அடேங்கப்பா... பெங்களூருவில் தனியார் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது... போக்குவரத்து நெரிசல் மோசமாகும்?
போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் படாத பாடுபட்டு வரும் பெங்களூரு, தற்போது இந்தியாவிலேயே அதிக தனியார் கார்கள் பதிவு செய்யப்பட்ட நகரமாக மாறியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத் துறையின் 'வாகன்' (VAHAN) வாகனப் பதிவு தரவுகளின்படி, நகரில் தனியார் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.
கர்நாடக போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026 மார்ச் 31 நிலவரப்படி பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1.20 கோடியை கடந்துள்ளது. இதில் சுமார் 25 லட்சம் தனியார் கார்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்தியாவின் மற்ற பெருநகரங்களை விட அதிக தனியார் கார்கள் கொண்ட நகரமாக பெங்களூரு உருவெடுத்துள்ளது.

மொத்த வாகனங்களில் இருசக்கர வாகனங்கள்தான் இன்னும் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக தனியார் கார்களின் பதிவு வேகமாக அதிகரித்து வருகிறது. ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி, வருமான உயர்வு, நகரப் புற பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் வாங்கும் போக்கு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
இந்த புள்ளிவிவரங்களில் கவனிக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவென்றால், பெங்களூருவில் தினசரி சராசரியாக 2,100-க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், நகர சாலைகளின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சுமார் 900 வாகனங்கள் என்ற அளவுக்கு வாகன அடர்த்தி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே நகரத்தில் நீடித்து வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே மூன்று லட்சத்திற்கும் அதிகமான புதிய தனியார் வாகனங்கள் பெங்களூருவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கார்கள் மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இந்த கணக்கில் பெங்களூருவுக்கு வெளியே பதிவு செய்யப்பட்டு தினசரி நகரத்திற்குள் இயக்கப்படும் வாகனங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெங்களூருவுக்குள் வந்து செல்கின்றன. எனவே, சாலைகளில் இயங்கும் உண்மையான வாகனங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ பதிவுகளை விட அதிகமாக இருக்கலாம் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நகரின் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பு, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப விரிவடையவில்லை என்பதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மெட்ரோ திட்டத்தின் பல வழித்தடங்கள் இன்னும் கட்டுமான நிலையில் உள்ளன. சில திட்டங்கள் காலதாமதமாகி வருவதால், தனியார் வாகனங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், BMTC பேருந்து சேவைகளும் அனைத்து பகுதிகளிலும் பயணிகளின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
போக்குவரத்து நிபுணர்களின் கருத்துப்படி, சாலைகளை மட்டும் விரிவுபடுத்துவது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்காது. மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து முடிப்பது, புறநகர் ரயில் சேவையை மேம்படுத்துவது, பேருந்து சேவைகளை அதிகரிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தை மேலும் நம்பகமானதாக மாற்றுவது போன்ற நடவடிக்கைகளே தனியார் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க உதவும்.
தற்போதைய சூழலில், பெங்களூருவின் மக்கள் தொகையும், நகர விரிவாக்கமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனியார் கார்களின் எண்ணிக்கையும் இதே வேகத்தில் உயர்ந்தால், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், நகரின் போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை விரைவாக மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில், பெங்களூருவில் தனியார் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, நகரின் பொருளாதார வளர்ச்சியை காட்டினாலும், அதே நேரத்தில் போக்குவரத்து உள்கட்டமைப்பின் மீது கூடுதல் அழுத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை சமாளிக்க பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதுடன், நீண்டகால போக்குவரத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications