ரெனோ டஸ்டர் எஸ்யூவியின் அடிப்படை வேரியன்டை வாங்கலாமா? போதுமான வசதிகளைக் கொண்டுள்ளதா?
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி மாடல் என்றால் அது ரெனோவின் டஸ்டர் தான். இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கும் தங்களின் விற்பனையை மீட்டெடுக்கும் முயற்சியில் டஸ்டர் எஸ்யூவி காரை சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இந்தக் காரின் அடிப்படையான வசதிகள் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கின்றனவா, அதனை வாங்கலாமா என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
டஸ்டர் எஸ்யூவியை ஆத்தென்டிக், எவல்யூஷன், டெக்னோ, டெக்னோ பிளஸ், ஐகானிக் மற்றும் ஐகானிக் லாஞ்ச் எடிஷன் என ஆறு வேரியன்ட்களாக இந்தியாவில் வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது ரெனோ. இதில் ஆத்தென்டி (Authentic) தான் இந்த எஸ்யூவியின் அடிப்படை வேரியன்டாக இருக்கிறது. 10.49 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டிருக்கும் இந்த அடிப்படை வேரியன்டைக் குறித்து தான் இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.

முதலில் வெளிப்புறம் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் மற்றும் டிசைன் அம்சங்களைப் பார்க்கலாம். காரின் முகப்புப் பக்கத்தில் எக்கோ LED முகப்பு விளக்குகளும், அதற்கு மேலே LED DRLகளும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கம் கருப்பு நிறமே பிரதானமாகத் தென்படுகிறது. கிரில், ஸ்கிட் பிளேட் மற்றும் பம்பர் என அனைத்துமே விதவிதமான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிரில்லில் டஸ்டர் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வேரியன்ட் என்பதால் முன்பக்க பார்க்கிங் சென்சார் மற்றும் ஃபாக் விளக்குகள் ஆகியவை மிஸ்ஸிங். பக்கவாட்டில் 17 இன்ச் ஸ்டீல் வீல்களே கொடுக்கப்பட்டுள்ளன. பின்பக்கம் காரின் LED விளக்குகள் தான் ஆனால் உயர்நிலை வேரியன்ட்களில் இருப்பது போல கனெக்டட் ஒன்றாக இல்லை, ரூஃபில் ஸ்பாய்லர்கள், நான்கு பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை வேரியன்டில் ரூஃப் ரெயில்கள், சன்ரூஃப், ஷார்க் ஃபின் ஆண்டனா ஆகியவை மிஸ்ஸிங்.

இந்த அடிப்படை வேரியன்டில் ஸ்பேர் வீலை ரெனோ கொடுக்கவில்லை. மாறாக டயர் பஞ்சர் ரிப்பேர் கிட்டை மட்டுமே கொடுக்திருக்கிறது. பின்பக்கம் பூட்டில் பார்சல் டிரே கொடுக்கப்படவில்லை. அது இல்லாமல் 700 லிட்டர் பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது. பார்சல் ட்ரே இருந்தால் 518 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கும். பெரும்பாலான பயணங்களுக்கு இது போதுமானதாகவே இருக்கும்.
காரின் உள்ளே ஒன் டச் அப் அல்லது டவுன் வசதியுடன் கூடிய பவர் விண்டோக்கள், ஃபேப்ரிக் சீட்கள், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் டிரைவர் சீட், மேனுவல் ஏசி, டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய ஸ்டீயரிங் வீல், 7 இன்ச் TFT டிஸ்பிளே ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த பேஸ் வேரியன்டில் இல்லை.
பாதுகாப்பிற்காக இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்த அடிப்படை வேரியன்டில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வை அந்நிறுவனம் கொடுத்திருக்கிறது. உயர்நிலை வேரியன்ட்களில் எல்லாம் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.
6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினானது 100 hp பவர் மற்றும் 166 Nm டார்க்கைக் கொண்டுள்ளது. இந்த சிறிய டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படவில்லை. பெரிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடனேயே 6 ஸ்பீடு மேனுவலுடன் 6 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வை ரெனோ கொடுத்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அடிப்படை வேரியன்டை வாங்கலாமா?
அடிப்படையான வசதிகள் போதும், பட்ஜெட் முக்கியம் என்பவர்களுக்கு இந்த டஸ்டர் ஆத்தென்டிக் வேரியன்ட் ஓகேவாகனாகவே இருக்கும். வசதிகளில் தேவையானவற்றை கொடுத்திருக்கிறது ரெனோ. பாதுகாப்பு வசதிகளில் குறைவில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லாதது நகர வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும். இந்த இன்ஜின் சிறப்பானது தான் என்றாலும் போதுமான பெர்ஃபாமன்ஸை மட்டுமே கொண்டிருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications