ரூ.10 லட்சத்திற்குள் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற சிறந்த SUV கார்கள்!
புதிய கார் வாங்கும்போது விலை, மைலேஜ், வசதிகள் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் பயன்படுத்தும் SUV கார்களில் விபத்து நேரத்தில் பயணிகளை எந்த அளவுக்கு பாதுகாக்கிறது என்பது முக்கியமான முடிவெடுக்கும் காரணியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் Bharat NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்ற SUV கார்களில், ரூ.10 லட்சத்திற்குள் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட குறிப்பிட்ட வேரியண்ட்களை தேர்வு செய்துள்ளோம். இங்கு ரூ.10 லட்சம் என்பது சென்னை எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு காரிலும் அந்த பாதுகாப்பு மதிப்பீடு பொருந்தும் வேரியண்ட்டையே கணக்கில் எடுத்துள்ளோம்.

டாடா பன்ச்
டாடா பஞ்ச் Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 30.58க்கு 30.58 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு Smart உள்ளிட்ட குறிப்பிட்ட பெட்ரோல் மற்றும் CNG வேரியண்ட்டுகளுக்கு பொருந்துகிறது.
சென்னையில் 5 ஸ்டார் மதிப்பீடு பொருந்தும் Smart 1.2 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.75 லட்சமாக உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் CNG தேர்வுகளில் கிடைக்கிறது. இதில் 6 ஏர்பேக்குகள், அவசர காலங்களில் பிரேக் பிடிக்கும்போது கட்டுப்பாட்டை இழப்பை தவிர்ப்பதற்கான ஏபிஎஸ் மற்றும் இபிடி தொழில்நுட்பம், கார் நிலைத்தன்மையுடன் செல்வதற்கு உதவும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

ஸ்கோடா கைலாக்
ஸ்கோடா கைக்லாக் Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.88 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. முக்கியமாக Classic வேரியண்ட்டும் இந்த மதிப்பீடு பொருந்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் கைலாக் Classic 1.0 TSI பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.59 லட்சமாக உள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 114 எச்பி ஆற்றலை வழங்குகிறது. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி நுட்பத்துடன் தரைப்பிடிப்புடன் செல்வதற்கான டிராக்ஷன் கண்ட்ரோல், கார் ஒருவேளை ஏதாவது விபத்தில் சிக்கி மோதியதை உணர்ந்தால், ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழக்கும் பட்சத்தில், காரின் வேகத்தை குறைத்து தானியங்கி பிரேக்கிங் சிஸ்டத்தை செயலாக்கும் மல்டி கொலிஷன் பிரேக், மலைச்சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா XUV 3XO
மஹிந்திரா XUV 3XO Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 29.36 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 43 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. தற்போதைய மதிப்பீடு பொருந்தும் பட்டியலில் MX1 பெட்ரோல் மேனுவல் உள்ளிட்ட பல வேரியண்ட்டுகள் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் MX1 1.2 டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.7.79 லட்சமாக உள்ளது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பாதசாரிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

புதிய ஹூண்டாய் வென்யூ
புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 31.15 மதிப்பெண்களும், சிறார்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 44.46 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக HX2 பெட்ரோல் வேரியண்ட்டும் இந்த மதிப்பீடு பொருந்தும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் HX2 1.2 பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி ஆகியவற்றுடன் வாகன நிலைத்தன்மை மேலாண்மை, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3 புள்ளி சீட் பெல்ட் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

டாடா நெக்ஸான்
டாடா நெக்ஸான் Bharat NCAP சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 29.41 மதிப்பெண்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 43.83 மதிப்பெண்களும் பெற்று 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. தற்போதைய மதிப்பீடு பொருந்தும் பட்டியலில் Smart பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டும் இடம்பெற்றுள்ளது.
சென்னையில் Smart 1.2 டர்போ பெட்ரோல் மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.40 லட்சம். 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் CNG தேர்வுகள் உள்ளன. மேலும், 6 ஏர்பேக்குகள், ESC, ISOFIX போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடன் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளும் நெக்ஸானின் பலமாக உள்ளன.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா
மாருதி சுசுகி பிரெஸ்ஸா எஸ்யூவியின் இந்த ஆண்டு நடத்தப்பட்ட Bharat NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்ற முக்கிய SUV மாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.41 மதிப்பெண்களும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49க்கு 43 மதிப்பெண்களும் பெற்றுள்ளது. இந்த மதிப்பீடு குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது.
சென்னையில் இந்த மதிப்பீடு பொருந்தும் LXi Turbo மேனுவல் வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7.40 லட்சமாக உள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றுடன் பாதசாரிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

எந்த SUV யாருக்கு சிறந்தது?
குறைந்த பட்ஜெட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு வேண்டும் என்றால் டாடா பன்ச் சிறந்த தேர்வாக உள்ளது. ரூ.5.75 லட்சம் அளவில் தொடங்குவதால் இந்த பட்டியலில் அதிக விலை நன்மையை வழங்குகிறது. காரின் அளவு அடக்கமாக இருப்பதால், நகர போக்குவரத்தில் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.
பிரீமியம் உணர்வுடன் பாதுகாப்பை விரும்புபவர்களுக்கு ஸ்கோடா கைலாக் சிறந்த தேர்வாக இருக்கிறது. அதிக செயல்திறன் மற்றும் இடவசதியை எதிர்பார்ப்பவர்களுக்கு மஹிந்திரா XUV 3XO பொருத்தமாக இருக்கும். புதிய தலைமுறை பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு ஹூண்டாய் வென்யூ வலுவான தேர்வாக உள்ளது.
டாடா நெக்ஸான் விலை, பாதுகாப்பு, எஞ்சின் தேர்வு மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றில் மிகச் சிறந்த தேர்வாக அமைகிறது. அதேநேரத்தில், விற்பனைக்கு பிந்தைய சேவை, பராமரிப்பு குறைவு மற்றும் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் மாருதி பிரெஸ்ஸாவும் சிறந்த மாற்றுத் தேர்வாக தன்னை முன்னிறுத்துகிறது. சில கார் மாடல்களில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பொருந்தாது. நீங்கள் காரை தேர்வு செய்யும்போது டீலரில் உள்ள விற்பனை பணியாளரிடம் இதுகுறித்து தெளிவு பெற்றுவிட்டு புக்கிங் செய்வது சாலச் சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications



