இந்தியாவில் சீன பிஒய்டி கம்பெனியின் அடுத்த பிளான்... சிங்கிள்-சார்ஜில் 485கிமீ ஓடக்கூடிய கார் அறிமுகம்!
BYD நிறுவனத்தில் இருந்து புதியதாக இமேக்ஸ்7 என்கிற 3 வரிசையில் இருக்கைகளை கொண்ட MPV காரில் 71.8kWh பேட்டரி பேக் உடன் ஒரு புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 'கம்ஃபர்ட்' (Comfort) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வேரியண்ட், ரூ.27.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
BYD இமேக்ஸ்7 எலெக்ட்ரிக் காரில் இந்த புதிய வேரியண்ட், ஏற்கனவே சந்தையில் இருக்கும் பிரீமியம் மற்றும் சுப்பீரியர் வேரியண்ட்களுக்கு இடையே சந்தைப்படுத்தப் பட்டுள்ளது. இது பிரீமியம் வேரியண்ட்டை விட ரூ.1 லட்சம் அதிகமாகவும், சுப்பீரியர் வேரியண்ட்டை விட ரூ.1.40 லட்சம் குறைவாகவும் விலையைக் கொண்டுள்ளது.

இதற்கேற்ப, சுப்பீரியர் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது, புதிய கம்ஃபர்ட் வேரியண்ட்டில் லெவல்-2 ADAS, பனோரமிக் சன்ரூஃப், ஃபிரேம்லெஸ் வைப்பர்கள், காற்றோட்டமான முன் இருக்கைகள் (ventilated front seats), ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் பவர்-ஓப்பனிங் பூட் போன்ற சில பிரீமியம் அம்சங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கம்ஃபர்ட் வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள 71.8kWh பேட்டரி பேக் ஆனது இமேக்ஸ்7 காரின் சுப்பீரியர் வேரியண்ட்டிலும் வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 485 கிமீ (MIDC சான்றளிக்கப்பட்ட) தூரம் வரை தடையின்றி பயணிக்கலாம். புதிய வேரியண்ட் அறிமுகத்துடன், BYD நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களின் விலையையும் இந்தியாவில் அதிரடியாக மாற்றியமைத்துள்ளது.

BYD எலெக்ட்ரிக் கார்களின் சில வேரியண்ட்களின் விலைகள் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் அதிகரித்து வரும் உதிரி பாகங்களின் உற்பத்திச் செலவு மற்றும் உலகளாவிய சந்தை மாற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு BYD நிறுவனத்திற்கு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இதுகுறித்து BYD இந்தியாவின் எலெக்ட்ரிக் கார்கள் பிரிவின் தலைவர் திரு.ராஜீவ் சவுகான் பேசுகையில், "இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களது எலெக்ட்ரிக் கார்களுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தொழில்நுட்பம், சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், சில வேரியண்ட்களின் விலையை மாற்றியமைத்துள்ளோம்.
இந்திய நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அதிநவீன மற்றும் நிலையான எலெக்ட்ரிக் வாகனங்களை தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கு BYD நிறுவனத்தில் இருந்து மேலும் ஒரு உற்சாகமான செய்தி காத்திருக்கிறது.
BYD நிறுவனம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது புகழ்பெற்ற DM-i பிளக்-இன் ஹைப்ரிட் (plugin hybrid) தொழில்நுட்பத்தை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அதிநவீன மெக்கானிசம் முதலாவதாக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் Seal-U SUV காரில் அறிமுகமாக உள்ளதால், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் உலகமே இதன் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு புது, புது தயாரிப்புகளுடன் BYD நிறுவனம் இந்தியாவில் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்த காத்திருக்கும் நிலையில், அதன் முதல் பகுதியாக இமேக்ஸ்7 எலெக்ட்ரிக் காரில் புதியதாக கம்ஃபர்ட் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் சுப்பீரியர் வேரியண்ட் அளவிற்கு பணத்தை செலவு செய்ய விரும்பாதவர்களுக்கு புதிய கம்ஃபர்ட் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications