30% குறைவான கட்டணத்தில் பாரத் டாக்சி சேவை துவக்கம்... ஓலா, ஊபர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி?!
டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பிராந்தியத்தில் 'பாரத் டாக்ஸி' (Bharat Taxi) என்ற புதிய போக்குவரத்து சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதரவுடன், கூட்டுறவு முறையில் இயங்கும் இந்தத் தளம், ஓலா மற்றும் ஊபர் போன்ற முன்னணி டாக்சி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்திலும், ஓட்டுநர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையிலும் இது இருக்கும் என தெரிகிறது.
பாரத் டாக்ஸி: ஓட்டுநர்களே உரிமையாளர்கள்
'சஹ்கார் சே சம்ரிதி' (கூட்டுறவு மூலம் செழிப்பு) என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களால், ஓட்டுநர்களுக்காக நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய மொபிலிட்டி தளமாக வர்ணிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களைப் போலன்றி, இங்கு ஓட்டுநர்களே பங்குதாரர்களாகவும் செயல்படுகிறார்கள். இது இந்தியப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம்?
கடந்த சில ஆண்டுகளாக ஓலா மற்றும் உபெர் போன்ற நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யும் வசதி இருந்தாலும், ஓட்டுநர்கள் அதிக கமிஷன் மற்றும் உரிமையாளர் அந்தஸ்து இல்லாதது போன்ற பல சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். இதற்குத் தீர்வாகவே பாரத் டாக்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டது.
பயணிகளுக்குக் குறைந்த கட்டணம்
பாரத் டாக்ஸியின் மிக முக்கியமான அம்சம் அதன் 'ஜீரோ கமிஷன்' (Zero Commission) மாதிரி. தனியார் நிறுவனங்கள் நெரிசல் நேரங்கள் (Surge pricing) அல்லது மோசமான வானிலை காலங்களில் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம். ஆனால், பாரத் டாக்ஸியில் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு நிலையாக இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால், மற்ற தளங்களை விட இதில் 30% வரை கட்டணம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர்களுக்கான சலுகைகள்
இந்தத் தளத்தைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு வெறும் 30 ரூபாய் மட்டும் சந்தா கட்டணமாகச் செலுத்தினால் போதும். இது தவிர, அவர்களுக்குப் பின்வரும் நன்மைகளும் வழங்கப்படுகின்றன:
* 5 லட்சம் ரூபாய் தனிநபர் விபத்துக் காப்பீடு.
* 5 லட்சம் ரூபாய் குடும்ப மருத்துவக் காப்பீடு.
* எந்தவிதமான கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களும் இன்றி, மற்ற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றும் சுதந்திரம்.
பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு
இந்தத் திட்டம் 'பைக் திதி' போன்ற முயற்சிகள் மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லியில் சுமார் 35 பிரத்யேக பாதுகாப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய போக்குவரத்து தளம் டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (Umang) போன்ற அரசுச் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டம்
தற்போது டெல்லி-என்சிஆர் மற்றும் குஜராத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்களுடன் இயங்கி வரும் பாரத் டாக்ஸி, தினசரி 10,000-க்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொள்கிறது. 2029-ஆம் ஆண்டிற்குள் இந்தச் சேவையை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர்கள் 500 ரூபாய் செலுத்தி 5 பங்குகளை வாங்குவதன் மூலம் இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக மாற முடியும்.


Click it and Unblock the Notifications








