630 கிமீ ரேஞ்சுடன்.. வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

சீனாவில் நடைபெற்று வரும் பீஜிங் ஆட்டோ ஷோவில் புதிய தலைமுறை 'யுவான் பிளஸ்' (Yuan Plus) எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது BYD. இது வேறெந்த கார் மாடலும் இல்லை, இந்தியாவில் BYD விற்பனை செய்து வரும் அட்டோ 3 தான். சீனாவில் இதனை யுவான் பிளஸ் என்ற பெயரில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது அதன் அடுத்த தலைமுறை வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

டிசைன், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் சார்ஜிங் வேகம் எனப் பல்வேறு வகைகளிலும் இந்த யுவான் பிளஸ் எலெக்ட்ரிக் காரை மேம்படுத்தியிருக்கிறது BYD. உலகளவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லாவுடன் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது இந்நிறுவனம். எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் மற்ற எந்த நிறுவனங்களை விடவும் மேம்பட்ட எலெக்ட்ரிக் கார்களை BYD உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2026 BYD Atto 3

BYD-யின் சமீபத்திய கார்களில் நாம் பார்க்கும் டிசைனே அட்டோ 3 எஸ்யூவிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் முகப்பு விளக்குகள், பம்பர் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் செமி ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 19 இன்ச் அலாய் வீல்களும் புதிய டிசைனைப் பெற்றிருக்கின்றன. பின்பக்கம் ஒளிரும் வகையிலான BYD லோகோ கொடுக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது இந்தப் புதிய தலைமுறை யுவான் பிளஸ் மாடலானது 210 மிமீ வரை கூடுதல் நீளம், 20 மிமீ வரை கூடுதல் அகலம் மற்றும் 60 மிமீ வரை கூடுதல் உயரத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில் மிகவும் இடவசதி கொண்ட காராக புதிய யுவான் பிளஸ் இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலானது 4,665 மிமீ நீளம், 1,895 மிமீ அகலம் மற்றும் 1,675 மிமீ உயரம் ஆகிய அளவுகளைக் கொண்டிருக்கிறது.

2026 BYD Atto 3 Inside

காரின் உட்புறத்தையும் பல்வேறு வகைகளில் மேம்படுத்தியிருக்கிறது BYD. உள்ளே புதிதாக இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு, பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய காரில் இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது BYD. ஒன்று 57.54 kWh, மற்றொன்று 68.54 kWh. இரண்டுமே BYD-யின் பிளேடு பேட்டரி தொழில்நுட்பத்துடன் அப்டேட் செய்யப்பட்டது. சிறிய பேட்டரி பேக்கானது 540 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 630 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டுள்ளது.

இந்த பேட்டரி பேக்குகளின் சிறப்பம்சம் இதன் ரேஞ்சு அல்ல, இதன் சார்ஜிங் வேகம் தான். இந்த இரண்டு பேட்டரி பேக்குகளுமே BYD-யின் ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றை 10% முதல் 97% வரை வெறும் 9 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனத் தெரிவித்துள்ளது BYD.

தற்போது சீனாவில் இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை கார் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது. அந்த வரிசையில் இந்தியாவும் இருக்கிறது. இந்தியாவிலும் அட்டோ 3 மாடலை இந்தப் புதிய தலைமுறையாக BYD அப்டேட் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பது சீனா தான். மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல், அதனை குறைவான விலையில் கொடுப்பது தான் சீன எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பலமாக இருக்கிறது. இந்தியாவில் சீன நிறுவனங்களின் முதலீடு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போதிலும் கணிசமான அளவில் அந்நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. அவற்றில் BYD-யும் ஒன்று.

Article Published On: Saturday, May 2, 2026, 15:56 [IST]
English summary
Byd atto 3 electric car new gen model revealed in china check all details here
மேலும்... #byd #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+