ஆகஸ்ட் கார் விற்பனை: யாரும் தொட முடியாத உயரத்தில் மாருதி... டாடா, மஹிந்திரா இடையே போட்டா போட்டி!
இந்தியாவின் கார் சந்தை கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டின் முக்கிய கார் நிறுவனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, மொத்தம் 4,41,576 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,27,719 கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 34.7 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மாருதி சுஸுகி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் பிற நிறுவனங்களைவிட வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட்டில் மாருதி நிறுவனம் 1,76,971 கார்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்கு 40.1 சதவீதமாக உள்ளது.

அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு 10 கார்களில் சுமார் 4 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கார் சந்தையில் மாருதியின் ஆதிக்கம் தொடர்ந்து வலுவாக இருப்பதை இது காட்டுகிறது. அடுத்து இரண்டாவது இடத்தில், டாடா மோட்டார்ஸ் 65,253 கார்களை விற்பனை செய்து 14.8 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது.
குறிப்பாக சிறிய ரக பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் மின்சார கார்கள் பிரிவில் டாடாவுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் 59,257 கார்களை விற்பனை செய்து 13.4 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது. ஸ்கார்பியோ, தார் உள்ளிட்ட மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி ரக வாகனங்களுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் 54,396 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் சந்தைப் பங்கு 12.3 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டை விட 23.6 சதவீத வளர்ச்சியை ஹூண்டாய் பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் பதிவு செய்துள்ள அதிகபட்ச மாதாந்திர விற்பனையாக இது அமைந்துள்ளது. எனினும், டாடா, மஹிந்திராவின் அசுர வேக வளர்ச்சியால் ஹூண்டாய் தனது இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு அனைத்து வகைகளிலும் பிரயேத்னங்களை மேற்கொண்டு வருகிறது.
கியா மோட்டார் இந்தியா நிறுவனம் 29,042 கார்களை விற்பனை செய்து 6.6 சதவீத சந்தைப் பங்கை பெற்றுள்ளது. டொயோட்டா நிறுவனம் 28,410 கார்களுடன் 6.4 சதவீத பங்கை பெற்றுள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையிலான விற்பனை வித்தியாசம் வெறும் 632 கார்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்த சந்தையை பார்க்கும்போது, முதல் நான்கு இடங்களில் உள்ள மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நான்கு நிறுவனங்களும் சேர்ந்து சுமார் 80 சதவீத சந்தையை தங்கள் வசம் வைத்துள்ளன.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவின் வளர்ச்சியாகும். இந்திய கார் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 34.7 சதவீதமாக இருந்த நிலையில், டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் முறையே 59.1 சதவீதம் மற்றும் 50.4 சதவீதம் வளர்ந்துள்ளன.
இதற்கு எஸ்யூவி மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்களுக்கான அதிகரித்து வரும் வரவேற்பும், புதிய கார் அறிமுகங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் வளர்ச்சியும் முக்கிய காரணங்களாக உள்ளன.
பண்டிகைக் கால விற்பனை தொடங்கியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்த நிறுவனங்களின் சந்தைப் பங்கில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவின் வேகமான வளர்ச்சி, நீண்ட காலமாக முதலிடத்தில் இருக்கும் மாருதி சுஸுகிக்கு எதிரான போட்டியை மேலும் அதிகரிக்கலாம்.


Click it and Unblock the Notifications


