பெட்ரோல் இல்லாத நேரத்தில் எலெக்ட்ரிக் பவரில் ஓட்டலாம்! நெடுஞ்சாலையில் சென்ற விசித்திரமான சீன கார்!
பி.ஒய்.டி நிறுவனத்தின் புதுமையான கார் ஒன்று இந்திய சாலைகளில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விற்பனையில் உள்ள இந்த பிஒய்டி கார் ஆனது ஓர் ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, இதில் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இது வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பிஒய்டி சீலயன் 6 என்கிற பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.
இந்த கார் இந்தியாவில் பொது வெளியில் நெடுஞ்சாலை ஒன்றில் ஓட்டிப் பார்க்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் 'மோட்டாரிங்_வித்_மனாஸ்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின்போது சீலயன் 6 கார் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை என்பது இந்த படங்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.

இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன் நுழைந்த சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் புதியதாக பல்வேறு விதமான கார்களை அறிமுகம் செய்யவும் இந்தியாவில் பிஒய்டி தயாராகி வருகிறது. அத்தகைய புதிய பிஒய்டி கார்களில் ஒன்றுதான், சீலயன் 6 பிளக்-இன் ஹைப்ரீட் கார் ஆகும்.
இந்த 2026ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக தற்போது சோதனை ஓட்டத்தின்போது இந்தியாவில் சீலயன் 6 அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பிஒய்டி ஹைப்ரீட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்படுவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பும் சிலமுறை அடையாளம் காணப்பட்டு இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள படங்களில், காரின் பின்பக்கத்தை பார்க்க முடிகிறது. பின்பக்கத்தில், நேர்த்தியாக பொருத்தப்பட்ட பின்பக்க விண்ட்ஷீல்டு, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட டெயில்லேம்ப்கள் மற்றும் முரட்டுத்தனமான வடிவம் கொண்ட பின்பக்க பம்பரை பார்க்க முடிகிறது. இதில், பின்பக்க பம்பரில் மெட்டாலிக் ஹைலைட்கள் இடம்பெற்றுள்ளன. பிஒய்டி சீலயன் 6 கார் ஆனது 4,775மிமீ அளவிற்கு நீளம் கொண்ட ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி வகை கார் ஆகும்.
இந்த காரின் அகலம் 1,890மிமீ மற்றும் உயரம் 1,670மிமீ ஆகும். காரின் முன் மற்றும் பின் சக்கரங்கள் 2,765மிமீ தூரத்தில் உள்ளன. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிஒய்டி சீலயன் 7 எலெக்ட்ரிக் காரை காட்டிலும் சீலயன் 6 ஓர் பக்காவான எஸ்யூவி காராக காட்சியளிக்கிறது.
அதாவது, சீலயன் 7 காரை காட்டிலும் சீலயன் 6 நிமிர்ந்த உடலமைப்பை கொண்டுள்ளது. சீலயன் 6 காரின் வெளிப்பக்கத்தில் ஷார்ப்பான வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள் & DRL-கள், வளைவான டிசைன் கொண்ட பொனெட், காரின் உடல் நிறத்தில் கதவு கைப்பிடிகள், க்ரோம் பார்டர்களை கொண்ட ஜன்னல் கண்ணாடிகள், 19 இன்ச்சில் பெரிய அளவில் அலாய் சக்கரங்கள் மற்றும் சறுகலான மேற்கூரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் இந்த காரின் உட்புறத்தில் டாஷ்போர்டில் இரு திரைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் அளவில் பெரியதாக 15.6 இன்ச்சில் வழங்கப்படும் சுழற்றக்கூடிய டச் ஸ்க்ரீன் ஆனது பொழுதுப்போக்கிற்கானது மற்றும் 12.3-இன்ச் எல்சிடி திரை ஆனது டிரைவருக்கு தேவையான விபரங்களை காட்டக்கூடியது ஆகும். 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன்களில் சீலயன் 6 விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எப்படியாவது ஹைப்ரீட் கார்களுக்கான மார்க்கெட்டை பெரியதாக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்களுள் பிஒய்டி ஒன்றாகும். ஏனெனில், எலெக்ட்ரிக் கார்களை அதிகமாக பிஒய்டி விற்பனை செய்தாலும், அதற்கேற்ற சூழல் இன்னும் இந்தியாவில் முழுமையாக உருவாகவில்லை. இதனால் அதுவரையில் ஹைப்ரீட் கார்களை விற்பனை செய்ய முயச்சிக்கும் பிஒய்டி நிறுவனம் அதன் ஒரு பகுதியாகவே தற்போது சீலயன் 6 கார் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications