அடுத்த 10 நாட்களில் இந்தியாவில் களமிறங்கும் 6 புதிய கார்கள்... தார் முதல் ட்ரைபர் வரை!

இந்திய கார் சந்தையில் செப்டம்பர் மாதத்தின் கடைசி நாட்கள் பரபரப்பாக இருக்கப் போகின்றன. புதிய கார்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சில மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புதிய வேரியண்ட்டுகளும் சந்தைக்கு வர உள்ளன. பண்டிகை கால விற்பனை தொடங்குவதற்கு முன்பாக இந்த புதிய மாடல்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க உள்ளன.

செப்டம்பர் 21 முதல் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தை கணக்கில் எடுத்தால், மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் முதல் ஸ்கோடாவின் புதிய மாடல்கள், டாடாவின் புதிய செடான் மற்றும் ரெனால்ட் டிரைபர் டர்போ வரை பல கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் சில மாடல்களின் அறிமுக தேதி உறுதியாகிவிட்டது. ஆனால், சில மாடல்களின் அறிமுக தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அதிக வாய்ப்புகள் உள்ளதால் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

Mahindra Thar

1. மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் - செப்டம்பர் 22

இந்த பட்டியலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கார் மஹிந்திரா தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் நாளை மறுதினம் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆஃப்-ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக உள்ள தார் 3 டோர் மாடலுக்கு தற்போது முக்கியமான அப்டேட் கொடுக்கப்பட உள்ளது.

புதிய தாரின் முன்பக்கத்தில் புதிய கிரில், விளக்குகள் மற்றும் பம்பர் உள்ளிட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தார் ராக்ஸ் 5 டோர் மாடலில் உள்ள சில வடிவமைப்பு அம்சங்களும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. கேபினிலும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்படுகிறது. ஆனால் தார் எஸ்யூவியின் ஆஃப்ரோடு அம்சங்களில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுதினம் விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் வெளியாக உள்ளது.

Skoda Slavia Facelift

2. ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் - செப்டம்பர் 25

இந்தியாவின் பிரீமியம் மிட் சைஸ் செடான் பிரிவில் முக்கியமான மாடலாக இருக்கும் ஸ்கோடா ஸ்லாவியா காருக்கு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கிடைக்க உள்ளது. புதிய மாடலில் வெளிப்புற தோற்றம் மட்டுமின்றி, கேபின் மற்றும் தொழில்நுட்ப வசதிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே இந்த கார் இந்திய சந்தையில் விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்டாலும், விலை உள்ளிட்ட சில முக்கிய விபரங்கள் வரும் 25ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

புதிய ஸ்லாவியா காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் முக்கிய அம்சமாக இருக்கும். இதுதவிர பெரிய டச் ஸ்கிரீன், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறுகிறது. ஹூண்டாய் வெர்னா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும் வகையில், ஸ்லாவியாவின் வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஸ்கோடா மேம்படுத்த உள்ளது. ஏற்கனவே இந்த காருக்கு புக்கிங் நடந்து வருகிறது.

New Skoda Superb

3. ஸ்கோடா சூப்பர்ப் - செப்டம்பர் 25

ஸ்கோடா நிறுவனத்தின் விலை உயர்ந்த பிரீமியம் செடான் மாடலான சூப்பர்ப் மீண்டும் இந்திய சந்தைக்கு வர உள்ளது. புதிய தலைமுறை சூப்பர்ப் அதிக இடவசதி, பிரீமியம் கேபின் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லாவியா காரைவிட இது முற்றிலும் உயர்ந்த விலை மற்றும் பிரீமியம் பிரிவில் நிலைநிறுத்தப்படும்.

இந்தியாவில் சூப்பர்ப் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்படும். தற்போதைய தகவல்களின்படி, ரூ.50 லட்சம் என்ற அளவில் விலை இருக்கலாம். இந்தியாவில் பிரீமியம் செடான்களுக்கு வரவேற்பு குறைந்துள்ள நிலையிலும், அதிக இடவசதி மற்றும் சொகுசு வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்ப் ஒரு தனித்துவமான தேர்வாக இருக்கலாம்.

Tata Tigor

4. டாடா ஏரிஸ் - செப்டம்பர் இறுதி

டாடா டியாகோ காருக்கு மாற்றாக ஏரிஸ் என்ற புதிய செடான் மாடலை டாடா கார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. தோற்றத்தில் டிகோர் காரை ஒத்திருந்தாலும், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் சற்றே பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். பட்ஜெட் விலையில் செடான் வாங்க விரும்புபவர்களுக்கு இது முக்கிய தேர்வாகவும் இருக்கலாம்.

புதிய ஏரிஸ் காரில் டாடாவின் சமீபத்திய வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. முன்பக்கம், பின்பக்கம் மற்றும் கேபினில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பெரிய டச் ஸ்கிரீன் உள்ளிட்ட நவீன வசதிகளும் சேர்க்கப்படலாம். இந்த மாத இறுதியில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Renault Triber

5. ரெனோ ட்ரைபர் டர்போ - செப்டம்பர் இறுதி

ரெனால்ட் ட்ரைபர் காரில் இருந்த பெரிய குறை இந்த மாதம் கிடைக்கப்போகும் அப்டேட் மூலமாக நீங்கும் என தெரிகிறது. அதாவது, 7 சீட்டர் எம்பிவி ரக மாடலான ட்ரைபரில் அதிக சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொண்டு வரப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதை அறிமுகப்படுத்த ரெனோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100எச்பி பவரையும் 160என்எம் டார்க்கையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி தேர்வும் வரலாம் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கும். குடும்ப பயன்பாட்டுக்கான 7 சீட்டர் எம்பிவி கார் என்பதால், அதிக பயணிகளுடன் செல்லும்போது கூடுதல் செயல்திறன் கிடைப்பது ட்ரைபருக்கு முக்கியமான மாற்றமாக இருக்கும்.

Porsche Cayenne EV

6. போர்ஷே கேயென் எலெக்ட்ரிக் - செப்டம்பர் 30

இந்த பட்டியலில் மிகவும் பிரீமியம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட மாடலாக போர்ஷே கேயென் எலெக்ட்ரிக் இடம்பெறுகிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இந்த காரின் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காரில் 113kWh பேட்டரி மற்றும் டியூவல் மோட்டார்கள் கொண்டதாகவும், ஆல்-வீல் டிரைவ் அமைப்புடன் வருகிறது.

ஸ்டாண்டர்டு கேயென் எலெக்ட்ரிக் எஸ்யூவியானது 442எச்பி பவரையும் 835என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும். Turbo Electric மாடலானது 1,156எச்பி வரை பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ ரேஞ்ச் தரும் இந்த காரின் விலை ரூ.1.77 கோடியிலிருந்து தொடங்கும்.

Article Published On: Sunday, September 20, 2026, 14:34 [IST]
English summary
6 new cars launching in india next 10 days september 2026
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X