50 ஆயிரம் ரூபா உயர்த்துனாலும் இந்த காரை வாங்க ஆள் இருக்கு! சீன எலக்ட்ரிக் கார் இந்திய மக்களோடு மக்களா கலக்குது
பிஒய்டி (BYD) நிறுவனம் தனது புகழ்பெற்ற மற்றும் விலையுயர்ந்த சீலயன் 7 (Sealion 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலையை அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றத்தின்படி, சீலயன் 7 காரின் பிரீமியம் (Premium) வேரியண்ட் ரூ.50,000 கூடுதலாக விலை கூடுகிறது. அதே நேரத்தில், சீலயன் 7 காரின் பெர்ஃபாமன்ஸ் (Performance) வேரியண்டின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விலை உயர்விற்குப் பிறகு, சீலயன் 7 பிரீமியம் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்போது ரூ.49.40 லட்சமாக உள்ளது. இது முன்பு ரூ.48.90 லட்சமாக இருந்தது. பெர்ஃபாமன்ஸ் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.54.90 லட்சமாகவே தொடர்கிறது. 2025 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்கு முன் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பழைய விலையிலேயே சீலயன் 7 பிரீமியம் கார் வழங்கப்படும் என பிஒய்டி இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

சீலயன் 7 எலெக்ட்ரிக் எஸ்யூவி அதன் இயக்க ஆற்றலுக்கு தட்டையான 82.56kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது பிஒய்டி நிறுவனத்தின் செல்-டூ-பாடி (Cell-to-Body) கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்டரியை வாகனத்தின் அமைப்புடன் ஒருங்கிணைத்து, சிறந்த உறுதித்தன்மையையும், பாதுகாப்பையும் வழங்குகிறது. செயல்திறனைப் பொறுத்தவரை, பெர்ஃபாமன்ஸ் வேரியண்ட் 523 பிஎச்பி ஆற்றலையும், 690 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது.
இது 0 முதல் 100 கிமீ வேகத்தை கார் வெறும் 4.5 வினாடிகளில் அடைய உதவுகிறது. இந்த வேரியண்ட் சிங்கிள்-முழு சார்ஜில் 567 கிமீ வரை சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை வழங்குகிறது. பிரீமியம் வேரியண்ட் 308 பிஎச்பி ஆற்றலையும், 380என்.எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிமீ வேகத்தை 6.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக உள்ளது.

விலை குறைவான பிரீமியம் வேரியண்ட்டிற்கு 482 கிமீ ரேஞ்ச் குறிப்பிடப்பட்டுள்ளது. சீலயன் 7 காரின் இந்த இரண்டு வேரியண்ட்களும் ஐரோப்பிய NCAP பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. சீலயன் 7 காரின் வெளித்தோற்றம், பிஒய்டி நிறுவனத்தின் 'ஓஷன் சீரிஸ்' (Ocean Series) வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது.
இதில் இரட்டை 'U' வடிவ LED ஹெட்லைட்கள், கருப்பு நிற பம்பர் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பொனெட் ஆகியவை அடங்கும். இவை காரின் தோற்றத்திற்கு நவீனத்துவத்தையும் கம்பீரத்தையும் சேர்க்கின்றன. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, சீலயன் 7 இதுவரை 2,300 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. பிஒய்டி இந்தியா நிறுவனத்தின் 40 நகரங்களில் பரவியிருக்கும் 47 ஷோரூம்கள் மூலம் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தில் தொடர்ச்சியான முதலீடுகளின் பிரதிபலிப்பு என்று பிஒய்டி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை மாற்றத்திற்குப் பிறகும், சீலயன் 7 ஆனது பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஒரு சிறந்த தேர்வாகத் தொடர்கிறது. அதற்கேற்ப பிஒய்டி நிறுவனமும் இந்தியாவில் தனது டீலர்ஷிப் ஷோரூம் மற்றும் சேவை மையங்கள் மூலம் தனது நெட்க்வொர்க்கை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீலயன் 7 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அதிகரித்த போதிலும், பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்த பிஒய்டி எலெக்ட்ரிக் காரின் விற்பனையில் பெரியதாக தாக்கம் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால், விலையை அதிகரித்தாலும் சீலயன் 7 காரின் விற்பனை பெரியதாக பாதிக்கப்படாது என்கிற தைரியத்தில் தான் பிஒய்டி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications









