லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை காப்பியடித்ததாக சர்ச்சை? BYD அலுவலகங்களில் அதிரடி சோதனை!
மின்சார வாகனத் தயாரிப்பில் பிரபலமாக உள்ள சீனாவை சேர்ந்த BYD கார் நிறுவனம் கார் டிசைனை நகலெடுத்து புதிய காரை தயாரித்து விற்பனை செய்வதாக புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்நிறுவனத்தின் Ti7 என்ற புதிய எஸ்யூவியின் வடிவமைப்பு தொடர்பாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, பிஒய்டி நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் வாகன உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரின் வடிவமைப்பை BYD நிறுவனம் நகலெடுத்து Ti7 என்ற புதிய எஸ்யூவியை வடிவமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் BYD நிறுவனத்திற்கு, இந்தப் புகார் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இதையடுத்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நெதர்லாந்து நாட்டில் ஸ்கீடாம் மற்றும் ஹூஃப்டார்ப் நகரங்களில் செயல்பட்டு வரும் BYD அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையின்போது வழக்கிற்குத் தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BYD நிறுவனத்திடம் இருக்கும் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்புள்ளதாகக் கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியின் டிசைன் அம்சங்களை நகலெடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் BYD Ti7 எஸ்யூவி, கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உற்பத்தியில் உள்ளது. லேண்ட்ரோவர் டிஃபென்டர் 110 எஸ்யூவிக்கு நெருக்கமான அம்சங்களை கொண்ட இந்த பிஒய்டி எஸ்யூவி 5 மீட்டர் நீளம் கொண்டது. குறிப்பாக, வெளிப்புற வடிவமைப்பில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இந்த இரண்டு கார்களையும் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, அவற்றுக்கிடையேயான ஒற்றுமை அதிகமாகத் தெரிவதாகக் கூறப்படுகிறது. காரின் பாக்ஸி வடிவமைப்பு, உயரமான தோற்றம், வெளிப்புற அமைப்பு ஆகியவை டிஃபென்டர் காரை நினைவுபடுத்துகின்றன. இதனால் சர்வதேச வாகன ஊடகங்களிலும் BYD Ti7 அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

பிரிட்டனின் பிரபல வாகன இதழான பிபிசி டாப் கியர் கூட, BYD Ti7 காரை சீன டிஃபென்டர் காப்பி என்று குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இரண்டு கார்களின் விலையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. வடிவமைப்பில் ஒற்றுமைகள் இருந்தாலும், இரண்டு கார்களின் தொழில்நுட்பங்களில் அதிக வேறுபாடுகள் உள்ளன. லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் 6 சிலிண்டர் கொண்ட வி8 எஞ்சின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. ஆனால் BYD Ti7 காரில் 1.5 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஹைபிரிட் அமைப்பில் 35.6 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் இரண்டு மின்சார மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, முழுமையான மின்சாரத்தில் இயங்கும் Ti7 மாடலையும் BYD நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சர்வதேச விற்பனைத் திட்டம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சீன நிறுவனங்களின் கார் வடிவமைப்புகள் தொடர்பாக ஜாகுவார் லேண்ட் ரோவர் ஏற்கனவே சட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் இவோக் காரை ஒத்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட லேண்ட்விண்ட் X7 விவகாரத்தில் JLR நிறுவனம் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றது. அந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
இப்போது BYD நிறுவனத்துடனான இந்தப் புதிய சட்டப் பிரச்சினையும் வாகன உலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாளை நெதர்லாந்தின் தி ஹேக் நகர நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியவரும். BYD நிறுவனமும், ஜாகுவார் லேண்ட் ரோவரும் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்கவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால் கருத்து கூற முடியாது என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
Source: The Times


Click it and Unblock the Notifications


