ஆகஸ்ட்டில் இந்தியாவில் வாகன விற்பனை புதிய உச்சம்... 24.23 லட்சம் வாகனங்கள் பதிவு!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தை விற்பனையில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 24,23,201 வாகனங்கள் சில்லறை விற்பனை முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 17.51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத விற்பனை 6.48 சதவீதம் குறைந்துள்ளது.
இந்திய வாகன சந்தையின் விற்பனை வளர்ச்சி இந்த அளவுக்கு அதிகரித்தற்கு இருசக்கர வாகனங்கள் சில்லறை விற்பனை முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் 17.14 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், 19.69 சதவீத வளர்ச்சியாகும். கார்கள் விற்பனையும் 16.14 சதவீதம் உயர்ந்து 4,02,398 யூனிட்டுகளை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை முதல் முறையாக 4 லட்சம் யூனிட்டுகள் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

மாற்று எரிபொருள் வாகனங்கள் அதிக வளர்ச்சி
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிக முக்கிய மாற்றமாக சிஎன்ஜி, ஹைப்ரிட், எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளடக்கிய மாற்று எரிபொருள் கார்கள் விற்பனை 41.95 சதவீதமாக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதே காலகட்டத்தில் பெட்ரோல்/எத்தனால் எரிபொருள் வகை வாகனங்களின் பங்கு 40.85 சதவீதமாக இருந்தது. முதல்முறையாக பெட்ரோல் கார்களின் விற்பனையை மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனை முந்தி உள்ளது. தனிப்பட்ட எரிபொருள் வகையாக பார்க்கும்போது பெட்ரோல் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனையில் கலக்கும் சிஎன்ஜி வாகனங்கள்
இதில் சிஎன்ஜி எரிபொருள் கார்களின் விற்பனை 25.28 சதவீத பங்குடன் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன. ஹைபிரிட் வாகனங்கள் 9.04 சதவீதமும், எலெக்ட்ரிக் கார்கள் 7.63 சதவீதமும் பங்களித்துள்ளன. அதிகரித்து வரும் எரிபொருள் செலவு, E20 தொடர்பான வாகன உரிமையாளர்களின் கவலைகள் மற்றும் புதிய மாற்று எரிபொருள் மாடல்களின் வரவு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

வலுவான கிராமப்புற சந்தை
ஆகஸ்ட் மாதத்தில் நகர்ப்புறத்தை விட கிராமப்புற சந்தையில் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த கிராமப்புற சில்லறை விற்பனை வளர்ச்சி 19.79 சதவீதமாக இருந்த நிலையில், நகர்ப்புற சந்தை 15.17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக பயணிகள் வாகனப் பிரிவில் கிராமப்புற வளர்ச்சி 24.99 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. நகர்ப்புற வளர்ச்சி 10.93 சதவீதமாக இருந்த நிலையில், இந்த வித்தியாசம் இந்திய ஆட்டோ சந்தையில் கிராமப்புற நுகர்வோரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
EV விற்பனையும் சாதனை
மின்சார வாகனங்களின் விற்பனையும் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து பிரிவுகளையும் சேர்த்து சுமார் 2.98 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 52.9 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு மட்டும் 10.68 சதவீதத்தை எட்டியுள்ளது.
வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான பண்டிகை காலம் பொதுவாக விற்பனை சிறப்பாக இருக்கும். மேலும், அடுத்த 35 முதல் 40 நாட்களுக்கு டீலர்களில் போதுமான வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக FADA அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகரிக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Source: FADA


Click it and Unblock the Notifications


