டெஸ்லாவை மறக்கடிக்கும் டென்ஸா... அல்ட்ரா லக்சுரி EV கார்களை இந்தியாவில் களமிறக்கும் பிஒய்டி!
உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான பிஒய்டி (BYD) நிறுவனம், தனது உயர் ரக பிரீமியம் கார்களை தயாரிக்கும் துணை பிராண்டான 'டென்ஸா' (Denza) மூலமாக இந்தியாவின் அல்ட்ரா லக்சுரி கார் சந்தையில் மிக விரைவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள், 1,156 பிஎச்பி ஆற்றல் கொண்ட இசட்9 ஜிடி (Z9 GT) என்ற ஃபாஸ்ட்பேக் வகை சொகுசு எலெக்ட்ரிக் காரையும், டி9 (D9) என்ற எம்பிவி எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.
இந்திய சந்தையில் ஏற்கனவே பிஒய்டி நிறுவனம் ரூ.20 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையிலான விலைப் பிரிவில் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக, ரூ.80 லட்சத்திற்கும் அதிகமான பிரீமியம் மற்றும் சூப்பர்-லக்சுரி பிரிவைக் குறிவைத்து டென்ஸா பிராண்டை இந்தியாவில் கொண்டு வர பிஒய்டி திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களும் முழுமையாக தயாரிக்கப்பட்டு CBU) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

டென்ஸாவின் அசுரன்
டென்ஸா பிராண்டின் முதன்மை மாடலாக களமிறங்கும் இசட்9 ஜிடி, ஒரு ஸ்போர்ட்டியான ஃபாஸ்ட்பேக் வகையை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலாக வருகிறது. சர்வதேச அளவில் இது பிளக்-இன் ஹைபிரிட் பதிப்பில் கிடைத்தாலும், இந்தியாவிற்கு முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் வேரியண்ட்டாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த காரில் முன்பக்க சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் ஒரு மின் மோட்டாரும், பின்புறத்தில் இரண்டு மோட்டார்களும் என மொத்தம் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இணைந்து ஒட்டுமொத்தமாக 1,156 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் அசுர திறன் கொண்டவையாக இருக்கும்.

இந்த கார் 2.9 டன் எடைகொண்டதாக இருக்கும் நிலையில், இந்த மோட்டார்கள் அசுரத்தனமாக இயங்கும் வல்லமை கொண்டதாக இருக்கின்றன. மேலும், இந்த கார் நின்ற நிலையிலிருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 270 கிமீ ஆக இருக்கும்.
இந்த காரில் மிகவும் சக்திவாய்ந்த 122.5 kWh பிளேடு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 600 கிமீ (WLTP) வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். மேலும், பிஒய்டி நிறுவனத்தின் 'ஃபிளாஷ்' அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் (Flash Charging) இது சப்போர்ட் செய்யும். இதன் மூலம் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 97 சதவீதம் வரை வெறும் 9 நிமிடங்களில் அதிவேகமாக சார்ஜ் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர பயணங்களின் போது சார்ஜிங் மையங்களில் அதிக நேரம் காத்திருப்பதை இது முற்றிலுமாகத் தவிர்க்கும். ஆனால், தற்போது இந்த அதிவேக சார்ஜிங் நெட்வொர்க் இல்லை. எனினும், பிஒய்டி நிறுவனம் சந்தையில் வலுவான நிலையை எட்டும்போது இந்த ப்ளாஷ் சார்ஜிங் ஸ்டேஷனை இந்தியாவிலும் கட்டமைக்கும் என்று தெரிகிறது.
காரின் உட்புறத்தில் ஐந்து திரைகளுடன் கூடிய பொழுதுபோக்கு, கார் இயக்கம் குறித்த சாதனங்கள், அனைத்து இருக்கைகளுக்கும் மசாஜ் வசதி, ஹீட்டிங் மற்றும் குளிர்ச்சியை வழங்கும் வசதிகள் உள்ளன. பின்புற இருக்கைகளை தேவைக்கேற்ப சாய்த்துக் கொள்ளும் (Reclining) வசதியும் உண்டு. பாதுகாப்பிற்காக லெவல் 2+ ஏடாஸ் (ADAS) தொழில்நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. இந்திய சந்தையில் இசட்9 ஜிடி மாடல் ரூ.1.20 கோடி முதல் ரூ.1.50 கோடி வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

டென்ஸா டி9 எலெக்ட்ரிக் எம்பிவி
சொகுசு எம்பிவி பிரிவில் தடம் பதிப்பதற்காக டென்ஸா டி9 மாடலை பிஒய்டி கொண்டு வருகிறது. முன்பக்க சக்கர இயக்கம் (FWD) கொண்ட இதன் எலெக்ட்ரிக் பதிப்பில் 103 kWh பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மோட்டார் 313 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ (WLTP) தூரம் வரை பயணிக்க முடியும். 200 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் இது ஆதரிக்கும்.
இந்த கார் 2+2+3 என்ற இருக்கை அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் நடுவரிசையில் அமைக்கப்பட்டுள்ள கேப்டன் இருக்கைகள் தான் காரின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். நீண்ட பயணங்களின் போது உடலுக்கு அதிக ஓய்வையும் சௌகரியத்தையும் தரும் வகையில் மசாஜ், வென்டிலேஷன், தொடுதிரை கட்டுப்பாடுகள், மடக்கிப் பயன்படுத்தக்கூடிய மேஜைகள் மற்றும் கால்களை நீட்டி அமர்வதற்கான லெக் ரெஸ்ட் வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் பயண தரத்தை மேம்படுத்தும் வகையில் கார் ஆக்சிலரேசன் மற்றும் பிரேக்கிங்கின் போது குலுங்குவதைத் தடுக்கும் ஆக்டிவ் பாடி கன்ட்ரோல் சிஸ்டம் இதில் உள்ளது. டென்ஸா டி9 எலெக்ட்ரிக் எம்பிவியின் எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.80 லட்சம் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் போன்ற விலையுயர்ந்த எம்பிவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும், எம்ஜி எம்9 போன்ற புதிய மாடல்களுக்கும் போட்டியை தரும்.
டென்ஸா பிராண்டிற்கென பிரத்யேக ஷோரூம்களை அமைத்து விற்பனை செய்ய பிஒய்டி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லிஎன்சிஆர் மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் ஷோரூம்கள் திறக்கப்படும். அதைத்தொடர்ந்து நாட்டின் பிற நகரங்களிலும் இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டு செல்ல பிஒய்டி திட்டமிட்டுள்ளது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications




