பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல்பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்: 669 கி.மீ ரேஞ்ச், ரூ.79.60 லட்சம் விலை!!
இந்தியாவின் சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் i5 LWB என்ற புதிய செடான் கார் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் செடான் என்ற பெருமையுடன் வந்துள்ள இந்த புதிய பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல் பேஸ் காருக்கு ரூ.79.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய பிஎம்டபிள்யூ ஐ5 லாங் வீல்பேஸ் மாடல் eDrive35L M Sport என்ற ஒரே வேரியண்டில் கிடைக்கும். மேலும், இந்த வேரியண்ட்டின் முதல் பதிப்பு மாடலும் ரூ.79.60 லட்சம் என்ற விலையிலேயே வழங்கப்படுகிறது. முதல்கட்ட வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட First Edition மொத்தம் 99 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். மேலும், இந்த ஃபர்ஸ்ட் எடிசன் மாடலுக்கு அறிமுகத்திற்கு முன்பே அனைத்து யூனிட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

ரேஞ்ச்
புதிய பிஎம்டபிள்யூ ஐ5 eDrive35L காரில் 81.6 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது MIDC சான்றிதழின்படி அதிகபட்சமாக 669 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது. காரின் எலெக்ட்ரிக் மோட்டார் 268எச்பி பவரையும் 410என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 0-100 கி.மீ வேகத்தை 6.7 விநாடிகளில் எட்டும் இந்த காரின் அதிகபட்ச வேகம் 195 கிமீ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காருக்கு 160kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய 33 நிமிடங்கள் போதுமானது. மேலும், 11 kW ஏசி சார்ஜிங் வசதியும், வீட்டில் நிறுவுவதற்கான Wallbox சார்ஜரும் இந்த காருக்கு வழங்கப்படுகிறது.

பிரீமியம் கேபின்
தாராள இடவசதியுடன் பயணிப்பதற்கும் ஏற்ற வகையில் அதிக பிரிமீயம் வசதிகளுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. BMW ஐ5 லாங்வீல் பேஸ் மாடலானது 5,175 மிமீ நீளம், 2,156 மிமீ அகலம், 1,520 மிமீ உயரம் மற்றும் 3,105 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. குறிப்பாக பின்புற பயணிகளுக்கான அதிக லெக்ரூம் மற்றும் சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மற்றும் 14.9 அங்குல கண்ட்ரோல் டிஸ்ப்ளே கொண்டதாகவும் வந்துள்ளது. 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், முன்புறத்தில் வென்டிலேட்டட் இருக்கைகள், பனரோமிக் சன்ரூஃப், 17 ஸ்பீக்கர்கள் கொண்ட 655W போவர்ஸ் வில்கின்சன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்திய சாலைகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ரியர்-ஆக்சில் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, ரிமோட் பார்க்கிங் உள்ளிட்ட ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
