ஜூலை 28ல் இந்தியாவில் வெளியாகிறது புதிய டொயோட்டா எஸ்யூவி
டொயோட்டா நிறுவனமானது மேம்படுத்தப்பட்ட 9ம் தலைமுறை ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியை இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக முன்பே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இந்தப் புதிய காரை எப்போது அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் இந்த ஜூலை மாதம் 28ம் தேதியன்று புதிய ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிடவுள்ளது டொயோட்டா.
உலகம் முழுவதும் வணிகப் பயன்பாடு மட்டுமின்றி தனிநபர் பயன்பாட்டிற்காகவும் வாடிக்கையாளர்கள் பிக்-அப் ட்ரக்குகளை வாங்குவார்கள். அப்படியான ஒன்றாகவே அனைத்து நாடுகளிலும் டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவைத் தவிர. இந்தியாவில் தனிநபர் பயன்பாட்டிற்கு ட்ரக்குகளை வாங்கும் பழக்கம் இல்லை. ஆனால் புதிய டொயோட்டா ஹைலக்ஸைப் பார்த்தால் அப்படி கூற மாட்டீர்கள். நீங்களும் வீட்டிற்கு ஒன்று வாங்கிப் போடலாமா என்று தான் நினைப்பீர்கள்.

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியும் கூட கொஞ்சம் ஒரு சாயலில் வணிகப் பயன்பாட்டிற்கான வாகனம் போலான தோற்றத்தைத் தான் கொண்டிருக்கும். ஆனால் புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் பிக்-அப்பானது முற்றிலும் புதிதான மற்றும் மேம்பட்ட டிசைனைக் கொண்டுள்ளது. இதனை வணிகப் பயன்பாட்டிற்காக டொயோட்டா விற்பனை செய்கிறது என்று கூறினால் நீங்களே கூட நம்ப மாட்டீர்கள். அப்படியான கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், ஃபார்ச்சூனரே பிக்-அப் வடிவில் வந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது 9ம் தலைமுறை டொயோட்டா ஹைலக்ஸ். ஆனால் உண்மையிலேயே ஹைலக்ஸ், ஃபார்ச்சூனர் எல்லாம் ஒரே பிளாட்ஃபார்மில் ரெடியாகும் கார்கள் தானே. எனவே ஃபார்ச்சூனரைப் போல ஹைலக்ஸ் இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

தற்போதைய ஹைலக்ஸ் மாடலில் இருந்து முகப்பப் பக்கத்தை புதிய மாடலில் டொயோட்டா முற்றிலுமாக மாற்றவுள்ளது. அறுங்கோண வடிவ கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் டொயோட்டா லோகோ என அனைத்தையுமே மாற்றி முற்றிலும் புதிய முகத்தை 9ம் தலைமுறை ஹைலக்ஸுக்குக் கொடுக்கவுள்ளது டொயோட்டா. பக்கவாட்டில் புதிய வடிவிலான அலாய் வீல்களுடன், பின்பக்கமும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்யவுள்ளது அந்நிறுவனம்.
காரின் உட்புறம் மிகவும் மாடர்னாக இருக்கும். பிக்-அப் ட்ரக்கில் உட்கார்ந்திருக்கிறோம் என்ற எண்ணமே உங்களுக்கு எழாது. இரண்டு 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், புதிய வடிவிலான ஸ்டீயரிங் வீல், மறுவடிவமைக்கப்பட்ட சென்டர் கண்சோல் ஆகியவை மாற்றப்படுவதுடன், 360 டிகிரி கேமரா, ADAS பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வென்டிலேட் செய்யப்பட்ட பவர்டு முன்பக்க சீட்கள் ஆகிய புதிய வசதிகளையும் புதிய காரில் கொடுக்கவுள்ளது.
மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 2.8 லிட்டர் டீசல் இன்ஜினே புதிய ஹைலக்ஸ் பிக்-அப் எஸ்யூவியிலும் இருக்கும். 204 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனை இந்த இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
புதிய மாற்றமாக ஃபார்ச்சூனர் நியோ வேரியன்ட்களில் கொடுக்கப்பட்டு வரும் 48V மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸில் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது விற்பனை செய்யப்படுவதை விட சற்று கூடுதலான விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய பிக்-அப் எஸ்யூவி வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது இதனை 28.52 லட்சம் ரூபாய் முதல் 36 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னோவாவிற்குப் பிறகு அதிகம் விற்பனை செய்யப்படும் டொயோட்டாவின் ப்ரீமியமான காராக ஃபார்ச்சூனர் இருக்கிறது. ஆனால் ஹைலக்ஸ் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஒவ்வொரு மாதமும் 500 யூனிட்டுகளுக்கும் குறைவாகவே இந்த பிக்-அப் எஸ்யூவி இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்தப் புதிய அப்டேட்ட ஹைலக்ஸின் விற்பனையை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications