ஆடியின் மார்க்கெட்டையே மொத்தமா தலைக்கீழ் திருப்பி போட போகும் எலக்ட்ரிக் கார்! 30-40 லட்சத்தில் வந்தா வேற லெவல்
ஆடி (Audi) நிறுவனம் சர்வதேச சந்தையில் புதியதாக அளவில் சிறியதான எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்து ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி வெளியிட்டுள்ள டீசரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் வெறும் ரூ.19 லட்சத்தில் ஆடி கார் ஒன்று விற்பனைக்கு வர போவதாக கடந்த பல வருடங்களாகவே ஒரு பேச்சு உள்ளது. கடந்த சில வருடங்களாக அது கொஞ்சம் குறைந்துள்ளது என்றாலும். 2018, 2019 சமயங்களில் ஆடி ஏ1 (A1) என்கிற பெயரில் இப்படியொரு விலை குறைவான ஆடி கார் வர போவதாக எதிர்பார்த்தோம்.

ஆனால் இதுவரை அது நடக்கவில்லை, இந்தியாவில் ஆடி நிறுவனம் பெரிய அளவிலான கார்களிலும், எலெக்ட்ரிக் கார்களிலும் தான் அதிகமாக கவனம் செலுத்துவதால் இனியும் நடப்பதற்கு வாய்ப்பில்லை போல தான் தெரிகிறது. ஆனால் கவலை வேண்டாம், வெளிநாட்டு சந்தைகளில் ஆடி ஏ1 காருக்கு மாற்றாக ஏ2 இ-ட்ரான் (A2 e-Tron) என்கிற அளவில் சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய ஆடி தயாராகி வருகிறது.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு ஏ2 பெயர்பலகையை ஆடி மீண்டும் பயன்படுத்த உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியா உள்பட சர்வதேச அளவில் இது ஆடியின் விலை குறைவான காராக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் 2022 வரையில் விற்பனையில் இருந்த க்யூ2 (Q2) எஸ்யூவி காருக்கும் மாற்றாக இது கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இருந்தும் ஆடி க்யூ2 காரின் விற்பனை நிறுத்தப்படுகிறது. ஃபோக்ஸ்வேகனின் புதிய எலெக்ட்ரிக் காரான ஐடி.3 (ID.3) உருவாக்க பயன்படுத்தப்படும் ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்இபி (MEB) பிளாட்ஃபாரத்தின் அடிப்படையிலானதாக இந்த புதிய ஆடி ஏ2 இ-ட்ரான் இருக்கும். ஜெர்மனியில் தயாரிக்கப்பட உள்ள புதிய ஆடி ஏ2 இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் பழைய ஏ2 காரை அடிப்படையில் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, எடை குறைவான கட்டமைப்பு, ஏரோடைனமிக் ஸ்டைல் உள்ளிட்டவை காரின் சிறந்த செயல்படுதிறனுக்காகவும், டிரைவிங் ரேஞ்ச்காகவும் வழங்கப்படும். அளவில் சிறியதான எலெக்ட்ரிக் காராக இருப்பினும், இதன் உட்புறத்தில் போதுமான கேபின் இடவசதி மற்றும் பயணிகளுக்கு சௌகரியமான இருக்கை உள்ளிட்டவற்றை ஆடி நிச்சயமாக வழங்கும்.
அதேபோல், மற்ற ஆடி கார்களில் உள்ள டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் மற்ற கனெக்டட் வசதிகள் புதிய ஏ2 இ-ட்ரான் காரிலும் இடம்பெறலாம். சர்வதேச சந்தைகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு, 2027இல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஆடி ஏ2 இ-ட்ரான், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் 2- 3 வருடங்களாகிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆடி நிறுவனம் விலை குறைவான காரை அறிமுகம் செய்வதற்கு, அதுவும் ரூ.20 லட்சம் அளவில் அறிமுகம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் ஆடி தீவிரமாக உள்ளது. ஆதலால், புதிய ஏ2 இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், ரூ.20- 30 லட்சத்தில் இதன் விலையை எதிர்பார்க்க முடியாது.
படங்கள் மாற்றப்பட்டன.


Click it and Unblock the Notifications








