இந்தியாவில் களமிறங்கும் பிஎம்டபிள்யூவின் அல்பினா சொகுசு கார் பிராண்ட்! 2027-ல் அறிமுகம்?
சொகுசு கார்களை வாங்கும் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகின்றன. சாதாரண பிரீமியம் கார்களைத் தாண்டி, தனித்துவமான வடிவமைப்பு, அதிக சொகுசு வசதிகள், சிறப்பான செயல்திறன் மற்றும் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கும் வசதிகளைக் கொண்ட கார்களை வாங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு வர்த்தகத்தை விரிவாக்கம் முயற்சியில் பிஎம்டபிள்யூ நிறுவனம் இறங்கி உள்ளது.
அந்த வகையில், தனது அல்பினா (ALPINA) பிரிமீயம் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 2027-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் அல்பினா தனி பிராண்டாகக் களமிறக்கப்பட உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பணிகள் விறுவிறு
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 10 முக்கிய நகரங்களில் அல்பினா கார் பிராண்டை அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் நிறுவனம் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, இந்தியாவில் விற்பனை மையங்களை அமைப்பதற்கான டீலர்களை தேர்வு செய்வது, போட்டி நிறுவனங்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளுக்குப் புதிய பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அல்பினா பிராண்ட்?
கடந்த 1965-ம் ஆண்டு முதல் பிஎம்டபிள்யூ கார்களை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான வடிவமைப்பு, அதிக செயல்திறன் மற்றும் கூடுதல் சொகுசு அம்சங்களுடன் கார்கள் அல்பினா பிராண்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பிஎம்டபிள்யூ கார்களிலிருந்து வேறுபட்ட அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது செயல்பட்டு வந்தது.
அதிக செயல்திறனுடன் பயணத்தின்போது சிறப்பான சொகுசையும் வழங்கும் வகையில் இந்த பிராண்டு தனது கார்களை உருவாக்கி வருகிறது.வெளிப்புற வடிவமைப்பில் நுட்பமான மாற்றங்கள், பிரத்யேக அலாய் வீல்கள், உயர்தர லெதர் இருக்கைகள், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் உள்புற அலங்காரம் போன்ற அம்சங்கள் அல்பினா கார்களின் தனித்துவமான விஷயங்களாக இருக்கின்றன.

பிரத்யேக பிராண்டாக அல்பினா
கடந்த ஜனவரி மாதம் 1ந் தேதி முதல் அல்பினா பிராண்டின் உரிமையை முழுமையாகப் பெற்ற பிஎம்டபிள்யூ குழுமம், இதனைத் தனது பிரத்யேக சொகுசு கார் பிராண்டாக மறுசீரமைத்துள்ளது. இதன் மூலம் அல்பினா தனித்துவமான அடையாளத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவிலான கஸ்டமைஸ் வாய்ப்புகளை வழங்குவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த நிறுவனத்தின் மறுசீரமைப்புக்குப் பிறகு அல்பினா அறிமுகப்படுத்தும் முதல் சர்வதேச மாடல் வரும் 2027-ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பிஎம்டபிள்யூ 7 சீரிஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதன் தொழில்நுட்ப விவரங்கள், எஞ்சின் தேர்வுகள் மற்றும் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பென்ஸ் நிறுவனத்துக்குப் போட்டி
இந்திய சொகுசு கார் சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ கடுமையாகப் போட்டியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் 9,075 கார்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ நிறுவனம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 17 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் 9,768 கார்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் அதிக விலை கொண்ட கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ஏற்கெனவே கிடைக்கும் சொகுசு கார்களை வாங்குவதைவிட, கூடுதல் வசதிகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட கார்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் மேபேக் போன்ற பிரத்யேக சொகுசு கார் பிராண்டுகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்தியாவில் அல்பினா பிராண்டை அறிமுகப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார் வரிசையில் புதிய அத்தியாயம் தொடங்கும். குறிப்பாக, வழக்கமான சொகுசு கார்களைவிட தனித்துவமான அனுபவத்தை விரும்பும் பணக்கார வாடிக்கையாளர்களைக் கவர இது உதவலாம். 2027-ல் அல்பினா இந்தியாவில் அறிமுகமாகுமா, அதன் முதல் காராக எந்த மாடல் களமிறங்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Source: Reuters


Click it and Unblock the Notifications


