1,000 கிமீ ரேஞ்ச்... பிஒய்டி சீல் யு ஹைப்ரிட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்... விரைவில் அறிமுகமாகிறது
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையில் ஏற்கனவே வலுவான இடத்தை பிடித்துள்ள சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம், அடுத்த கட்டமாக Plug-in Hybrid (PHEV) வகை மாடல்களையும் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அந்த வரிசையில் நிறுவனத்தின் முதல் ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலாக BYD Seal U என்ற புதிய கார் மாடலை விரைவில் இந்தியாவில் களமிறக்க உள்ளது.
இந்த கார் தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகள் செய்யப்படும் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளன. இதே கார் சில வெளிநாடுகளில் Sealion 6 என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பிஒய்டி சீல் யு PHEV கார் இந்தியாவில் கடந்த மே மாதத்திலும் சோதனையில் வைக்கப்பட்டு இருந்தது.

ரேஞ்ச் டெஸ்ட்
இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த கார் இந்தியாவில் வைத்து ரேஞ்ச் டெஸ்டிங் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இந்திய அறிமுகத்துக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது உறுதியாகிறது. தற்போதைய தகவல்களின்படி, இந்த புதிய ஹைப்ரிட் எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
இந்த ஹைப்ரிட் எஸ்யூவி கார் 4.8 மீட்டர் நீளமும் கொண்ட 5 பேர் செல்லும் எஸ்யூவியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காருக்கு இணையான பரிமாணத்தில் இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் Seal U காரின் வடிவமைப்பு, பிஒய்டி நிறுவனத்தின் தற்போதைய எஸ்யூவி மாடல்களுடன் ஒற்றுமை கொண்டிருந்தாலும், PHEV தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சில தனித்துவமான அம்சங்களை பெற்றுள்ளது.
ஹைப்ரிட் சிஸ்டம்
பிஒய்டி சீல் யு காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார், ஜெனரேட்டர் மற்றும் பிளேடு பேட்டரி ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் காரை எலெக்ட்ரிக் மோட்டார் மூலமாக இயக்கும் வாய்ப்பை வழங்கும். பேட்டரியில் சார்ஜ் குறையும் போது பெட்ரோல் எஞ்சின் ஜெனரேட்டராக செயல்பட்டு மின்சாரத்தை உருவாக்கும். அதிக பவர் தேவைப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே பெட்ரோல் எஞ்சின் நேரடியாக சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும் வகையில் இந்த ஹைப்ரிட் தொழில்நுட்ப அமைப்பு செயல்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள மாடலில் 18.3kWh பிளேடு பேட்டரி கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. பேட்டரியில் உள்ள மின் ஆற்றலை பயன்படுத்தி 126 கி.மீ வரை பயணிக்கும் வாய்ப்பு கொடுக்கும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் பேட்டரியை 30 முதல் 80 சதவீதம் வரை சுமார் 35 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். முழுமையான ஹைபிரிட் பயன்பாட்டில் சுமார் 1,080 கி.மீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என நிறுவனத்தின் சோதனை நிலை தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்திய மாடலின் பவர் வேறுபடலாம்
சர்வதேச சந்தையில் சீல் யு PHEV-ன் ஆல் வீல் டிரைவ் மாடல் அதிகபட்சமாக 323எச்பி பவரையும் மற்றும் 550என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள மாடலின் பவர் மற்றும் ரேஞ்ச் மாறக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் பிஒய்டி சீல் யு PHEV ஹைப்ரிட் காரின் விலை சுமார் ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.
ரேஞ்ச் பிரச்னையை கருதி, முழுமையான எலெக்ட்ரிக் காருக்கு மாற தயங்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த காரை கொண்டு வருவதற்கு பிஒய்டி திட்டமிட்டுள்ளது. மேலும், தினசரி நகரப் பயணங்களை பேட்டரி சக்தியில் மேற்கொள்ளவும், நீண்ட தூர பயணங்களில் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தியும் செல்ல முடியும். இந்த PHEV வகை ஹைப்ரிட் எஸ்யூவி மூலமாக தனது வர்த்தகத்தையும், விற்பனை எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்த முடியும் என்று பிஒய்டி நம்புவதாக தெரிகிறது.
Image Source: Autocarindia


Click it and Unblock the Notifications


