வெறும் 9 நிமிஷத்துல சார்ஜ் ஆகும் எலெக்ட்ரிக் காரை வெளியிட்டுள்ள நிறுவனம்.. விலையும் ரொம்ப கம்மி தான்!
சீனாவைச் சேர்ந்த BYD நிறுவனம் புதிதாக 'சாங் அல்ட்ரா' (Song Ultra) என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியிட்டுள்ளது. அந்நாட்டில் டைனாஸ்டி மற்றும் ஓஷன் என இரண்டு சீரிஸ்களாக எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது BYD. அந்த வகையில் புதிய சாங் அல்ட்ராவை டைனாஸ்டி சீரிஸ் லைன்அப்பில் ஒன்றாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை பல்வேறு சிறப்பம்சங்களுடன் BYD உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்தக் காரில் அந்நிறுவனம் உருவாக்கியிருக்கும் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, மின்னல் வேக சார்ஜிங் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மிக விரைவாகவே இதில் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்து விட முடியும். சரி, என்னென்ன மேம்பட்ட அம்சங்களுடன் இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் இதன் அதிவேக சார்ஜிங் திறனைப் பற்றிப் பார்த்துவிடலாம். இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 68.4 kWh மற்றும் 82.7 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது BYD. இதில் சிறிய பேட்டரி பேக்கானது 620 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 710 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையும் கொண்டுள்ளது.
இந்த பேட்டரி பேக்குகளை 10% முதல் 70% வரை வெறும் 5 நிமிடங்களிலும், 10% முதல் 97% வரை வெறும் 9 நிமிடங்களிலும் மிகவும் அதிவேகமாக சார்ஜ் செய்து விட முடியும் எனத் தெரிவித்துள்ளது BYD. அப்படியென்றால் வழக்கமாக எரிபொருள் காரில் பெட்ரோல் நிரப்பும் நேரத்திலேயே இந்த எலெக்ட்ரிக் காரை நாம் சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது எலெக்ட்ரிக் கார் சந்தையிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அம்சம் என்றால் அது மிகையாகாது.

இந்த அதிவேக சார்ஜிங் வசதியைக் கடந்து, இந்தக் காரின் விலை தான் இன்னும் ஆச்சரியப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சீனாவில் 1.52 லட்சம் யுவான் முதல் 1.80 லட்சம் யுவான் வரையிலான விலையில் இந்த எலெக்ட்ரிக் கார் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இந்திய மதிப்பிற்கு இதன் விலை ரூ.20.81 லட்சம் முதல் ரூ.24.64 லட்சம் வரை மட்டும் தான். குறைவான விலையிலேயே மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட எலெக்ட்ரிக் காராக இதனை வெளியிட்டிருப்பது தான், இந்த சாங் அல்ட்ரா EV-யை இன்னும் வசீகரமானதாக்குகிறது.
இந்த எலெக்ட்ரிக் காரின் மற்ற அம்சங்களை இப்போது பார்க்கலாம். இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் சிறிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட்களில் 326 hp பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும், பெரிய பேட்டரி பேக் கொண்ட வேரியன்ட்களில் 367 hp பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வேரியன்ட்களிலும் டார்க்கின் அளவு 305 Nm தான். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பின் உதவியுடன் அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது BYD-யின் புதிய சாங் அல்ட்ரா EV.
இந்தக் காரில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 15.6 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 26 இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள், 10 பாயின்ட் மஸாஜ் மற்றும் 8 வே அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட டிரைவர் சீட், 3D ஆம்பியன்ட் லைட்டிங், டைசஸ்-C இன்டலிஜன்ட் டேம்பிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள் மற்றும் ADAS அம்சங்கள் அடங்கிய பாதுகாப்பு வசதிகள் ஆகிய மேம்பட்ட வசதிகளை இந்த சாங் அல்ட்ரா EV கொண்டுள்ளது.
இந்தியாவிலும் BYD எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், இந்த அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட சாங் அல்ட்ரா EV இந்தியாவில் வெளியிடப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் தற்போது ஓஷன் சீரிஸைச் (Ocean Series) சேர்ந்த கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது BYD. டைனாஸ்டி சீரிஸை (Dynasty Series) சேர்ந்த எந்தக் காரையும் இதுவரை BYD இந்தியாவில் வெளியடவில்லை. எனவே இந்தப் புதிய சாங் அல்ட்ரா EV காரை வெளியிடும் வாய்ப்புகளும் குறைவு தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் கார் விற்பனையில் தற்போது சர்வதேச அளவில் BYD-யே முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. குறைவான விலையில், தினசரிப் பயன்பாட்டுக்கு நாம் எதிர்பார்க்கக்கூடிய வசதிகளை தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களில் கொடுத்து வருகிறது BYD. அந்த வரிசையில் தான் அதிவேக சார்ஜிங் வசதியையும் புதிய சாங் அல்ட்ரா EV-யில் கொடுத்துள்ளது.
இந்தக் குறிப்பிட்ட கார் மாடல் இந்தியாவிற்கு வரும் வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில் BYD கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. BYD என்ன செய்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








