டிஃபென்டர் பஞ்சாயத்தே முடியல... அதற்குள் ரோல்ஸ் ராய்ஸ் மாதிரியே ஒரு புதிய காரை அறிமுகப்படுத்திய BYD!
வெளிநாட்டு நிறுவனங்களின் பிரபலமான கார்களின் டிசைனை அச்சு அசலாக காப்பிடித்து புதிய மாடல்களை தயாரித்து விற்பனை செய்து சீன நிறுவனங்கள் கல்லா கட்டுவது புதிய விஷயமல்ல. கடந்த ஆண்டுகளில் பலமுறை இதுகுறித்த செய்திகளை நாம் வழங்கி வந்துள்ளோம். அதுவும் நீதிமன்றம் வரை சென்று குட்டுப்பட்ட விஷயங்கள் குறித்த கதைகள் சீன நிறுவனங்களுக்கு புதிதல்ல.
ஆனால், இந்த விஷயத்தில் தற்போது உலக அளவில் மின்சார கார் தயாரிப்பில் பிரபலமாக இருந்து வரும் பிஒய்டி நிறுவனமும் சிக்கி இருப்பதுதான் பலருக்கு சற்றே அதிர்ச்சியை தந்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து அசரடித்து வரும் பிஒய்டி நிறுவனம் லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியை ஜெராக்ஸ் எடுத்தது போல Ti7 என்ற எஸ்யூவியை உருவாக்கி விட்டதாக டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இதுகுறித்து சென்ற செய்தியில் விரிவாப் பார்த்தோம்.

இந்த நிலையில், தற்போது பிஒய்டி நிறுவனத்தின் உயர்தர சொகுசு கார் பிராண்டான யாங்வாங் (Yangwang) பிராண்டில் யாங்வாங் ஆல்டியர் (Yangwang Altior) என்ற உயர்வகை புதிய எலெக்ட்ரிக் செடான் காரை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற உலகளாவிய அறிமுக நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், நேரடியாக ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் காருக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான தோற்றம், நவீன தொழில்நுட்பம், அதிநவீன சொகுசு வசதிகள் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் வகையில் BYD இந்த காரை உருவாக்கியுள்ளது. இது ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு போட்டியாக வரும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஆனாலும், இதன் டிசைனும் ரோல்ஸ்ராய்ஸ் காரை நினைவூட்டும் வகையில் இருப்பதுதான் இப்போதை ஹைலைட்டாக பேசப்படுகிறது.
பிரம்மாண்ட ஆடம்பர EV கார்
ஆல்டியர் காரின் வெளிப்புற வடிவமைப்பைப் பார்த்தால், பாரம்பரிய சொகுசு கார்களின் அடையாளங்கள் பலவும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக நீளமான பானட் முன்பகுதி, பிரம்மாண்டமான முன்பக்க கிரில், குரோம் அலங்காரங்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் ஆகியவை அப்படியே ரோல்ஸ் ராய்ஸ் கார்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.
இந்த கார் 5,600 மிமீ நீளமும், 2,030 மிமீ அகலமும், 1,590 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 3,500 மிமீ நீளம் கொண்டதால் உட்புறத்தில் மிக விசாலாமான இடவசதியை அளிக்கும். காரின் முன்பக்க கிரில் தனித்துவமான ஆபரண வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், காரை அணுகும்போது ஹெட்லைட்டில் உள்ள 12 விளக்குகள் சுழன்று ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ் அம்சங்கள்
இதன் மற்றொரு முக்கியமான அம்சம் பின்பக்க கதவுகளின் வடிவமைப்பாகும். முன்பக்க கதவுகள் 80 டிகிரி கோணத்திலும், பின்பக்க கதவுகள் 90 டிகிரி கோணத்திலும் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பின்பக்க கதவுகளில் குடைகளை வைப்பதற்கான தனிப்பட்ட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் காரின் ஒவ்வொரு அம்சமும் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துவதுடன் ரோல்ஸ்ராய்ஸ் அம்சங்களையும் நினைவூட்ட தவறவில்லை.
இந்த காரில் 4 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் அமர்பவர்களுக்கு அதிக இடவசதியை வழங்குவதற்காக தனித்தனி சொகுசு இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மசாஜ், வெதுவெதுப்பு மற்றும் குளிர்ச்சியை வழங்கும் வசதிகளுடன் இந்த இருக்கைகள் விமானப் பயண அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

சாய்மான இருக்கைகள்
மேலும், ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஓய்வெடுக்கும் வசதியைப் பெறலாம். அப்போது இருக்கைகள் பின்னால் சாய்ந்து, கால்களை நீட்டுவதற்கான வசதி கிடைக்கும். அதே நேரத்தில் சன் பிளைண்டுகள் மூடப்பட்டு, உட்புற விளக்குகள் மற்றும் ஒலியமைப்புகள் ஓய்வெடுப்பதற்கு ஏற்றவாறு தானாக மாற்றிக்கொள்ளும்.
பொழுதுபோக்கு வசதிகளிலும் இந்த கார் அசத்துகிறது. இதில் 39 ஸ்பீக்கர்களைக் கொண்ட டைனாடியோ (Dynaudio) ஒலி அமைப்பு, 21.4 அங்குல மேற்கூரை திரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் குளிர்சாதனப் பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் உள்ள பெட்டியில் உணவுப் பொருட்களை குளிர்விப்பதுடன் சூடாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
இன்டீரியர்
உட்புற வடிவமைப்பில் முழுமையான தரமுள்ள லெதர் இருக்கைகள், இயற்கையான மர அலங்கார பாகங்கள், கம்பள விரிப்புகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. காற்று வெளியேறும் துளைகளில் மஞ்சள் ஹெடியன் ஜேட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பாரம்பரிய பட்டு எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் உட்புற அலங்காரத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன.
இந்த காரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரத்திற்கும் தனித்தனியாக மோட்டார் மூலம் சக்தி வழங்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு சக்கரத்திற்கும் தேவையான டார்க்கை தனித்தனியாகக் கட்டுப்படுத்த முடியும். மேலும், இதில் டேங்க் டர்ன் (Tank Turn) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் குறுகிய இடங்களிலும் காரைத் திருப்ப முடியும்.
அடுத்ததாக, டயர் வெடிப்பு ஏற்பட்டாலும் காரின் நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. அவசரநிலையில் தண்ணீரில் மிதக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அடுத்த தலைமுறை டிசஸ் (DiSus) முழுமையான ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சாலையின் தன்மையை முன்கூட்டியே கணித்து, சஸ்பென்ஷனை நிகழ்நேரத்தில் மாற்றியமைக்கும் திறன் இதற்கு உள்ளது. இதனால் மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளிலும் பயணிகளுக்கு அதிக அதிர்வுகள் இல்லாத சவுகரியமான பயணத்தை வழங்க முடியும்.

1,000 கிமீ ரேஞ்ச்
இந்த காரில் BYD நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை பிளேட் பேட்டரி (Blade Battery) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரேஞ்ச் CLTC சோதனை முறையின் அடிப்படையிலானது. மேலும், ஃபிளாஷ் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வருமா?
இந்த கார் எக்ஸிகியூட்டிவ் மற்றும் பெஸ்போக் என இரண்டு விதமான பதிப்புகளில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, விற்பனை தொடங்கும் நாடுகள் உள்ளிட்ட விபரங்களை BYD இன்னும் உறுதிப்படுத்தவில்லை. குறிப்பாக இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதும் தெரியவில்லை. எதிர்காலத்தில் இந்த கார் சர்வதேச சொகுசு கார் சந்தையில் முக்கிய போட்டியாளராக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இதுவரை சொகுசு கார்களின் அடையாளமாக இருந்த ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி போன்ற நிறுவனங்களுக்கு BYD தனது யாங்வாங் பிராண்டின் மூலம் கடும் சந்தைப் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



