இந்தியாவில் மீண்டும் கார்களின் விலையை உயர்த்தும் நிறுவனங்கள்
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக சீனாவைச் சேர்ந்த BYD இருந்து வருகிறது. இதனை முக்கியமான நிறுவனங்களில் ஒன்று என்று கூறுவதற்கான காரணம், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டெல்லாவுடன் இந்நிறுவனம் போட்டியிட்டு வருவது தான். சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களை அதே தரத்திலேயே இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறது BYD.
இந்தியாவில் தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களை முழுவதுமாக இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இதனால் சீனா மற்றும் பிற நாடுகளில் மிகவும் குறைவான விலையிலேயே எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தாலும், இந்தியாவில் அதிக இறக்குமதி வரி காரணமாக அவ்வளவு குறைவான விலையில் BYD-யால் வெளியிட முடியவில்லை. இந்த நிலையில் தான் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை ஜூலை 1 முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இது BYD அறிவித்திருக்கும் இரண்டாவது விலை உயர்வு அறிவிப்பாகும். ஏப்ரல்/ மே மாதங்களிலேயே முதல் விலை உயர்வை அந்நிறுவனம் அமல்படுத்தியது. அப்போது 3% வரை இந்தியாவில் விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கார்களின் விலையை உயர்த்தியது அந்நிறுவனம். தற்போது ஜூலை மாதம் கார்களின் விலையை 2% வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
BYD-யின் இந்த அறிவிப்பின் காரணமாக இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் கார்களின் விலை 68,000 ரூபாய் முதல் 1.10 லட்சம் ரூபாய் வரை விலை உயரவிருக்கிறது. அந்நிய செலாவணி மதிப்பில் ஏற்பட்டு வரும் ஏற்ற இறக்கங்களின் காரணமாக இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக BYD-யின் வணிகத் தலைவரான ராஜீவ் சாவுகான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது அட்டோ 3, eMAX 7, சீல் மற்றும் சீலயன் 7 ஆகிய நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களை BYD விற்பனை செய்து வருகிறது BYD. இதில் அட்டோ 3 மற்றும் eMAX 7 ஆகியவை மாஸ் மார்க்கெட் கார்களாகவும், சீல் மற்றும் சீலயன் 7 ப்ரீமியமான எலெக்ட்ரிக் கார் மாடல்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அட்டோ 3 தான் BYD-யின் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் காராக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், மாருதி e விட்டாரா மற்றும் மஹிந்திரா BE 6 ஆகிய மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24.99 லட்சம் ரூபாய் முதல் 33.99 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் கார் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விலை உயர்வைத் தொடர்ந்து இந்த தொடக்க நிலை BYD காரின் விலை 67,980 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அதற்கு அடுத்ததாக இருக்கும் எலெக்ட்ரிக் எம்பிவி மாடலான eMAX 7 26.90 லட்சம் ரூபாய் முதல் 29.90 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன விலை 59,800 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
BYD-யின் ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்களான சீல் மற்றும் சீலயன் 7 ஆகிய கார்கள் 40 லட்சத்திற்கும் மேலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சீல் செடான் மாடலானது 41 லட்சம் ரூபாய் முதல் 53.15 லட்சம் ரூபாய் வரையிலான விலையிலும், சீலயன் 7 மாடலானது 49.40 லட்சம் ரூபாய் முதல் 54.90 லட்சம் ரூபாய் வரையிலான விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை 1 லட்சம் ரூபாய்க்கு மேல் உயரவிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BYD நிறுவனமானது கார்களையும், பாகங்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு விலையை உயர்த்தியிருக்கின்றன. மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இந்தத் தேவை அதிகம் இருக்காது. எனவே அந்த நிறுவனம் விலை உயர்த்துமா என வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.


Click it and Unblock the Notifications