எனவே அவற்றை நாம் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வது போன்று தனியாக சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் இவை எலெக்ட்ரிக் மோட் மூலமாக சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் வழங்கும். அதாவது இந்த ரகத்தை சேர்ந்த கார்கள் முழுமையான எலெக்ட்ரிக் காராகவும் செயல்படும். முழுமையான பெட்ரோல் காராகவும் செயல்படும்.
இந்த இரண்டும் கலந்த கலவைதான் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். எம்ஜி ஹெக்டர் ஹவாக் காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 20.5 kWh பேட்டரி ஆகியவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 197 ஹெச்பி மற்றும் 230 என்எம் ஆக இருக்கலாம்.
இதில் வழங்கப்பட்டிருக்கும் 20.5 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலமாக மட்டும் 100 முதல் 125 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர பெட்ரோல் இன்ஜினும் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கும் என உறுதியாக நம்பலாம். இது போன்ற கார்கள் இந்திய சந்தைக்கு புதுவரவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எம்ஜி ஹெக்டர் ஹவாக் காரில் லெவல் 2 அடாஸ், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 12.8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ போன்ற எஸ்யூவி கார்களுக்கு எல்லாம் இது போட்டியாக இருக்கும். எம்ஜி ஹெக்டர் ஹவாக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 18 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எம்ஜி நிறுவனம் ஹெக்டர் ஹவாக் காரின் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் மட்டுமல்லாது, ப்யூர் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனில் 69.2 kWh பேட்டரி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் டிரைவிங் ரேஞ்ச் 530 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Brezza Facelift): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா எஸ்யூவி ரக காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் ஜூலை 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் + சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், லெவல் 2 அடாஸ், ஆம்பியண்ட் லைட்டிங், பெரிய சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டிசைனை பொறுத்தவரையில் ஏராளமான மாற்றங்கள் இடம்பெற போவது உறுதி. குறிப்பாக புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை அனேகமாக 8.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் வருகை டாடா நெக்ஸான், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ஸ்கோடா கைலக், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

கியா சைரோஸ் இவி (Kia Syros EV): மாருதி சுஸுகி பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் அதே ஜூலை 23ம் தேதிதான் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள கியா சைரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.
கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் 42 kWh மற்றும் 49 kWh என 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் டிரைவிங் ரேஞ்ச முறையே 450 மற்றும் 500 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்படவுள்ளன.
அத்துடன் தலா 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பனரோமிக் சன்ரூஃப், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் எதிர்பார்க்கலாம்.
கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13-14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி, எம்ஜி விண்ட்சர் இவி மற்றும் மாருதி சுஸுகி இ விட்டாரா போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் கியா சைரோஸ் இவி போட்டியிடும்.

புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் (New-gen Toyota Hilux): இந்திய சந்தையில் ஆஃப்-ரோடு சாகச பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஒரு பிக்-அப் டிரக்தான் டொயோட்டா ஹிலக்ஸ். இதன் புதிய தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதில், 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டிசைனில் பல்வேறு அப்டேட்களையும், ஏராளமான புதிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 30-33 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இசூஸு வி-க்ராஸ் (Isuzu V-Cross) பிக்-அப் டிரக்கிற்கு, இதன் வருகை நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நடப்பு ஜூலை மாதம் பல்வேறு புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு வரவுள்ளதால் கார் காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்தியாவில் கூடிய விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. எனவே இனி வரும் மாதங்களில் இன்னும் ஏராளமான புதிய கார்களின் அறிமுகத்தை நாம் பார்க்க போகிறோம் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications
