யாராவது பார்த்தீங்களா?... சென்னையில் ஹாயாக சுற்றிய BYD Atto 2 கார்! டாடா சியாரா EVக்கு போட்டி
சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார கார் வரிசையை விரிவுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே அட்டோ 3, சீல், சீலியன் 7 உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், தற்போது குறைந்த விலையில் புதிய மின்சார எஸ்யூவியை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த வரிசையில் BYD நிறுவனத்தின் அட்டோ 2 (Atto 2) மின்சார கார் இந்தியாவில் மீண்டும் சோதனை ஓட்டத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் எந்தவித மறைப்பும் இல்லாமல் இந்த கார் சோதனை செய்யப்பட்டுள்ள ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியாவில் இதன் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆட்டோமொபைல் ஆர்வலர் சரத் எஸ் என்பவரால் இந்த சோதனை கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் பெரிய அளவிலான மறைப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள மாடலின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதை கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது.
இந்தியாவில் BYD நிறுவனம் தனது தயாரிப்புகளை பல்வேறு விலைப் பிரிவுகளில் விரிவுபடுத்த விரும்புகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் அட்டோ 3 காருக்குக் கீழே அட்டோ 2 நிலைநிறுத்தப்படும். இதன் மூலம் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், டாடா கர்வ் இவி மற்றும் டாடா சியாரா இவி போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் யுவான் அப் (Yuan Up) என்ற பெயரிலும், தென் அமெரிக்க நாடுகளில் யுவான் புரோ (Yuan Pro) என்ற பெயரிலும் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் 4,310 மிமீ நீளமும், 1,830 மிமீ அகலமும், 1,675 மிமீ உயரமும் கொண்டது. மேலும், இதன் வீல்பேஸ் 2,620 மிமீ ஆக உள்ளது. இதனால் மிகச் சிறப்பான இடவசதியை வழங்கும்.
வெளிப்புற வடிவமைப்பில் வலுவான பாடி கிளாடிங், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பெரிய அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஃபிளாப் வகை கதவு கைப்பிடிகள், வித்தியாசமான சி பில்லர் அமைப்பு, பின்புற ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் இணைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இதன் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.
இந்த காரின் பூட் ஸ்பேஸ் சுமார் 400 லிட்டராக உள்ளது. பின்புற இருக்கைகளை மடக்கும்போது இதனை 1,340 லிட்டர் வரை விரிவுபடுத்த முடியும். இதனால் குடும்பத்துடன் பயணம் செய்யும்போது அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும். நடைமுறை பயன்பாட்டிற்கும் இது உதவியாக இருக்கும்.
உட்புறத்தில் 15.6 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், காற்றோட்ட வசதியுடைய இருக்கைகள், லெதரெட் இருக்கை அமைப்பு உள்ளிட்ட பிரீமியம் வசதிகளும் வழங்கப்படுகின்றன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை முன்புற மற்றும் பக்கவாட்டு ஏர்பேக்குகள், லெவல் 2 அடாஸ் (ADAS) போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. சர்வதேச சந்தை மாடலில் அதிகபட்சமாக 64.8 kWh பேட்டரி வழங்கப்படுகிறது. முன்புற சக்கரங்களுக்கு இயக்கத்தை வழங்கும் ஒற்றை மின்சார மோட்டார் அதிகபட்சமாக 201 எச்பி பவரையும் 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் 0-100 கி.மீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்ட முடியும்.
ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 430 கி.மீ வரை பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது பேட்டரி மற்றும் ரேஞ்ச் விவரங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
வரும் 2027ம் ஆண்டு முதல் பாதியில் BYD Atto 2 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்டோ 3 காரைவிட குறைவான விலையில் அறிமுகமானால், டாடா சியாரா இவி உள்ளிட்ட மின்சார எஸ்யூவி கார்களுக்கு வலுவான போட்டியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications


