1,200 கிமீ ரேஞ்சு கொண்ட காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் நிறுவனம்.. வசதிகளும் மிரட்டி விட்டாங்க!
இந்தியாவில் அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது சீனாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான BYD. இந்திய சந்தை பிளக்-இன் கார்களுக்கு முன்பை விட சற்று அகலமாகவே கதவுகளைத் திறக்கக் காத்திருக்கிறது. இதனால் முதலில் பயனடையப்போவது சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தான். பல்வேறு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை வெளியிடத் தயாராகி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வரும் BYD நிறுவனம் புதிய பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்ற வகையில் லியோபர்டு 8 (Leopard 8) என்ற புதிய பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவி மாடல் ஒன்றையும் இந்தியாவில் காப்புரிமைக்காக அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

கடந்த மாதங்களில் டென்ஸா Z9 GT மற்றும் டென்ஸா N9 உள்ளிட்ட கார் மாடல்களையும் இந்தியாவில் காப்புரிமைக்கு அந்நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. அந்த வரிசையில் லியோபர்டு 8 மாடலும் புதிதாக இணைந்திருக்கிறது. வெளிநாடுகளில் இதனை ஃபேங்செங்போவ் போவ் 8 மற்றும் டென்ஸா D8 உள்ளிட்ட வேறு சில பெயர்களிலும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்தப் புதிய லியோபர்டு 8 எஸ்யூவி குறித்த தகவல்களை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவி என்றவுடன் முதலில் இந்தக் கார் என்ன வகையான பவர்ட்ரெயினைக் கொண்டிருக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான் அனைவருக்கும் எழும். இந்தக் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 36.8 kWh பிளேடு பேட்டரி மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் அடங்கிய ஹைபிரிட் பவர்ட்ரெயின் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டப்பானது ஒட்டுமொத்தமாக 748 hp பவர் மற்றும் 760 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

முழுவதுமாக எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரியை மட்டும் பயன்படுத்தி 100 கிமீ வரை பயணிக்கும் திறனைக் கொண்டுள்ளது இந்த பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் கார். ஒட்டுமொத்தமாக பெட்ரோல் டேங்குடன் சேர்த்து 1200 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது. மேலே குறிப்பிட்ட ஹைபிரிட் பவர்ட்ரெயின் செட்டப்பைக் கொண்டு மணிக்கு 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.8 நொடிகளில் எட்டும் திறனையும் இந்த ஹைபிரிட் எஸ்யூவி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அளவில் மிகவும் பெரிய காராகவே இந்த BYD லியோபர்டு 8 இருக்கிறது. 5,195 மிமீ நீளம், 1,994 மிமீ அகலம் மற்றும் 1,905 மிமீ உயரத்தைக் கொண்டுள்ளது இந்தக் கார். ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால், டொயோட்டாவின் ஃபார்ச்சூனரை விட பெரிய கார் இது. ஃபார்ச்சூனர் எஸ்யூவியே 4,795 மிமீ நீளம், 1,855 மிமீ அகலம் மற்றும் 1,835 மிமீ உயரத்தையே கொண்டிருக்கும். அதனைவிடப் பெரியது என்றால் இந்த லியோபர்டு 8 எஸ்யூவி ரோடு பிரசன்ஸில் மிரட்டிவிடும்.
ரக்கடான எஸ்யூவி என்றாலும் அனைத்து வகையான மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களையும் கொண்ட காராகவே இந்த லியோபர்டு 8 இருக்கிறது. இந்தக் காரின் உள்ளே 17.3 இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் கோ-டிரைவர்ஸ் டிஸ்பிளே, ஃபிளாட்டான பாட்டம் கொண்ட ஸ்டீயரிங் வீல், 50 இன்ச் AR வசதியுடன் கூடிய ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும், வயர்லெஸ் சார்ஜர், சென்டர் கண்சோலுக்கு ஃப்ளோட்டிங் எஃபெக்ட், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம், ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய வசதிகளையும் கொண்டிருக்கிறது. 2+2+2 மற்றும் 2+3+2 என இரண்டு விதமான சீட்டிங் லேஅவுட் தேர்வுகளுடன் வெளிநாடுகளில் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர்தரமான வசதிகளுடனேயே இந்தக் காரை BYD வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்பை விட நிறைய நிறுவனங்கள் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை இந்தியாவிற்குக் கொண்டு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சொகுசு மற்றும் ப்ரீமியம் கார் தயாரிப்பு நிறுவனங்களே பிளக்-இன் ஹைபிரிட்களை இந்தியாவிற்குக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. மெர்சிடீஸ் பென்ஸ், BYD மற்றும் செரியுடன் கூட்டணி அமைத்து எம்ஜி மோட்டார் ஆகிய நிறுவனங்களின் பிளக்-இன் ஹைபிரிட் கார்களை விரைவில் நாம் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications