மணிக்கு 100கிமீ வேகம் வெறும் 4.3 வினாடிகளில்... பணக்காரர்கள் வாங்குவதற்கு வரிசையில் நிற்குறாங்க!
கார் ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026ஆம் ஆண்டிற்கான முற்றிலும் புதிய பி.எம்.டபிள்யூ எக்ஸ்6 (BMW X6) என்கிற கூபே-எஸ்யூவி (Coupe-SUV) கார் மாடல் இந்திய சந்தையில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளது. 'M60i எக்ஸ்டிரைவ்' என்கிற புதிய ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ள இந்த சொகுசு காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.78 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு (CBU) விற்பனைக்கு வந்துள்ள இந்த கார், இந்திய சாலைகளில் எந்த மாதிரியான ஆதிக்கத்தை செலுத்தப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம். இந்த ஆடம்பர BMW காரின் இதயப்பகுதியில் துடிக்கும் அந்த அசுர ஆற்றல் என்ன தெரியுமா? இதில் 4.4 லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இணைந்து செயல்படுகிறது. இது ஒட்டுமொத்தமாக 530 எச்பி பவரையும், 750 என்.எம் டார்க் திறனையும் வாரி வழங்குகிறது. இந்த அசாத்தியமான என்ஜின் ஆற்றல் ஆனது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சமமாக கடத்தப்படுகிறது. இதன் வேகம் உங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.
வெறும் 4.3 வினாடிகளில் இந்த பிரம்மாண்ட கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தை எட்டிப்பிடித்து விடக்கூடியது என்றால் நம்ப முடிகிறதா? இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும். தனது பிரிவிலேயே மிகவும் சக்திவாய்ந்த என்ஜினைக் கொண்டுள்ள இந்த காரில் ரியர்-வீல் ஸ்டீயரிங் சக்கரம், அடாப்டிவ் சஸ்பென்ஷன், லிமிடெட்-ஸ்லிப் டிஃபெரன்ஷியல் மற்றும் எக்ஸ் டிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற பல அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வளவு சக்திவாய்ந்த இந்த மாடல் லிட்டருக்கு 7.89 கிமீ மைலேஜ் தரும் என BMW நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய BMW X6 M60i காரின் வெளிப்புற வடிவமைப்பு பார்ப்பவர்களை அப்படியே கட்டிப்போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பகுதியில் அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், முற்றிலும் கருமையாக்கப்பட்ட கிட்னி வடிவ கிரில் மற்றும் அகலமான ஏர்-இன்டேக்குகள் கொண்ட டூயல்-டோன் பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
இதன் கூபே போன்ற சரிவான மேற்கூரை அமைப்பு (Sloping Roofline) காருக்கு ஒரு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்குகிறது. மேலும், 21 இன்ச் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள், சிகப்பு நிற M-பிராண்டட் பிரேக் காலிப்பர்கள் மற்றும் கம்பீரமான வீல் ஆர்ச்கள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. காரின் பின்புறத்தில் வளைந்து நெளிந்து செல்லும் எல்இடி டெயில்-லேம்ப்கள், குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் M60i பேட்ஜிங் ஆகியவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
4,960 மிமீ நீளமும், 2,004 மிமீ அகமும், 1,700 மிமீ உயரமும் கொண்ட இந்த கார், 2,975 மிமீ வீல்பேஸ், 216 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 580 லிட்டர் பூட் ஸ்பேஸ் இடவசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக 6 எக்ஸ்குளூசிவ் நிறங்கள் மற்றும் பிரத்யேக பெயிண்ட் ஆப்ஷன்களும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன.
காரின் உள்ளே நுழைந்ததுமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அதன் பிரீமியம் தரத்திலான கேபின் ஆகும். உட்புறத்தில் M-பிராண்டட் லெதர் ஸ்டீயரிங் சக்கரம், டேஷ்போர்டில் ஒளிரும் M லோகோ மற்றும் M முவண்ண சீட்பெல்ட்கள் என ஒவ்வொன்றும் ரசித்து ரசித்து வடிவமைக்கப்பட்டுள்ளன. காக்னாக், சில்வர்ஸ்டோன் மற்றும் ரெட்-பிளாக் டூயல் டோன் போன்ற அசத்தலான வண்ணங்களில் இருக்கை அமைப்புகளை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் புதிய BMW X6 M60i காரானது ஆடி SQ8, போர்ஷே கேயென்னே கூபே GTS மற்றும் மெர்சிடிஸ்-AMG GLE 53 கூபே ஆகிய முன்னணி சொகுசு கார்களுக்கு கடுமையான சவாலாக அமையப்போகிறது. இந்த அதிரடிப் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், BMW நிறுவனம் 'SMART Finance' திட்டத்தை இந்த காருக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications