இதுதான் பிசினஸ் க்ளாஸா, ஸ்பெஷல் எடிசன் கார்களை பார்த்து வாங்குங்க?
இந்திய கார் சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது சிறப்பு பதிப்புகள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் விற்பனையை அதிகரிக்கவும், போட்டி நிறுவனங்களின் மாடல்களுக்குச் சவால் கொடுக்கவும் கார் நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஆனால், ஒரு காருக்கு பிசினஸ் க்ளாஸ் அனுபவத்தை வழங்குகிறோம் என்று கூறிவிட்டு, சில அலங்கார மாற்றங்களை மட்டும் செய்வது உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
அண்மையில் பிரபல கார் நிறுவனத்தின் மின்சாரக் கார் ஒன்று இந்தியச் சந்தையில் விற்பனைப் போட்டியை எதிர்கொண்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் சிறப்புப் பதிப்பை அறிமுகம் செய்தது. அதற்கு அடைமொழியாக பிசினஸ் க்ளாஸ் அம்சங்களுடன் என்று குறிப்பிட்டது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்குவதே இதன் நோக்கம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிசினஸ் க்ளாஸ் உத்தி
ஆனால், இந்தச் சிறப்புப் பதிப்பில் இடம்பெற்றுள்ள மாற்றங்களைப் பார்க்கும்போது, பிசினஸ் க்ளாஸ் என்ற பெயருக்கு ஏற்ற அளவுக்கு வசதிகள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. புதிய இரட்டை வண்ண வெளிப்புறத் தேர்வு, உட்புறத்தில் தொலைக்காட்சித் திரை, தலையணைகள் மற்றும் சிறப்புப் பதிப்புக்கான அடையாளக் குறியீடுகள் போன்ற மாற்றங்களே முக்கியமாகக் கவனிக்கப்படுகின்றன.
இதில் தொலைக்காட்சித் திரை கூடுதல் பொழுதுபோக்கு வசதியை வழங்கலாம். ஆனால், வாகனத்தின் ஒட்டுமொத்தப் பயண அனுபவத்தையே மேம்படுத்தும் வகையில் பிரத்யேக இருக்கைகள், மசாஜ் வசதி, குளிர்பானங்களை வைப்பதற்கான வசதி, மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள், ஆர்ம் ரெஸ்ட், கால்களை நீட்டுவதற்கான இடவசதி உள்ளிட்ட அம்சங்கள் இல்லாதபோது, பிசினஸ் க்ளாஸ் என்ற பெயர் எந்த அளவுக்கு நியாயமானது?

உண்மையான பிசினஸ் க்ளாஸ்
விமானங்களில் பிசினஸ் க்ளாஸ் பயணத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், அதிக இடவசதி, சிறந்த இருக்கைகள், தனியுரிமை மற்றும் கூடுதல் சேவைகளுடன் வழங்கப்படுகிறது. அதே கருத்தை ஒரு காருக்குப் பொருத்திப் பார்த்தால், அலங்கார மாற்றங்களைத் தாண்டி உண்மையான வசதிகள் அவசியம்.
குறிப்பாக, இரண்டாவது வரிசையில் சாய்வாக மாற்றிக்கொள்ளக்கூடிய வசதியான இருக்கைகள், கால்களை நீட்டுவதற்கான இடவசதி, மசாஜ் வசதி, பெரிய டிவி திரை, சார்ஜிங் வசதிகள் மற்றும் சிறந்த ஆடியோ சிஸ்டம் போன்றவை பயண அனுபவத்தை மேம்படுத்தும். முன்புற ஓட்டுனர் பகுதியிலிருந்து பின்புறப் பயணிகளுக்கான பகுதியைப் பிரிக்கும் தடுப்பு போன்றவையும் உயர்தரப் பயண அனுபவத்தை உருவாக்கக்கூடும்.
இத்தகைய வசதிகள் அனைத்தும் ஒவ்வொரு காரிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும், பிசினஸ் க்ளாஸ் என்று விளம்பரப்படுத்தும்போது, அந்தப் பெயருக்கு ஏற்ற அளவில் நடைமுறையில் உணரக்கூடிய வசதிகளையும் கூடுதல் மதிப்பையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
ஸ்பெஷல் எடிஷனிலும் கவனம் தேவை
இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், பண்டிகைக் காலச் சிறப்புப் பதிப்புகள். சில நேரங்களில், வழக்கமான கார்களில் சீட்கவர், தலையணைகள், தரைவிரிப்புகள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைச் சேர்த்து, அவற்றுக்குச் சிறப்புப் பதிப்பு என்ற பெயர் வழங்கப்படுகிறது. இத்தகைய பொருட்களைத் தனியாக வாங்கிப் பொருத்திக்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.
ஆனால், அந்தப் பொருட்களின் தனித்தனி விலை என்ன, அவற்றைப் பொருத்துவதற்கான செலவு எவ்வளவு, நிறுவனத்தின் சிறப்புப் பதிப்பில் அவற்றைச் சேர்ப்பதால் உண்மையில் கிடைக்கும் கூடுதல் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிடாமல் வாங்குவது தேவையற்ற செலவுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, வெளிச்சந்தையில் கிடைக்கும் பொருட்களை விட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருக்கிறதா என்பதையும் ஆராய வேண்டும்.
அதேநேரத்தில், தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் பாகங்களுக்கும், டீலரில் பொருத்தப்படும் ஆக்சஸெரீகளுக்கும் தரம், உத்தரவாதம் மற்றும் பொருத்தும் செலவில் வேறுபாடுகள் இருக்கிறது. எனவே, எல்லாப் பொருட்களும் அதிக விலை கொண்டவை என்று பொதுவாக முடிவெடுக்காமல், ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.
வாரண்டியில் கவனம்
எனினும், கார் வாங்குவதற்கு முன்பாகவே சிறப்புப் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வசதியின் விலையையும் தனித்தனியாக விசாரியுங்கள். அதே பொருட்களை வெளியில் வாங்கிப் பொருத்துவதற்கான செலவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவற்றைப் பொருத்துவதால் காரின் உத்தரவாதம் பாதிக்கப்படுமா என்பதை உற்பத்தியாளரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பெயரையும் விளம்பரத்தையும் நம்பி கூடுதல் பணம் செலுத்த வேண்டாம். உண்மையில் கிடைக்கும் வசதிகளுக்கும், அதற்காகச் செலுத்தும் விலைக்கும் நியாயமான தொடர்பு இருக்கிறதா என்பதே முக்கியம். பிசினஸ் க்ளாஸ் என்பது பெயரில் மட்டும் இருக்கக் கூடாது; பயண அனுபவத்திலும் அதன் மதிப்பு தெரிய வேண்டும்.


Click it and Unblock the Notifications


