லண்டன் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 3வது இடமா, 38வது இடமா? குழப்பத்திற்கான விடை இதோ!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட் மோட்டார் பந்தய களத்தில் நடைபெற்ற 2026ம் ஆண்டுக்கான மிச்செலின் லி மான்ஸ் கோப்பைக்கான கார் பந்தயத்தில் தமிழகத்தை சேர்ந்த நடிகரும், ரேஸருமான அஜித்குமார் நேற்று பங்கேற்றார். அஜித் குமார் பங்கேற்பாலும் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பந்தயத்தைத் தொடங்கி வைத்ததாலும் இந்தியாவில் அதிக கவனம் பெற்றது.
இந்த நிலையில், அஜித்குமார் அணி எந்த இடத்தை பிடித்தது என்ற குழப்பம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கின்றது. அந்த குழப்பத்திற்கு இந்த செய்தியில் விடை காணும் வகையில் சற்று விரிவாக பார்க்கலாம். 2026 மிச்செலின் லி மான்ஸ் கோப்பை கார் பந்தய தொடரில் மொத்தம் ஆறு சுற்றுகள் இடம்பெறுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 11ந் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள பந்தய களத்தில் முதல் சுற்று நடந்தது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது, மூன்றாவது சுற்றுகளும், பெல்ஜியத்தில் நான்காவது சுற்றும், இங்கிலாந்தில் உள்ள சில்வர்ஸ்டோனில் ஐந்தாவது சுற்றும் நடந்தன. கடைசி மற்றும் ஆறாவது சுற்று பந்தயம் போர்ச்சுகல் நாட்டில் வரும் அக்டோபர் 10ந் தேதி நடக்க இருக்கிறது.
மேலும், இந்த பந்தயத தொடரானது மூன்று வகை கார்களை கொண்டதாக நடத்தப்படுகிறது. நடப்பு 2026ம் ஆண்டுக்கான சீசனில் LMP3, LMP3 Pro/Am, GT3 என 3 வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி முடிவுகளும், போடியத்தில் வீரர்களுக்கு கவுரவமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று நடந்த ஐந்தாவது சுற்று சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்தது.
சீசன் முழுவதற்கும் 44 கார்கள் கொண்ட இந்த போட்டியில் 24 எண்ணிக்கையில் LMP3 வகை கார்களும், 11 எண்ணிக்கையில் LMP3 Pro/Am வகை கார்களும் மற்றும் 10 எண்ணிக்கையில் GT3 கார்களும் இடம்பெற்றுள்ளன.
இதில், அஜித் குமார் பங்கேற்ற LMP3 Pro/Am வகுப்பு என்பது LMP3 கார்களையே பயன்படுத்தினாலும், அணியில் குறைந்தது ஒரு Bronze-rated ஓட்டுநர் இடம்பெற வேண்டிய தனிப்பட்ட வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித் குமார் Bronze தர வரிசையிலான பந்தய வீரர். எனவேதான், அஜித் குமார் மற்றும் பிரெஞ்சு ஓட்டுநர் ரோமைன் வோஸ்னியாக் இணைந்து LMP3 Pro/Am என்ற பிரிவில் பங்கேற்றனர்.வகுப்பில்தான் பங்கேற்றது.
இதில், நடிகர் அஜித்குமாரின் Ajith RedAnt by Virage அணியானது 16ம் எண் கொண்ட விராஜ் லிஜியர் ஜேஎஸ் பி325 என்ற காருடன் பங்கேற்றது. இந்த கார் LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்றது. சில்வர்ஸ்டோன் பந்தயத்திற்கு முன்பாகவும் அஜித்தின் அணி LMP3 Pro/Am வகுப்பில் ஏற்கனவே போட்டியிட்டு வந்தது.
இந்த சீசனில் சில்வர்ஸ்டோன் சுற்றுக்கு முன்பு அஜித்-வோஸ்னியாக் இணை சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்தது. இருந்தாலும், சில்வர்ஸ்டோன் பந்தயம் அவர்களுக்கு தங்களை மீண்டும் நிரூபிக்க ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்தது. அதிகாரப்பூர்வ சில்வர்ஸ்டோன் பந்தயத்திற்கான நுழைவு பட்டியலில் அஜித் மற்றும் வோஸ்னியாக் நம்பர் 16 காரில் LMP3 Pro/Am பிரிவில் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பந்தயம் தொடங்கியபோது அஜித்தின் கார் சிறப்பாக முன்னேறியது. தகுதிச்சுற்றில் நல்ல நிலையைப் பெற்ற அணி, பிரதான பந்தயத்தின் ஒரு கட்டத்தில் மூன்றாவது இடம் வரை முன்னேறியது. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக அவர்களின் முன்னேற்றத்தை பாதித்தது.
காரை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்து தொடர்ந்து ஓட்டிய அணி, இறுதியாக 48 சுற்றுகளை நிறைவு செய்து 2 மணி நேரம் 3 நிமிடம் 44.552 விநாடிகளில் பந்தயத்தை முடித்தது. அதிகாரப்பூர்வ முடிவின்படி, அனைத்து வகை கார்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்தப் பிரிவில் நம்பர் 16 Ajith RedAnt by Virage கார் போட்டியில் பங்கேற்ற 44 கார்களில் 38வது இடத்தில் நிறைவு செய்தது.
அதாவது, நேற்று நடந்த சில்வர்ஸ்டோன் சுற்றுப் பந்தயத்தில், LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய மூன்று வகுப்புகளிலும் பங்கேற்ற 44 கார்களை ஒருங்கிணைத்து வழங்கப்பட்ட இறுதி தரவரிசையில் அஜித்தின் கார் 38வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்ற 11 கார்களில் அஜித் குமார் கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் அஜித்குமார் Ajith RedAnt Racing அணியின் 36ம் நம்பர் கொண்ட மற்றொரு காரில் பங்கேற்ற அணியினர் 44வது இடத்தை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டுக்கான மிச்செலின் லி மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தில் இன்னும் ஒரு சுற்று பாக்கி உள்ளது. அதில்,சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பெற்ற அனுபவத்தை வைத்து மீண்டு, இறுதிச்சுற்றில் சிறப்பான முடிவை அஜித் குமார் பதிவு செய்வாரா என்பதே அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
நடிகர் அஜித் குமார் பங்கேற்ற இந்த கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார். அஜித்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பந்தயத்தின்போது ஆதரவும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் பங்கேற்று பந்தயத்தை நேரில் கண்டு களித்தார். இதனால், இந்த நிகழ்வு மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மட்டுமின்றி, இந்திய சினிமா உலகினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
This article has been updated with typo correction on total number of cars participated in the Silverstone race.


Click it and Unblock the Notifications


