வாங்காதீங்க... பேஸ் வேரியண்ட் கார் வாங்காதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!

பண்டிகை காலத்தில் புதிதாக கார் வாங்குவதற்கு பலர் புக்கிங் செய்து டெலிலிரி எடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் பலர் புக்கிங் செய்வதற்கான திட்டத்துடன் ஷோரூம் விசிட் செய்து வரும் இந்த சூழலில், எந்த காரை தேர்வு செய்தாலும், அதன் வேரியண்ட்டை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

பட்ஜெட் என்று வரும்போது பாதியளவு வாடிக்கையாளர்கள் ஆரம்ப நிலை மாடலை (Base Variant) தேர்வு செய்யும் திட்டத்தில் இருக்கின்றனர். கார் வாங்குவதற்கான ஆரம்ப செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுப்பதில் தவறில்லை. ஆனால், ஒரு காரை வாங்கும்போது அதன் விலையை மட்டும் பார்த்தால் போதுமா? அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகள் அந்தக் காரை எந்த அளவுக்குத் திருப்தியாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் யோசிக்க வேண்டாமா? அத்துடன் மறுவிற்பனை என்று வரும்போதும் அது எந்த அளவுக்கு சில விஷயங்களை நமக்கு அளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Toyota Glanza Facelift

பொதுவாக அதிகபட்ச வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டை தேர்வு செய்வதற்கே நாம் பெரும்பாலும் பரிந்துரைப்போம். அதேநேரத்தில், பட்ஜெட் பிரச்னை உள்ளவர்கள் பேஸ் வேரியண்ட் வாங்குவதற்கு பதிலாக மிட் வேரியண்ட் தேர்வு செய்வது அதிக பலன் தரும். பேஸ் வேரியண்ட் வாங்குவதால் ஏற்படும் சில பிரச்னைகளையும், ஏன் மிட் வேரியண்ட் அல்லது டாப் வேரியண்ட் தேர்வு செய்வது நலம் தரும் என்பதற்கான விஷயங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

Also Read

பேஸ் வேரியண்ட் வசதிகள்

கார்களின் பேஸ் வேரியண்ட்டில் பொதுவாக அத்தியாவசியமான வசதிகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். சில மாடல்களில் பின்பக்க பவர் விண்டோஸ், ரியர் வைப்பர், பின்பக்க ஏசி வென்ட்டுகள், ரியர் கேமரா, தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் இருக்காது. ஆனால், இந்த வசதிகள் அனைத்தும் எல்லா கார்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில அடிப்படை மாடல்களிலேயே முக்கியமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.

Mahindra 3XO

கார் வாங்கும்போது விலையைக் குறைப்பதற்காக இவற்றைத் தவிர்த்துவிடலாம் என்று நினைப்போம். ஆனால், சில மாதங்கள் காரைப் பயன்படுத்திய பிறகு குடும்பத்தினரின் தேவைகளும், நமது எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கலாம். குறிப்பாக, தினமும் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், வயதான பெற்றோரை அழைத்துச் செல்பவர்கள், நெரிசலான நகரச் சாலைகளில் கார் ஓட்டுபவர்கள் சில வசதிகளின் அவசியத்தை உணரத் தொடங்குவார்கள்.

அப்போது என்ன செய்வது? ஏற்கெனவே வாங்கிய காரில் அந்த வசதிகளைச் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேஸ் வேரியண்ட் காரை வாங்கிய பிறகு பவர் விண்டோஸ், மியூசிக் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, சென்ட்ரல் லாக்கிங் போன்ற வசதிகளை டீலரைவிட்டு வெளியில் உள்ள கடைகளில் பொருத்த முடியும். டீலரைவிட விலையும் குறைவாக இருக்கும். அதேநேரத்தில், இதற்காக கூடுதல் வயரிங், கதவுகளின் உள்பகுதிகளைப் பிரித்துப் பொருத்துதல் மற்றும் காரின் மின்னணு அமைப்புகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

Also Read

காரில் பவர் விண்டோஸ் பொருத்துவதற்காக கதவின் உள்பகுதியைத் திறந்து வேலை செய்யும்போது, தரமற்ற பொருட்கள் அல்லது முறையற்ற பொருத்துதல் பயன்படுத்தப்பட்டால் 3 மாதங்களில் கதவுகளிலிருந்து சப்தம், அதிர்வு, தளர்வான பாகங்களின் ஓசை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயரிங் முறையாகச் செய்யப்படவில்லை என்றால் மின் இணைப்பில் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு முறை சர்வீஸ் சென்டர் செல்லும்போது இதனை சரிசெய்யும் நிலை உண்டாகும். நீங்கள் டீலரிலேயை இந்த வசதிகளை சேர்த்தாலும் இந்த பிரச்னை வரும்.

Renault Duster Hybrid

வெளியில் உள்ள கார் ஆக்சஸெரீ கடைகளில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள், தரமான உதிரிபாகங்கள் மற்றும் முறையான பொருத்துதல் மூலம் பல வசதிகளைச் சிறப்பாகச் சேர்க்கும் வாய்ப்பு இருந்தாலும், தொழிற்சாலையிலேயே ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளுக்கும், பின்னர் வெளியே பொருத்தப்படும் வசதிகளுக்கும் இடையே தரம் மற்றும் ஒருங்கிணைப்பில் பல குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

புதிதாக வாங்கிய கார் அமைதியாகவும் மென்மையாகவும் இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு கதவுகளில் அதிர்வு, டேஷ்போர்டில் சப்தம் அல்லது மின் சாதனங்களில் கோளாறு ஏற்பட்டால் அது நிச்சயமாக எரிச்சலை ஏற்படுத்தும்.
அதனால்தான், ஆரம்பத்திலேயே நமக்குத் தேவையான வசதிகள் கொண்ட வேரியண்ட்டைத் தேர்வு செய்வது ஒரு நல்ல முடிவாக இருக்கலாம். குறிப்பாக, பல ஆண்டுகள் அதே காரைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது முக்கியம்.

வாரண்டி பாதிக்கப்படும்?

பேஸ் வேரியண்ட்டில் கூடுதல் வசதிகளைப் பொருத்தும்போது பலருக்கும் இருக்கும் மற்றொரு சந்தேகம் வாரண்டி (Warranty) பிரச்னை வருமா என்பது பொதுவானதாக உள்ளது. ஆஃப்டர் மார்க்கெட் அம்சங்களை பொருத்திவிட்டாலே காரின் முழு வாரண்டியும் தானாக ரத்தாகிவிடும் என்று கூற முடியாது. ஆனால், வெளியே பொருத்தப்பட்ட சாதனம் அல்லது முறையற்ற வயரிங் காரணமாக மின் அமைப்பில் கோளாறு ஏற்பட்டால், அந்தக் கோளாறுக்கான வாரண்டி கோரிக்கை மறுக்கப்படலாம் அல்லது அதற்கான பொறுப்பை நிறுவனம் ஏற்க மறுக்கலாம். இது காரின் உத்தரவாத விதிமுறைகள் மற்றும் ஏற்பட்ட கோளாறின் தன்மையைப் பொறுத்தது.

எனவே, கூடுதல் வசதிகளைப் பொருத்துவதற்கு முன்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில் ஆலோசனை பெறுவது நல்லது. குறிப்பாக, ஏர்பேக், ஏபிஎஸ், வயரிங் ஹார்னஸ் போன்ற பாதுகாப்பு மற்றும் மின்னணு அமைப்புகளில் தேவையற்ற மாற்றங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

எது புத்திசாலித்தனம்?

எல்லோராலும் டாப் வேரியண்ட்டை வாங்க முடியாது. அதற்காக அதிக விலை கொண்ட மாடலை வாங்கக் கடன் சுமையை அதிகரித்துக்கொள்ளவும் வேண்டியதில்லை. ஆனால், பேஸ் வேரியண்ட்டுக்கும் மிட் வேரியண்ட்டுக்கும் இடையிலான விலை வித்தியாசம் உங்கள் பட்ஜெட்டுக்குள் இருந்தால், அந்த இரண்டு மாடல்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

உதாரணமாக, கூடுதல் தொகை செலுத்துவதன் மூலம் பின்பக்க பவர் விண்டோஸ், ரியர் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் வசதி போன்ற உங்களுக்குத் தேவையான அம்சங்கள் கிடைக்கின்றன என்றால் மிட் வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கலாம். ஆனால், விலை வித்தியாசம் அதிகமாக இருந்து, அந்த வசதிகள் உங்களுக்கு அவசியமில்லை என்றால் பேஸ் வேரியண்ட்டையும் பரிசீலிக்கலாம்.

டாப் வேரியண்ட்டில் உள்ள ஒவ்வொரு வசதியும் எல்லோருக்கும் தேவையானதாக இருக்காது. பெரிய அலாய் வீல்கள், சன்ரூஃப், பிரீமியம் ஒலி அமைப்பு போன்ற அம்சங்களுக்காக மட்டும் அதிகப் பணம் செலவிட வேண்டிய அவசியமில்லை. முதலில் பாதுகாப்பு, அன்றாடப் பயன்பாடு, குடும்பத் தேவைகள் மற்றும் பராமரிப்புச் செலவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பட்ஜெட் கார்களை பொறுத்தவரையில் இந்த கணக்கீடுகளை வழங்குகிறோம். உங்களுக்கு முதலில் டவுண்பேமண்ட் அதிகம் கட்ட முடியவில்லை என்றால், மிட் வேரியண்ட்டை தேர்வு செய்து மாதத் தவணையில் ரூ.1,000 முதல் ரூ.1,500 மாதத் தவணையில் கூடுதலாக சமாளிக்க முடியும் என்றால் வங்கி கடன் திட்டத்தை அதற்கு தக்கவாறு தேர்வு செய்து கொள்வது நல்லது. இது காரின் நீண்ட கால பயன்பாடு மற்றும் ரீசேல் மதிப்பு போன்றவற்றில் உங்களுக்கு நிச்சயம் மதிப்பை தரும்.

Article Published On: Tuesday, October 20, 2026, 13:20 [IST]
English summary
Base variant car buying mistakes mid top variant benefits
மேலும்... #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X