பாரத்பென்ஸ் பஸ், டிரக்குகளுக்காக ரூ.4,000 கோடி... தமிழ்நாட்டில் டெய்ம்லரின் மெகா முதலீடு!
சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், பாரத்பென்ஸ் பஸ், டிரக்குகளின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழ்நாட்டில் புதிதாக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முதலீடு செய்யப்பட உள்ளது.
இந்திய வர்த்தக வாகன சந்தையில் பாரத்பென்ஸ் நிறுவனம் முன்னிலை நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வாகன நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இதுவரை 2.20 லட்சத்திற்கும் அதிகமான பஸ், டிரக்குகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

சரக்குப் போக்குவரத்து, சுரங்கம், தளவாடப் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், சந்தைப் போட்டியை சமாளித்து வர்த்தகத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், புதிய முதலீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, பாரத்பென்ஸ் பஸ், டிரக்குகளின் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை வலுப்படுத்தும் வகையில் புதிதாக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, இந்தியாவில் பாரத்பென்ஸ் பிராண்டிற்காக டெய்ம்லர் நிறுவனத்தின் மொத்த முதலீடு ரூ.14,500 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்காக இந்தியாவிலேயே பஸ், டிரக்குகளை உலகத் தரத்துடன் உருவாக்குவதை மேம்படுத்தும் நோக்கில் இந்த முதலீடு பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, உற்பத்தித் திறன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான தயார் நிலை போன்றவை வலுப்பெறும் என்று டெய்ம்லர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே ஒரகடத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன நிறுவனத்தின் ஒருங்கிணைந்த உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகம் அமைந்துள்ளது. இங்கு 4,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இந்த புதிய முதலீடு மூலமாக மேலும் 400 பேருக்கு நேரடியாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மேலும், இந்த நிறுவனத்திற்கு 400க்கும் மேற்பட்ட உள்ளூர் உதிரிபாக சப்ளையர்களும், 420க்கும் மேற்பட்ட டீலர்களும், சர்வீஸ் மையங்களும் உள்ளன. சென்னை ஒரகடத்தில் உள்ள பாரத்பென்ஸ் ஆலையில் தயாரிக்கப்படும் பஸ், டிரக்குகள் தயாரிப்பில் 92 சதவீதம் அளவுக்கு உள்ளூர் உதிரிபாகங்களுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மேலும், ஒரகடம் ஆலையில் இருந்து 75,000க்கும் மேற்பட்ட பஸ், டிரக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்லன. தவிரவும், 330 மில்லியன் உதிரிபாகங்களும் 70க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் உள்ள டெய்ம்லர் ஆலையில் டிரக் உற்பத்திக்கு சென்னையில் தயாரிக்கப்படும் டிரான்ஸ்மிஷன்தான் சப்ளை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் டெய்ம்லர் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகன வர்த்தகத்தில் சென்னை ஆலையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications
