மாருதி ஸ்விஃப்ட் சைஸில் இருக்கும் காரை சென்னை ஆலையில் உற்பத்தி செய்ய போகும் BMW - பணக்காரர்கள் தான் டார்க்கெட்
பி.எம்.டபிள்யூ இந்தியா (BMW India) நிறுவனத்திற்கு சென்னையில் தொழிற்சாலை உள்ளது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இங்கு பல்வேறு விதமான பிஎம்டபிள்யூ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சில பிஎம்டபிள்யூ கார்கள் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு இங்கு அசெம்பிள் (Assemble) செய்யப்படுகின்றன. இதனாலேயே பல கார்களை பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் குறைவான விலையில் வழங்க முடிகிறது.
ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் மினி (Mini) கார்கள் எதுவும் தற்போதைக்கு அங்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை; அசெம்பிள் கூட செய்யப்படுவதில்லை. மொத்தமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்படுகின்றன. இதன் காரணமாகவே அளவில் சிறிய கார்களாக இருப்பினும் மினி கார்கள் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களுக்கு இணையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்க போவதில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் பிரபலமான அதன் மினி கண்ட்ரிமேன் (Countryman) காரை சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மினி கண்ட்ரிமேன் கார்களை சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யும் பணிகள் இந்த 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து துவங்கப்பட உள்ளன.
புதிய மூன்றாம் தலைமுறை மினி கண்ட்ரிமேன் கடந்த 2024ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆக அறிமுகம் செய்யப்பட்டது. ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும் புதிய மினி கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து செயல்திறன்மிக்க வேரியண்ட்டாக கண்ட்ரிமேன் ஜே.சி.டபிள்யூ ஆல்4 (JCW All4) கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இது எலெக்ட்ரிக் காராக இல்லாமல் பெட்ரோல் என்ஜினை கொண்ட காராக அறிமுகம் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக 300 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த செயல்திறன்மிக்க வேரியண்ட் உள்பட கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்கள் இரண்டும் தற்போதைக்கு மொத்தமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.
இதில் கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் கார் வழக்கம்போல் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட உள்ள நிலையில், பெட்ரோல் என்ஜினை கொண்ட கண்ட்ரிமேன் ஜே.சி.டபிள்யூ ஆல்4 கார் சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெட்ரோல் என்ஜினை கொண்ட மினி கண்ட்ரிமேன் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல.
முன்னதாக, 2013ஆம் ஆண்டின் மே மாதத்தில் முதல் தலைமுறை கண்ட்ரிமேன் சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டது; அதனை தொடர்ந்து 2018 மே மாதத்தில் இரண்டாம் தலைமுறை கண்ட்ரிமேன் காரும் அசெம்பிள் செய்யப்பட்டது. அவற்றை தொடர்ந்து மூன்றாம் தலைமுறை கண்ட்ரிமேன் காரும் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.
இருப்பினும், கண்ட்ரிமேன் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் உருவாக்குவது தொடர்பான எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை. மினி கண்ட்ரிமேன் பெட்ரோல் கார் ஆனது பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 (X1) காரை போன்று முன் சக்கரத்தில் இயங்கும் கார் ஆகும். அதாவது, என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் முன் சக்கரங்களுக்கு செல்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் சென்னை ஆலையில் அசெம்பிள் செய்யப்படுவதை போன்று, மினி கண்ட்ரிமேன் பெட்ரோல் காரும் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்த மினி காரை இந்தியாவில் அசெம்பிள் செய்வது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்திற்கு ஒன்றும் புதியது இல்லை என்பதால், புதிய 3ஆம் தலைமுறை மாடலையும் அசெம்பிள் செய்வது பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு பெரியதாக சவாலானதாக இருக்காது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், கண்ட்ரிமேன் ஜே.சி.டபிள்யூ ஆல்4 காரின் விலைகள் இந்தியாவில் குறையலாம்.


Click it and Unblock the Notifications








