பண்டிகை கால ஸ்பெஷல்! BYD சீ லயன் 7 புதிய எடிஷன் அறிமுகம்: 150 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, BYD நிறுவனம் தனது சீ லயன் 7 (SEALION 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. SEALION 7 Festive Edition எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய மாடல், ரூ.50.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்தப் புதிய எடிஷன், சீ லயன் 7 பிரீமியம் (Premium) வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேக கருப்பு மற்றும் சந்தன வண்ணத்திலான இன்டீரியர் தீம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வெறும் 150 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால், இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியை வாங்க விரும்புபவர்கள் விரைவாக முன்பதிவு செய்வது அவசியம்.

லிமிட்டேட் எடிசன்
புதிய சீ லயன் 7 Festive Edition காரின் முக்கிய சிறப்பம்சம் அதன் இரட்டை வண்ணத்திலான பிரிமீயம் இன்டீரியராக குறிப்பிடலாம். இது காரின் உட்புறத்தை மிகவும் உயர்தர உணர்வையும் மற்றும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. மற்றபடி, வழக்கமான சீ லயன் 7 Premium மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய தொழில்நுட்ப வசதிகளும் செயல்திறன் அம்சங்களும் இதில் தொடர்கின்றன.
BYD இந்தியா நிறுவனம் தனது 'Celebrate Your Dreams with BYD' என்ற பண்டிகைக் காலப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்படும் இந்த மாடல், வழக்கமான எலக்ட்ரிக் எஸ்யூவியில் இருந்து தனித்துவமான உட்புற வடிவமைப்பைக் கொண்ட காரை விரும்புபவர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்டரி, ரேஞ்ச் மற்றும் செயல்திறன்
சீ லயன் 7 Festive Edition காரில் 82.56kWh திறன் கொண்ட பிளேடு பேட்டரி (Blade Battery) வழங்கப்பட்டுள்ளது. BYD நிறுவனத்தின் செல்-டு-பாடி (Cell-to-Body - CTB) தொழில்நுட்பம் மற்றும் இன்டெலிஜென்ட் டார்க் அடாப்டேஷன் கண்ட்ரோல் (iTAC) தொழில்நுட்பமும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தக் காரின் பிரீமியம் வேரியண்ட் மோட்டார் அதிகபட்சமாக 230 kW ஆற்றலையும் 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் பயணத் தூரம் (Range) NEDC சோதனை முறையின்படி 567 கிமீ என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நடைமுறைப் பயன்பாட்டில் கிடைக்கும் ரேஞ்ச், ஓட்டும் முறை, சாலை நிலைமைகள் மற்றும் ஏர் கண்டிஷனிங் பயன்பாடு உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து மாறுபடும்.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்
இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் 15.6 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குயில்ட் நப்பா லெதர் இருக்கைகள், மின்சார சன்ஷேடுடன் கூடிய பனோரமிக் கண்ணாடி கூரை மற்றும் ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தக் காரில் 11 ஏர்பேக்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஐரோப்பிய யூரோ என்சிஏபி (Euro NCAP) பாதுகாப்புச் சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இதனால், செயல்திறன் மற்றும் பிரீமியம் வசதிகளுடன் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மாடல் ஒரு தேர்வாக அமையும்.
இந்தியாவில் SEALION 7 காருக்கு வரவேற்பு
கடந்த ஆண்டுதான் BYD சீ லயன் 7 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை இந்தியா முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் இந்த மாடல் பெற்றுள்ள வரவேற்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய Festive Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.50.60 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகமாகியுள்ள பிஒய்டி சீ லயன் 7 Festive Edition மாடலானது வழக்கமான பிரீமியம் வேரியண்ட்டின் தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய இன்டீரியர் வடிவமைப்பை வழங்குகிறது. இதன் 82.56 kWh பேட்டரி மூலமாக 567 கி.மீ ரேஞ்ச் மற்றும் 150 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை என்ற அம்சங்கள் இதன் முக்கிய சிறப்புகளாக உள்ளன. சொகுசு எலெக்ட்ரிக் கார் சந்தையில் முக்கிய தேர்வாக இருந்து வரும் பிஒய்டி சீ லயன் 7 காரை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்தப் புதிய எடிஷன் கூடுதல் தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications


