ரூ.49.90 லட்சத்தில் அதிக இடவசதியுடன் புதிய BMW X1 LWB இந்தியாவில் அறிமுகம்!
சொகுசு எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஆரம்ப நிலை மாடல்களில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அதிக இடவசதியுடன் சவுகரியமாக பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், எக்ஸ்1 எஸ்யூவியின் அதிக வீல்பேஸ் (Long Wheel Base) கொண்ட மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ X1 LWB என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனையில் உள்ள X1 மற்றும் iX1 LWB மாடல்களுடன் இது மூன்றாவது மாடலாக வந்துள்ளது. இந்த மாடலுக்கு ரூ.49.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புதிய மாடலின் பின்புற இருக்கையில் அமரும் பயணிகளுக்கு கால் வைப்பதற்கு அதிக இடவசதியுடன் சவுகரியமாக பயணம் செய்ய முடியும்.

புதிய பிஎம்டபிள்யூ X1 LWB எஸ்யூவியின் முக்கிய மாற்றமாக அதன் பரிமாணம் பெரிதாக மாறி இருக்கிறது. வழக்கமான X1 எஸ்யூவியைவிட இதன் நீளம் 116 மிமீ அதிகரித்து 4,616 மிமீ ஆக உள்ளது. அதேபோன்று, வீல்பேஸ் நீளமும் 108 மிமீ அதிகரித்து 2,800 மிமீ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலமாக பின்பக்க இருக்கையில் அமரும் பயணிக்கான knee room மட்டும் 109 மிமீ வரை அதிகரித்துள்ளது.
வெளிப்புறத்தில் பெரிய மாற்றங்களை இல்லை. X1 எஸ்யூவியின் அடிப்படை வடிவமைப்பு தொடர்கிறது. ஆனால் நீளமான உடலமைப்பு காரணமாக பக்கவாட்டில் இந்த புதிய மாடல் இன்னும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. இந்த மாடலில் ஜன்னல்களை சுற்றிலும் க்ரோம் பூச்சுடன் பீடிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், 18 அங்குல அலாய் சக்கரங்களும் இடம்பெறுகின்றன. எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளன. இந்த புதிய மாடல் வெள்ளை, கருப்பு, நீலம் மற்றும் சாம்பல் ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

உட்புறத்தில் பின்பக்க பயணிகளுக்கான இடவசதி இந்த காரின் முக்கிய பலமாக இருக்கிறது. அத்துடன், பின்பக்க இருக்கை குஷன் தடிமனும் 15 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சாய்மான வசதி கொண்ட பின் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், பொருட்கள் வைப்பதற்கான 540 லிட்டர் பூட்ரூம் இடவசதி ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும், பின்பக்க இருக்கைகளை மடக்கினால் பூட் ரூம் இடவசதியை 1,700 லிட்டர் வரை அதிகரிக்க முடியும்.
இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது 154 பிஎச்பி பவரையும் மற்றும் 230என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கமான X1 எஸ்யூவி மாடலில் கிடைக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த LWB மாடலில் வழங்கப்படவில்லை.

இந்த புதிய எஸ்யூவி மாடலானது சென்னையிலுள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்திய சந்தைக்கு ஏற்ற விலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பு அந்நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. இந்த புதிய மாடலானது ஆடி க்யூ3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ போன்ற மாடல்களுடன் போட்டியாக இருக்கும்.
விலை குறைவான சொகுசு எஸ்யூவி மாடல்களில் அதிக பின்பக்க வசதியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கான இது புதிய தேர்வாகவும் வந்துள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ஓட்டுநரின் அனுபவத்தை விட பின்பக்க பயணிகளின் வசதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


