இந்தியாவில் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் திண்டாட்டம்! ஏப்ரலில் BMW எடுக்க போகும் முக்கிய முடிவு!
பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் ஏப்ரல் மாதம் நமக்கு ஓர் பெரிய அதிர்ச்சியை தரப்போகிறது. அது வேறொன்றும் இல்லை, வழக்கம்போல் கார் விலை உயர்வாகும். சொல்லி வைத்தாற் போன்று ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் இந்த விலை அதிகரிப்பு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மார்ச் மாதம் வந்துவிட்டாலே கடந்த 1 வருடத்தில் எந்த அளவிற்கு வரவு செலவு வந்துள்ளது என்பதை கணக்கிட்டு வாகனங்களின் விலைகளை உயர்த்துவதை ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் இந்த காலக்கட்டத்தில் விலை உயர்த்துவது இல்லை என்றாலும், பெரும்பாலான நிறுவனங்கள் உயர்த்துகின்றன.

குறிப்பாக, லக்சரி கார் நிறுவனங்களிடம் இருந்து எல்லா வருடமும் ஏப்ரல் மாதத்தில் விலை உயர்வை எதிர்பார்க்கலாம். இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஆடி (Audi) நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது 2% விலை உயர்வை அறிவித்துவிட்டன. இந்த நிலையில் அவற்றை தொடர்ந்து பிஎம்டபிள்யூவும் தற்போது அதன் விலை உயர்வை அறிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூவும் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை 2% உயர்த்த உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வின்படி, பிஎம்டபிள்யூ கார்கள் மட்டுமின்றி மினி (MINI) கார்களின் விலைகளும் நம் நாட்டில் 2% அதிகரிக்கப்பட உள்ளன. பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ்தான் மினி நிறுவனமும் செயல்படுகிறது.

ரூபாய் மதிப்பு குறைவதால் தொடர்ந்து உயர்ந்து வரும் மெட்டீரியல் பாகங்களின் விலைகளாலும், போக்குவரத்துக்கு அதிகரித்துவரும் செலவுகளினாலும் இந்த விலை உயர்வை கொண்டுவருவதாக பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓ-வுமான ஹர்தீப் சிங் ப்ரார் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் மூலம் கட்டிங்-எட்ஜ் கண்டுப்பிடிப்புகளுடன் உலக தரத்திலான சேவையை உறுதி செய்வோம் என ஹர்தீப் சிங் ப்ரார் சூளுரைத்துள்ளார்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த நிறுவனம் சில கார்களை முழுவதுமாக வெளிநாட்டில் தயாரித்து, இந்தியாவில் இறக்குமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்கிறது. ஆனால், பெரும்பாலான கார்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. அவ்வாறு, இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பிஎம்டபிள்யூ கார்களுள் விலை குறைவான 2-சீரிஸ் கிரான் கூபே (2 Series Gran Coupe) மற்றும் 3-சீரிஸ் லாங் வீல்பேஸ் (3-Series Long Wheelbase) கார்கள் முக்கியமானவை ஆகும்.
இவை மட்டுமின்றி, பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ், 7-சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5, எக்ஸ்7, எம்340ஐ மற்றும் ஐஎக்ஸ்1 லாங் வீல்பேஸ் உள்ளிட்ட கார்களும் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், மினி கார்கள் எதுவும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடர்ந்து அதிகரித்துவரும் விலை உயர்வுகளால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல், விலை உயர்வை கொண்டு வருகின்றன. 2% என்பது சிறியதாக தெரிந்தாலும், 1 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ.2 லட்சம் உயர்த்தப்படுவது சாதாரண விஷயம் அல்ல. பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் இந்த மார்ச் மாதத்திலேயே வாங்குவது சிறந்தது. இந்த விலை உயர்வை சமாளிக்கும் விதமாக அடுத்த சில மாதங்களுக்கு சலுகைகளை பிஎம்டபிள்யூ அறிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








