இந்தியர்களுக்கு ஜாக்பாட்... அஸ்டன் மார்ட்டின் கார்கள் விலை ரூ.4 கோடி வரை குறைப்பு... காரணம் இதுதான்!!
சொகுசு கார் வாங்க விரும்புவோருக்கு பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் (Aston Martin) நிறுவனம் தனது கார்களின் விலையை இந்தியாவில் கோடிக்கணக்கில் அதிரடியாகக் குறைத்துள்ளது. அதிகபட்சமாக ரூ.4.02 கோடி வரை விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த கார்களை வாங்க திட்டமிட்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தியாக அமைந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பலனாக இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் 7 கார் மாடல்களின் விலையும் அதிரடியாக கோடிக்கணக்கில் குறைக்கப்பட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டின் மட்டுமின்றி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அனைத்து வாகன தயாரிப்பாளர்களின் வாகனங்களும் இந்தியாவில் விலை குறைவாக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகபட்ச விலைக் குறைப்பு
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் உயர்வகை சொகுசு காரான வான்கிஷ் (Vanquish) மாடலின் விலை மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் கூபே (Coupe) மாடல் இதுவரை ரூ.10.11 கோடி என்ற விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.6.40 கோடியாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரூ.3.71 கோடி சேமிக்கலாம்.
வான்கிஷ் வோலான்டே (Vanquish Volante) மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.4.02 கோடி விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.10.92 கோடியாக இருந்த இந்த காரின் விலை தற்போது ரூ.6.90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறந்த கூரையுடன் பயணிக்கும் வசதியை வழங்கும் இந்த மாடல், அந்நிறுவனத்தின் அதிக விலை குறைப்பை பெற்ற காராக மாறியுள்ளது.
DB12 S மாடல்களின் விலையும் குறைந்தது
அஸ்டன் மார்ட்டின் DB12 S வரிசையிலும் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. DB12 S கூபே மாடலின் விலை ரூ.6.62 கோடியிலிருந்து ரூ.4.10 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2.52 கோடி சேமிப்பு கிடைக்கிறது. DB12 S வோலான்டே மாடலின் விலை ரூ.7 கோடியிலிருந்து ரூ.4.35 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.
வாண்டேஜ் S, DBX S கார்களுக்கும் புதிய விலை
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் செயல்திறன் மிக்க கார்களின் வரிசையில் ஆரம்ப விலை மாடலாகக் கருதப்படும் வாண்டேஜ் S (Vantage S) கூபே காரின் விலை ரூ.4.99 கோடியிலிருந்து ரூ.3.15 கோடியாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ரோட்ஸ்டர் மாடல் ரூ.5.26 கோடியிலிருந்து ரூ.3.35 கோடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.
அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் சொகுசு எஸ்யூவியான DBX S மாடலுக்கும் ரூ.2.65 கோடி விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.6.80 கோடியாக இருந்த இந்த காரின் விலை தற்போது ரூ.4.15 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சொகுசு எஸ்யூவி விரும்பிகளுக்கும் புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
சொகுசு கார் வாங்குவோருக்கு ஜாக்பாட்
இந்தியா - இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கத்தால் ஜாகுவார் லேண்ட் ரோவர், மெக்லாரன் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏற்கெனவே விலைகளைக் குறைத்துள்ளன. தற்போது அஸ்டன் மார்ட்டின் நிறுவனமும் இணைந்துள்ளது. இதனால் சொகுசு கார் சந்தையில் போட்டி அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு புதிய தேர்வுகளும் கிடைத்துள்ளன. மேலும், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனங்களின் வாகனங்கள் இந்தியாவில் குறைவான விலையில் கிடைப்பதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications


