50 நாடுகள்... 1,750 நிறுவனங்கள்! பிரம்மாண்டமாக ஏற்பாடாகும் 2027 டெல்லி சர்வதேச வாகனக் கண்காட்சி!
இந்திய ஆட்டோமொபைல் துறையின் மிக முக்கியமான சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) இருந்து வருகிறது. இந்த கண்காட்சியின் மூலமாக இந்தியாவிற்கான புதிய வாகனங்கள், தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால், அடுத்து வரும் ஆண்டுகளுக்கான ஒவ்வொரு நிறுவனங்களின் திட்டங்களையும், புதிய அறிமுகங்களையும் எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த நிலையில், 2027ம் ஆண்டுக்கான பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ வரும் ஆண்டு பிப்ரவரி 4ந் தேதி துவங்கி 9ந் தேதி வரை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி ஆகிய இரண்டு இடங்களில் இந்த கண்காட்சிக்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 4 முதல் 9ஆம் தேதி வரையும், யஷோபூமியில் பிப்ரவரி 4 முதல் 7ஆம் தேதி வரையும் கண்காட்சி நடைபெறும்.

(Representational Image)
பாரத் மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1,750க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய தயாரிப்புகளையும் தொழில்நுட்பங்களையும் காட்சிப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு முக்கியமான தளமாக அமைய உள்ளது.
இந்த நிகழ்வில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மெக்சிகோ, இலங்கை, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தைவான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இதன் மூலம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு கண்காட்சியானது 'Smarter Mobility For A Better Tomorrow' என்ற முக்கிய கருப்பொருளை மையமாக கொண்டு நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மட்டுமின்றி பேட்டரி, உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையையும் ஒரே தளத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்தக் கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகன ஆர்வலர்கள் மட்டுமின்றி தொழில்துறையினர், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களுக்கும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்தக் கண்காட்சியில் மொத்தம் 11 தனித்தனி நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளன. இதில் ஆட்டோ எக்ஸ்போ - தி மோட்டார் ஷோ (Auto Expo - The Motor Show), இந்திய சர்வதேச டயர் கண்காட்சி, பாரத் பேட்டரி ஷோ மற்றும் இந்திய சைக்கிள் ஷோ ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன. வாகனத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் இங்கு இடமளிக்கப்படும்.
இதுதவிர, மொபிலிட்டி டெக் பெவிலியன், ஸ்டீல் மற்றும் வாகனக் கட்டுமானப் பொருட்கள் பெவிலியன், உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி ஆகியவையும் இடம்பெறுகின்றன. வாகன உற்பத்தியில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள், பொருட்கள் மற்றும் எதிர்கால உற்பத்தி முறைகளை அறிந்துகொள்ள உதவும் வகையிலான ஸ்டால்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக, வாகன உதிரிபாகத் துறையினருக்கு இது முக்கியமான வாய்ப்பாக இருக்கும்.
மேலும், கட்டுமான உபகரணங்கள் எக்ஸ்போ, வேளாண் மொபிலிட்டி மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி, ஏர் மொபிலிட்டி எக்ஸ்போ, மெட்ரோ மற்றும் நகர்ப்புற போக்குவரத்துக் கண்காட்சி ஆகியவையும் நடைபெற உள்ளன. இதன் மூலம் கார், பைக்குகள் கடந்து இந்த முறை போக்குவரத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது உலகின் இரண்டாவது பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சி என்ற பெருமையை பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


