பெங்களூரில் வீட்டு முன்பு காரை நிறுத்துவதற்கு ரூ.25,000 கட்டணம்... அரசின் அதிரடி திட்டம்!!
பெங்களூரில் வீட்டு முன்பு அல்லது பொதுச் சாலைகளில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கர்நாட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கிரேட்டர் பெங்களூர் ஆணைய பார்க்கிங் விதிகள் 2026 என்ற பெயரில் வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்புப் பகுதிகளிலும் சாலையோரமும் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு விதிகள் ஒப்புதல் பெறப்பட்டு அமலுக்கு வரும்பட்சத்தில், சொந்த வீட்டு முன்பாக கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு முறைப்படி அனுமதி பெற வேண்டியிருக்கும். மேலும், வாகனத்தின் வகையை பொறுத்து ஆண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஹேட்ச்பேக் உள்ளிட்ட சிறிய கார்களுக்கு ரூ.15,000, செடான் ரக கார்களுக்கு ரூ.20,000, எஸ்யூவி, எம்பிவி உள்ளிட்ட பெரிய வகை கார்களுக்கு ரூ.25,000 வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதன்மூலமாக, சாலை ஓரங்களில் பார்க்கிங் செய்து பொதுச் சாலையை ஆக்கிரமிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு கடிவாளம் போட அரசு முடிவு செய்துள்ளது.
கட்டணத் தொகை காரின் அளவை பொறுத்து மாறுபடுவது போன்று நகரின் சாலைகளின் அளவின் அடிப்படையில் ஏ, பி, சி என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இனி வீடு கட்டும் உரிமையாளர்களும், பல அடுக்கு வீடுகளை கட்டி வாடகைக்கு விடுவோரும் பார்க்கிங் வசதியுடன் கட்டுவது இன்றியமையாத விஷயமாக மாறும். மேலும், பொதுச் சாலைகளில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்துவதை தவிர்ப்பதற்கான யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக போக்குவரத்து மிகுந்த இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்று அரசு கருதுகிறது.
சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கும்போது அந்த கட்டிடம் தொடர்பான பார்க்கிங் விதிமுறைகளும் பரிசீலிக்கப்படும். மேலும், பார்க்கிங் நடைமுறையை ஒழுங்குப்படுத்தவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
தற்போது இது வரைவு விதிகளாக பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான பரிசீலிகனைகளை தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த விதிகள் அமலுக்கு வந்தால், கார் வைத்திருப்பவர்களுக்கு இது கூடுதல் செலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த வரைவு அறிக்கை பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாக விளங்கும் பெங்களூரில் வாகனப் பெருக்கம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வருகிறது. மேலும், வாகனப் பெருக்கத்தால் பல பொதுச் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் சாலை ஓரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வது இயல்பான விஷயமாக உள்ளது. வீட்டில் பார்க்கிங் வசதி இருந்தாலும், வீட்டு முன்பு நிறுத்துவது சகஜமாகிவிட்டது. வணிக நிறுவனங்கள் செயல்படும் சாலைகளிலும் சாலை ஓரங்கள் வாகனங்களால் ஆக்கிரமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி, தற்போது இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அண்மையில் பெங்களூரில் உள்ள முக்கிய சாலைகளில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் தயவுதாட்சண்யம் இன்றி அகற்றப்பட்டதுடன், கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதசாரிகள் நடக்க கூடி முடியாத அளவுக்கு ஆக்கிரமித்திருந்த சாலையோர வியாபாரிகளும் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும், காலி இடங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
This article has been updated with additional details.


Click it and Unblock the Notifications