பைக் வாங்கும் விலையில் ஹேட்ச்பேக் கார்கள்... 5 லட்ச ரூபா கூட விலை இல்லைனா கம்பெனிக்கு எப்படி கட்டுப்படி ஆகுது?
எஸ்யூவி (SUV) கார்கள், எம்பிவி (MPV) கார்கள் என இந்திய கார் மார்க்கெட் அடுத்தடுத்த நிலையை நோக்கிச் சென்றாலும், நம் மக்கள் மத்தியில் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. ஏனெனில், குறைந்த பட்ஜெட் விலையில் வாங்கக்கூடியவைகளாக ஹேட்ச்பேக் கார்கள் விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார்கள் என்றாலே நல்ல மைலேஜ் (Mileage) தரக்கூடியவை என்கிற பார்வையும் உள்ளது.
இதனாலேயே இந்தியாவில் தற்சமயம் ஏகப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட எல்லா கார் நிறுவனங்களும் குறைந்தது ஒரு ஹேட்ச்பேக் காரை ஆவது விற்பனை செய்கின்றன. அந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுவரும் ஹேட்ச்பேக் கார்களுள் தற்போதைய 2026 மார்ச் மாதத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso): இந்தியாவில் தற்போதைக்கு கிடைக்கும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் கார் இதுவாகும். வெறும் ரூ.3.50 லட்சத்தில் இருந்து இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் துவங்குகின்றன. இருப்பினும், எஸ்-பிரெஸ்ஸோவை அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாங்குவது இல்லை என்பது ஒவ்வொரு மாதமும் அதன் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): எஸ்-பிரெஸ்ஸோவை போல் இல்லாமல், மார்க்கெட்டில் கடந்த பல வருடங்களாகவே ஆல்டோ கார்கள் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. ஆரம்பத்தில் 800சிசி என்கிற அளவில் சிறியதான என்ஜின் உடன் ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது 1 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உடன் ஆல்டோ கே10 விற்பனை செய்யப்படுகிறது. இதன் பெயரில் உள்ள 'கே10' என்பதன் அர்த்தம், என்ஜினை குறிக்கிறது. ஆல்டோ கே10 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.70 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.

ரெனால்ட் க்விட் (Renault Kwid): ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் விலை குறைவானவைகளாக விளங்கும் நிலையில், க்விட் அதில் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக காராக விளங்குகிறது. ரூ.4.30 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் க்விட், ஸ்போர்டியான ஸ்டைல், அதிக கிரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் தொடுத்திரை அம்சங்களுடன் கிடைக்கிறது.
டாடா டியாகோ (Tata Tiago): குளோபல் என்சிஏபி (Global NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று, வலிமையான உடலமைப்பிற்கு பெயர் பெற்ற டியாகோ ரூ.4.57 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து கிடைக்கிறது. டியாகோ கார்கள் சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) ஆப்ஷனிலும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio): இந்திய கார் மார்க்கெட்டில் பெரியதாக கண்டுக்கொள்ளப்படாத தரமான மாருதி கார் இதுவென சொன்னால், அது மிகையில்லை. மாருதி கார்களுக்கு உண்டான தனி சிறப்பாக அதிக மைலேஜை வழங்கக்கூடியதாக செலேரியோ விளங்குகிறது. குறிப்பாக, சிஎன்ஜி ஆப்ஷனில் 26கிமீ-க்கும் அதிகமான மைலேஜை வழங்கும் இந்த ஹேட்ச்பேக் கார், பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.4.70 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
சிட்ரோன் சி3 (Citroen C3): தனித்துவமான ஐரோப்பியன் ஸ்டைல் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த சிட்ரோன் கார் ஏற்றதாக இருக்கும். விசாலமான கேபின் மற்றும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கக்கூடிய இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.4.99 லட்சத்தில் இருந்து கிடைக்கின்றன. இருப்பினும், சிட்ரோனுக்கு இன்னும் இந்தியா முழுவதும் அதிக அளவில் சர்வீஸ் மையங்கள் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைந்த விலையில் ஹேட்ச்பேக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த கார்கள் ஏற்றவையாக இருக்கும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5 லட்சத்தை கூட தாண்டவில்லை என்பதை கவனிக்கலாம். இவை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்திற்குள் அவ்வப்போது பயணிப்பதற்கு உகந்தவை. இவற்றில் எங்களது சாய்ஸ் எதுவென்று கேட்டால், மார்க்கெட்டில் நீண்ட கால மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆல்டோ கே10 ஆகும்.


Click it and Unblock the Notifications








