சீன எலெக்ட்ரிக் கார் கம்பெனினு எல்லாரும் தலையில் தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க! வேலையை காட்ட ஆரம்பிச்சிடுச்சு!
பி.ஒய்.டி இந்தியா (BYD India) நிறுவனம் அதன் கார்களின் விலைகளை வருகிற 2026 மே மாதம் முதல் 3% அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் வெகுவாக அதிகமாக உள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் அனைத்து கார்களின் விலைகளையும் அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் கார்களின் உற்பத்தி செலவுகளாலும், போக்குவரத்து செலவுகளாலும் மற்ற கார் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், அந்த வரிசையில் பிஒய்டி நிறுவனமும் தற்போது விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது.

பிஒய்டி பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்சமயம் அட்டோ 3 (Atto 3), இமேக்ஸ் 7 (eMAX 7), சீல் (Seal) மற்றும் சீலயன் (Sealion) என 4 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தின் விலைகளும் வருகிற மே 1ஆம் தேதி முதல் 3% அதிகரிக்கப்பட உள்ளது.
குறைக்கடத்திகள் மற்றும் முக்கிய பாகங்களுக்கான பற்றாக்குறை போன்ற எலெக்ட்ரிக் கார்களுக்கான பாகங்களை பெறுவதில் உலகளவில் நிலவும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை பிஒய்டி நிறுவனம் கொண்டுவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அசாதாரணமான போர் பதற்ற சூழலும் இதற்கு காரணமாகும். இதனாலேயே இந்த 2026ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கார்களின் விலைகளை பிஒய்டி உயர்த்துகிறது.

இவி பேட்டரிகளை உருவாக்குவதில் குறைக்கடத்திகளும், உலகின் அரிதான தனிமங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களில் அவற்றிற்கான பேட்டரிகளை வழங்குவதில் மட்டும் 30% முதல் 40% செலவாகிறது. தற்போதைய விலையில் 3 சதவீதம் எனும் பட்சத்தில், இந்தியாவில் பிஒய்டி எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்கப்பட உள்ளன.
விலையுயர்ந்த பிஒய்டி சீல் மற்றும் சீலயன் எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் ரூ.1.7 லட்சம் வரையில் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.24.99 லட்சத்தில் இருந்து ரூ.33.99 லட்சம் வரையிலும், இமேக்ஸ் 7 எலெக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.26.90 லட்சத்தில் இருந்து ரூ.29.90 லட்சம் வரையிலும் உள்ளன.
பிஒய்டி சீல் எலெக்ட்ரிக் காரின் விலை தற்போதைய ஏப்ரல் நிலவரப்படி ரூ.41 லட்சத்தில் இருந்து ரூ.53.51 லட்சம் வரையில் உள்ளது. இந்த கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட பின் எந்த அளவிற்கு இருக்கும் என்பது குறித்த விபரங்களை பிஒய்டி இன்னும் வெளியிடவில்லை என்றாலும், விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிய 2026-27ஆம் நிதியாண்டு துவங்கியதில் இருந்து கார் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தங்களது கார்களின் விலைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன. மிக சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் கூட இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை 1% அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
ஆனால், பிஒய்டி நிறுவனம் அதிரடியாக 3% விலையை உயர்த்துவதால், அவற்றின் கார்களின் விலைகள் இந்தியாவில் பல பத்தாயிரம் ரூபாய் அளவிற்கு அதிகரிக்க உள்ளது. இது பிஒய்டி நிறுவனத்தின் விற்பனையில் பெரிய அளவிற்கு எதிரொலிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், இதனை சமாளிக்கும் பொருட்டு தனது கார்களுக்கு குறுகிய கால சலுகைகளை பிஒய்டி அறிவிக்கலாம்.


Click it and Unblock the Notifications








