பென்ட்லி டோர்கல் எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்: 888 எச்பி பவர், 600 கிமீ ரேஞ்ச் உடன் மிரட்டும் சொகுசு கார்
சொகுசு கார் தயாரிப்பில் உலகளவில் புகழ்பெற்ற பென்ட்லி நிறுவனம், தனது முதல் முழு எலக்ட்ரிக் காரான 'டோர்கல்' (Bentley Torcal) எஸ்யூவியை சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பென்டேகா எஸ்யூவிக்கு கீழ் நிலைநிறுத்தப்படும் இந்த மாடல், பெட்ரோல் அல்லது ஹைப்ரிட் எஞ்சின் தேர்வு இல்லாமல் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் காராக மட்டுமே விற்பனைக்கு வரவுள்ளது.
பென்ட்லி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு இயற்கையான அடையாளங்களின் பெயர்களை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தெற்கு ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற எல் டோர்கல் என்ற இயற்கையான சுண்ணாம்புக்கல் நிலப்பரப்பை மையமாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. பென்ட்லியின் புதிய லோகோவை முதன்முதலாக தாங்கி வரும் இந்த கார், போர்ஷே டைகன் மற்றும் கேயென் எலக்ட்ரிக் மாடல்களில் பயன்படுத்தப்படும் பிபிஇ (PPE) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் 2027ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பை பொறுத்தவரை பென்டேகா காரை விட 50 மிமீ குறைவான உயரமும், 120 மிமீ குறைவான நீளமும் கொண்டது. எலக்ட்ரிக் வாகனம் என்பதால் முன்பக்கம் காற்று உள்ளே செல்லும் கிரில் அமைப்பு கொடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வெளிச்சம் உமிழும் கிரிஸ்டல் டச் கொண்ட பாலிகார்பனேட் பேனல் வழங்கப்பட்டுள்ளது. இது இரவு நேரங்களில் காருக்கு மிக பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கிறது.
காரின் பக்கவாட்டில் 21 அங்குல அலாய் வீல்கள் இடம்பெறுகின்றன. காரின் பின்புறம் மிகவும் மெலிதான எல்இடி விளக்குகள் இணைக்கப்பட்டு ஸ்போர்ட்டியான தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான முன்பக்க பூட் ரூம் வசதி உள்ளது. பின்புற பூட் ஸ்பேஸ் 460 லிட்டர் கொள்திறன் கொண்டதாக உள்ளது. மேலும் நான்கு கதவுகளும் சென்சார் மூலம் தானாக இயங்கும் தொழில்நுட்பம் கொண்டது என்பதும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது.

கேபினுக்குள் வளைந்த ஓஎல்இடி (OLED) தொடுதிரை இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம் பிரதானமாக வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுநரின் முகத்தை அடையாளம் காணும் ஃபேஷியல் ரெகக்னிஷன் கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற அதிநவீன அம்சங்கள் உள்ளன. ரியர் வியூ மிரரில் உள்ள கேமரா ஓட்டுநரை கண்டறிந்து, அவரது விருப்பத்திற்கு ஏற்ப இருக்கை மற்றும் ஏடிஏஎஸ் (ADAS) அமைப்புகளை மாற்றியமைக்கும்.
பின்வரிசை பயணிகளுக்கு பிரத்யேக ஏசி கன்ட்ரோல்கள், சூடு மற்றும் குளிர்ச்சியை வழங்கும் இருக்கை அமைப்பு மற்றும் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் 100W யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள 1,780 வாட் நயீம் (Naim) ஆடியோ சிஸ்டம் 28 ஸ்பீக்கர்களுடன் திரையரங்கு போன்ற தரமான ஒலியை வழங்கும்.

இந்த சொகுசு வகை எலெக்ட்ரிக் காரில் 113 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 888 எச்பி பவரையும், 1,350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 2.7 டன் எடை கொண்ட இந்த எலக்ட்ரிக் கார், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை தரவுகளின் படி 600 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். 400kW அதிவேக சார்ஜரைப் பயன்படுத்தினால், பேட்டரியில் 10 முதல் 80 சதவீத சார்ஜை வெறும் 16 நிமிடங்களில் பெற முடியும். இந்தியாவில் தற்போதைக்கு இவ்வளவு அதிவேக சார்ஜர்கள் கட்டமைப்பு வசதி இல்லை என்றாலும், வரும் ஆண்டுகளில் அதிவேக சார்ஜர் கட்டமைப்பு மேம்படும் போது இது மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

இந்த காரில் பாதுகாப்பிற்கு 25 ரேடார்கள் மற்றும் கேமராக்கள் அடங்கிய அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கார் சென்ற பாதையின் கடைசி 50 மீட்டரை தானாகவே ரிவர்ஸ் எடுக்கும் திறன் கொண்டது. மேலும் ஓட்டுநர் இல்லாமல் 200 மீட்டர் தூரம் வரை காரை தானே பார்க் செய்யும் அமைப்பும் இதில் உள்ளது.
இந்திய சொகுசு எலக்ட்ரிக் கார் சந்தையில் பென்ட்லி டோர்கல் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், இதன் விலை இந்திய சந்தையில் பல கோடிகளை எட்டும் என தெரிகிறது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பென்ட்லி நிறுவனத்திற்கு புதிய அத்யாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



