1000 கிமீ ரேஞ்சு தரக்கூடிய காரை இந்தியாவில் வெளியிடும் நிறுவனம்.. விலையும் ரொம்ப கம்மி
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது சீனாவைச் சேர்ந்த BYD. தற்போது இந்தியாவில் புதிய கார் ஒன்றை வெளியிடவிருப்பது குறித்த டீஸர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது வரை எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம், முதல் முறையாக பிளக்-இன் ஹைபிரிட் காரை வெளியிடவிருப்பதாக டீஸரில் குறிப்பிட்டுள்ளது.
'BYD DM-i' என டீஸரில் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. DM-i என்பது சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களில் BYD பயன்படுத்தி வரும் பிளக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. அதாவது இந்தியாவில் தற்போது நாம் பார்ப்பது போல ஸ்ட்ராங் ஹைபிரிட் அல்லது அதன் தொடர்ச்சியாக இருக்கும் பிளக்-இன் ஹைபிரிட் கிடையாது. மாறாக முழுமையான எலெக்ட்ரிக் காரில், இன்ஜினைக் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பம் ஆகும்.

குழப்பமாக இருக்கிறதா, சரி இங்கே தெளிவாக சொல்கிறேன். வழக்கமாக பிளக்-இன் கார் என்றால் எரிபொருள் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டையும் கொண்ட காராக இருக்கும். இதில் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டுமே காரை இயக்கப் பயன்படும். இதில் இருக்கும் பேட்டரியை நாம் தனியாக பிளக் செய்து சார்ஜ் செய்ய வேண்டும். அதனால் தான் இது பிளக்-இன் ஹைபிரிட் என்று அழைக்கப்படுகிறது.
மாருதி கிராண்டு விட்டாரா அல்லது ஹோண்டா சிட்டி போன்ற கார்களில் பயன்படுத்தப்படுவது ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரியை நாம் தனியாக சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. காரே தன்னுடைய இயக்கத்தின் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும். ஆனால் பிளக்-இன் ஹைபிரிட் கார்களில் கொடுக்கப்படுவதை விட ஸ்ட்ராங் ஹைபிரிட் கார்களில் சற்று சிறியே பேட்டரியே கொடுக்கப்படும்.

இப்போது BYD-யின் DM-i (Dual Mode Intelligence) தொழில்நுட்பத்திற்கு வருவோம். இங்கே காரானது முழுவதுமாக எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்டே இயக்கப்படும். இந்த எலெக்ட்ரிக் மோட்டாருடன் ஒரு பெட்ரோல் இன்ஜினும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த பெட்ரோல் இன்ஜின் நேரடியாக காரை இயக்கப் பயன்படாது. மாறாக, காரின் பேட்டரியை சார்ஜ் செய்யவே பயன்படும். அதாவது ஒரு ஜெனரேட்டர் போல செயல்படும். பேட்டரியின் மூலம் எலெக்ட்ரிக் மோட்டார்கள் இயக்கப்படும், அதன் மூலமே கார் இயங்கும்.
இதன் மூலம் என் நன்மை என்றால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் இன்ஜின் அனைத்து நேரமும் சீராக ஒரே வேகத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவிற்கு இயங்கினால் போதும். இதனால் அதிகளவிலான மைலேஜை நாம் பெற முடியும். அதே நேரம் முழுவதுமாக எலெக்ட்ரிக் காரின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம். வழக்கமான ஹைபிரிட் கார்கள் மற்றும் எரிபொருள் கார்களுக்கு இடையேயான பாலமாக இந்த வகையிலான பிளக்-இன் ஹைபிரிட் கார் இருக்கிறது.
இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய காரையே இந்தியாவில் வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளது BYD. ஆனால் என்ன கார் என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னர் இந்தியாவில் BYD-யின் செயல்பாடுகளை வைத்து, சர்வதேச அளவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் அட்டோ 2 (Atto 2) அல்லது சீலயன் 6 (Sealion 6) ஆகிய கார்களில் ஒன்றை இந்தியாவில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரண்டு கார்களையுமே இந்திய சாலைகளில் BYD கடந்த காலங்களில் சோதனை செய்திருக்கிறது. இதில் அட்டோ 2 காரையே அந்நிறுவனம் வெளியிடலாம் என நாங்கள் நினைக்கிறோம். காரணம், இரண்டில் குறைவான விலை கொண்ட கார் அது தான். 4.3 மீட்டர் அளவில் இருக்கும் இதனை 25 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் இந்தியாவில் BYD-யால் வெளியிட முடியும். மேலும் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் தான் இப்போது நிறைய கார் மாடல்கள் வெளியாகி வருகின்றன.
சீலயன் 6 4.7 மீ அளவில் ப்ரீமியமான மாடலாக இருக்கும் என்றாலும், 45 லட்சம் ரூபாய்க்கு மேல் மிகவும் குறைவான வாடிக்கையாளர் வட்டத்தை மட்டுமே கவர முடிகிற காராகவும் இருக்கும். எனவே அதிக வாடிக்கையாளர்கள் புழங்கும் பிரிவிலேயே தங்களது முதல் பிளக்-இன் ஹைபிரிட் காரை BYD வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கார்களுமே பெட்ரோல் டேங்குடன் சேர்த்து 1000 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications