காரின் நீளம், அகலத்தை மட்டும் பார்த்தால் போதாது... எலக்ட்ரிக் கார் வாங்குபவர்கள் முக்கியமா நோட் பண்ண வேண்டியது
கார் வாங்கும்போது காரின் நீளம், அகலம் உள்ளிட்ட பரிமாண அளவுகளை பார்த்து வாங்குவதை போல, கிரவுண்ட் கிளியரென்ஸையும் கவனிக்க வேண்டியது அவசியமாகும். தரையில் இருந்து காரின் அடிப்பகுதி எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்கிற அளவீடே கிரவுண்ட் கிளியரென்ஸ் என அழைக்கப்படுகிறது. அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் இருந்தால், தரைக்கும் காரின் அடிப்பகுதிக்கும் அதிக இடைவெளி உள்ளது என அர்த்தம் ஆகும். அவ்வாறு அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் உடன் கிடைக்கும் எலெக்ட்ரிக் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களுள் இதுவும் ஒன்றாகும். மஹிந்திராவின் லேட்டஸ்ட் இங்லோ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட பிஇ 6 எலெக்ட்ரிக் காரின் கிரவுண்ட் கிளியரென்ஸ் 207மிமீ ஆகும். இதன் மூலமாக தற்போதைக்கு இந்தியாவில் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட எலெக்ட்ரிக் காராக இது விளங்குகிறது.

மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் இதில் சுமார் 207மிமீ உயரத்திற்கு கிரவுண்ட் கிளியரென்ஸ் வழங்கப்படுகிறது. ஆதலால், இதுவும் தற்போதைக்கு இந்தியாவில் அதிக கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும்.
டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): நெக்ஸான் இவி காரில் கிரவுண்ட் கிளியரென்ஸ் ஆனது அதனுடன் வாங்கும் பேட்டரியை பொறுத்தது ஆகும். அதாவது, அளவில் சிறியதான 30kWh பேட்டரி உடன் வாங்கினால் நெக்ஸான் இவி காரின் கிரவுண்ட் கிளியரென்ஸ் 205மிமீ ஆகும். அதுவே, 45kWh பேட்டரி உடன் 190மிமீ மட்டுமே ஆகும்.

டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV): உயரமான ரைடிங் ஸ்டான்ஸ் மற்றும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உடன் வாங்கக்கூடியதாக ஹாரியர் இவி விளங்குகிறது. மேலும், தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரமும் 205மிமீ உயரத்தில் அமைந்துள்ளதால், எந்தவொரு பாதைக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை தைரியமாக கொண்டு செல்லலாம்.
டாடா பன்ச் இவி (Tata Punch EV): அளவில் சிறியதான எலெக்ட்ரிக் காராக இருப்பினும், 195மிமீ அளவிற்கு நன்கு அதிகமான கிரவுண்ட் கிளியரென்ஸை பன்ச் இவி வழங்குகிறது. இதனால், பள்ளம், மேடுகளில் இந்த காரை எவ்வாறு கொண்டுச் செல்வது என்கிற குழப்பம் வேண்டாம். அதேநேரம், சிறிய அளவிலான உடலமைப்பால் எளிதாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டிச் செல்லலாம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV 3XO EV): மேலே கண்ட பன்ச் இவி காரை காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருப்பினும், 190மிமீ-இல் கிரவுண்ட் கிளியரென்ஸை இந்த கார் வழங்குகிறது. அதேநேரம், குறுகலான சாலைகளுக்கு கொண்டுச் செல்லவும் இந்த எலெக்ட்ரிக் கார் ஏற்றது ஆகும்.
வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (VinFast VF 7): மேலே கண்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி எலெக்ட்ரிக் காரை காட்டிலும் சற்று அளவில் பெரியது. இருப்பினும், அதே 190மிமீ-இல் கிரவுண்ட் கிளியரென்ஸை கொண்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வியட்நாமிய எலெக்ட்ரிக் காரான இது, நகர்புற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக, தொழிற்நுட்ப அம்சங்கள் மிக்கதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரவுண்ட் கிளியரென்ஸ் ஆனது எந்தவொரு வாகனத்திற்கும் முக்கியமானது ஆகும். குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்களை வாங்கும்போது இவற்றை கவனிக்க வேண்டியது முக்கியமாகும். ஏனெனில், எலெக்ட்ரிக் கார்களில் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்ட முக்கியமாக பாகங்கள் அனைத்தும் காரின் அடிப்பகுதியில் தான் வழங்கப்படுகின்றன. அவற்றை சேதமடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.


Click it and Unblock the Notifications