பாதுகாப்பில் வேற லெவலுக்கு மாறப்போகும் இந்திய கார்கள்... அறிமுகமாகிறது பாரத் என்சிஏபி 2.0!
இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் என்சிஏபி (Bharat NCAP) கார் மோதல் பரிசோதனை பாதுகாப்புத் திட்டம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் புதிய கார் வாங்குவோர் மத்தியிலும் இந்த பாதுகாப்பு தர மதிப்பீடு குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த பாதுகாப்பு சோதனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, பாரத் என்சிஏபி 2.0 என்ற கூடுதல் பாதுகாப்பு விதிகளுடன் புதிய சோதனை முறைகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் கார் பாதுகாப்பு சோதனைகளில், ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அதில் பயணிப்பவர்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணக்கிடும் 'கிராஷ் டெஸ்ட்' (Crash Test) முறையே பிரதானமாக பார்க்கப்படுகிறது. ஆனால் புதிதாக வரும் பாரத் என்சிஏபி 2.0 விதிகளின் கீழ், விபத்து நடப்பதற்கு முன்பும், விபத்து நடந்த பின்பும் காரின் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் கடுமையாக பரிசோதிக்கப்படும்.
முக்கியமாக விபத்து நடப்பதைத் தவிர்க்க உதவும் தொழில்நுட்பங்கள் (Crash Avoidance), காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு (Passenger Protection), சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பு (Pedestrian Protection) மற்றும் விபத்து நடந்த பிறகு காரில் இருந்து பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வசதிகள் (Post-crash Evacuation and Care) என நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
இந்தியச் சாலைகளில் கார்கள் மட்டுமின்றி பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் அதிகளவில் விபத்துகளில் சிக்குவதால், பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு புதிய விதிகளில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது. காரின் முன்பகுதி வடிவமைப்பு பாதசாரிகள் மீது மோதும்போது அவர்களுக்கு பெரிய அளவிலான காயங்களை ஏற்படுத்தாத வகையில் இருக்கிறதா என்பதும் ஆய்வு செய்யப்படும்.
மேலும், காரில் உள்ள தானியங்கி முறையில் பிரேக் பிடிக்கும் தொழில்நுட்பம் (AEB), தடம் மாறுதலை எச்சரிக்கும் தொழில்நுட்பம் போன்ற விபத்தைத் தடுக்கும் அதிநவீன அடாஸ் (ADAS) அம்சங்களின் திறனும் இந்த புதிய பதிப்பில் தீவிரமாக சோதிக்கப்படும். இதற்காக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும் அரசு மதிப்பீடு செய்ய இருக்கிறது.
தற்போது செயல்பட்டு வரும் பாரத் என்சிஏபி திட்டம் இந்திய வாகனச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள குளோபல் என்சிஏபி மையங்களில் ஒரு காரைச் சோதிக்க சுமார் ரூ.2.5 கோடி வரை செலவாகும் நிலையில், இந்தியாவில் வெறும் ரூ.60 லட்சத்தில் இந்த பரிசோதனையை செய்து கொள்ள முடிகிறது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் கூட தங்களது புதிய மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை 11 நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட கார் மாடல்கள் பாரத் என்சிஏபி பாதுகாப்பு தர மதிப்பீட்டு சான்றிதழைப் பெற்றுள்ளன.
இதனுடன் சேர்த்து ஓட்டுநர் உரிம முறையிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு புள்ளிகளைக் குறைக்கும் 'கிரேடட் பாயிண்ட்ஸ் சிஸ்டம்' (Graded Points System) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ச்சியாக விதிகளை மீறி புள்ளிகளை இழக்கும் ஓட்டுநர்களின் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும்.
வாகனங்களின் கட்டுமானப் பாதுகாப்பை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஓட்டுநர்களின் பொறுப்பற்ற தனத்தையும் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் இந்த இரட்டை நடவடிக்கைகள், வருங்காலத்தில் இந்தியச் சாலைகளில் நடக்கும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் பெருமளவு குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

