டாடா டியாகோ EV-க்கு போட்டியா ரொம்ப கம்மி விலையில் இந்தியாவில் வெளியாகும் எலெக்ட்ரிக் கார் இது தான்
குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார். இது தான் இப்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஒரு எண்ணமாக இருக்கும். 15 லட்சம் ரூபாய்க்கு கீழான விலையில் மிகச் சில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார் மற்றும் சிட்ரன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே.
10 லட்சம் ரூபாய் விலைக்கும் கீழ் என்று எடுத்துக் கொண்டால் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி மோட்டார் மட்டும் தான். அதுவும் இரண்டே இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் தான். ஆனால் 10 லட்சம் ரூபாய்க்கும் கீழ் தான் எரிபொருள் கார்கள் பிரிவில் பெரிய சந்தையே இந்தியாவில் இயங்கி வருகிறது. ஆனால் அந்த விலைப்பட்டிலுக்குள் புதிய காரை வெளியிட எந்தவொரு நிறுவனமும் தற்போது வரை ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு முக்கியமான ஒரு காரணம், எலெக்ட்ரிக் கார்களை அவ்வளவு குறைவான விலையில் தயாரிக்க முடியாது என்பது தான். மற்ற அனைத்து அம்சங்களையும் ஏதோ ஒரு வகையில் விலைக்குறைப்புக்குள் கொண்டு வந்தாலும் கூட, பேட்டரியைக் கொண்டு வர முடியாது. குறைவான விலையில் தரமில்லாத பேட்டரியைக் கொடுக்க முடியாது. அது கார் பயன்பாட்டில் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.
எனவே தான் பெரும்பாலான நிறுவனங்கள் 15 லட்சத்திற்கும் மேலான விலையிலேயே எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டு வருகின்றன. கூடுதல் விலை என்றாலும், ப்ரீமியமான அம்சங்கள், ப்ரீமியமான டிசைன் மற்றும் தரமான கட்டுமானம் என அதற்கேற்ற வகையில் விலைக்கேற்ற காராக அவற்றைக் கொடுக்கின்றன. இந்த இடத்தில் தான் BYD வேறுபடுகிறது.

சீனாவைச் சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் மிகவும் குறைவான விலையில் தரமான, தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவிலும் ஓரளவிற்கு போட்டியிடும் வகையிலான விலையில் எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் பேட்டரி தயாரிப்பு சீனாவில் மிகவும் மலிவு என்பது தான். பேட்டரிக்கான மூலப் பொருட்களின் கிண்ணமாக சீனாவே இருக்கிறது.
எனவே BYD மட்டுமல்லாது, நிறைய சீன ஆட்டோமொபைல் நிறுவனங்களால், குறைவான விலையிலேயே தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட, தரமான எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிகிறது. மேலும், அதனை வெளிநாடுகளுக்கு போட்டியிடும் விலையில் ஏற்றுமதி செய்யவும் முடிகிறது. இந்தியாவில் அப்படி விலை குறைவான ஒரு கார் வெளியானால் எப்படி இருக்கும்.
சீனாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் BYD வெளியிடலாம் எனக் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. BYD-யின் விலை குறைவான காராக சீகல் (Seagull) சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் டால்பின் மினி (Dolphin Mini) என்ற பெயரில் இந்தக் காரை விற்பனை செய்து வருகிறது BYD.
இந்தக் காரையே இந்தியாவிலும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் மிகவும் குறைவாக, இந்திய மதிப்பிற்கு 9 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது BYD. இந்தியாவிலும் சீகல் என்ற பெயரை அந்நிறுவனம் டிரேடுமார்க செய்ததைத் தொடர்ந்தே, இதனை இந்தியாவிலும் அந்நிறுவனம் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சீகல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் BYD வெளியிடுவது வரவேற்கக்கூடிய விஷயம் தான். எனினும் இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை BYD தயாரித்தால் தான் நாம் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கு மிகவும் குறைவான விலையில் இந்தக் காரை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிட முடியும் என்பது தான் கசப்பான உண்மை. எனினும் ஏதாவது ஒரு வகையில் இதனை முடிந்தளவிற்கு குறைவான விலையில் வெளியிடவே அந்நிறுவனம் முயற்சி செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications