தனி குடும்பமா பயணிப்பதற்கு மிகவும் கச்சிதமாக இருக்கும்.. மிடில்-கிளாஸ் மக்களுக்காகவே உருவாக்கப்படும் 7 கார்கள்
எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. இது இந்தியாவில் மட்டுமில்ல, உலகளவிலும் இதே நிலைமை தான். இதனாலேயே பெரும்பாலான கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரையில், விலை குறைவான கார்களுக்கே இங்கு சிறப்பான மார்க்கெட் உள்ளதால் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட பல விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டாடா டியாகோ இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Tiago EV Facelift): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் மார்க்கெட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் காராக டியாகோ இவி விளங்குகிறது. இந்த டியாகோ இவி காரை ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்து டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த கார் ஏற்கனவே சிலமுறை சோதனை ஓட்டங்களின் போதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வின்ஃபாஸ்ட் விஎஃப்3 (VinFast VF3): வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் அடுத்ததாக இந்தியாவில் அறிமுகம் செய்ய பல புதிய எலெக்ட்ரிக் கார்களை தயார் நிலையில் வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று, விஎஃப்3 ஆகும். இது அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக விளங்கவுள்ளது. எஸ்யூவி போன்றதான தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த காருக்கு விற்பனையில் போட்டியளிக்கும் வகையில் ஏற்கனவே எம்ஜி கோமெட் இவி மற்றும் மேலே கூறப்பட்ட டியாகோ இவி எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன.
வின்ஃபாஸ்ட் விஎஃப்5 (VinFast VF5): தற்சமயம் விற்பனையில் இருக்கும் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்களை காட்டிலும் அளவில் சிறியதாக, அதேநேரம் விஎஃப்3 காரை காட்டிலும் அளவில் பெரியதாக விளங்கும் இதில், விஎஃப்3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் அதே 29.6kWh மற்றும் 37.2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் இசி3 (Citroen eC3): சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளது. இருப்பினும், இந்த காரின் புதிய எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டை குறைவான விலையில் அறிமுகம் செய்ய சிட்ரோன் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய வேரியண்ட் ஆனது லைவ் (Live) என அழைக்கப்படலாம்.
10 இலட்சத்திற்குள் எம்ஜி எலெக்ட்ரிக் கார்: இந்தியாவில் புது, புது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம் 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த 2025ஆம் ஆண்டிலேயே அறிவித்து இருந்தது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை காட்டிலும் விலைமிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இது விற்பனையில் டாடா டியாகோ இவி மற்றும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
பி.ஒய்.டி டால்பின் (BYD Dolphin): சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று, டால்பின் ஆகும். உயரமான ஹேட்ச்பேக் (Hatchback) வகையை சேர்ந்த காரான இது, ஷார்ப்பான டிசைனில், நேர்த்தியான வடிவிலான ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. 32kWh மற்றும் 45kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் டால்பின் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூண்டாயின் புதிய எலெக்ட்ரிக் கார்: கொரியன் கார் நிறுவனமான ஹூண்டாயும் டாடாவின் நெக்ஸான் இவி மற்றும் பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்த காரின் சோதனை ஓட்டங்கள் சமீபத்தில் கூட நடத்தப்பட்டு இருந்தன. விலை குறைவானதாக இருப்பினும், ஹூண்டாய் கார் என்பதால் சீட் வெண்டிலேஷன், அடாஸ் (ADAS), பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களில் இருந்து விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள் வரும் என்பதை நாம் முன்கூட்டியே ஓரளவிற்கு யூகித்து இருந்தோம். இருப்பினும், இந்திய மார்க்கெட்டிற்கு புதியதான வின்ஃபாஸ்ட் அடுத்தடுத்து விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது நாம் எதிர்பார்க்காத ஒன்றே. இதன் மூலமாக, வின்ஃபாஸ்ட் இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் வலுவாக இடத்தை பிடிக்க தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








