அம்பாசிடர் சாயலில் கிடைக்கும் ஆறு எஸ்யூவி கார்கள்! இதுக்கு அப்புறம் இதே மாதிரி நிறைய கார்கள் வரும்!
இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூபே (Coupe)-ஸ்டைலிலான எஸ்யூவி (SUV) கார்கள் என்றால் பலருக்கு தெரியாது. ஏனெனில், அந்த அளவிற்கு இத்தகைய எஸ்யூவி கார்கள் இந்திய மக்களுக்கு பரீட்சையமானதாக இல்லை. வெளிநாடுகளில் மட்டுமே கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனாலேயே இந்திய எஸ்யூவி கார்களுக்கும், வெளிநாட்டு எஸ்யூவி கார்களுக்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசங்கள் இருந்தன.
ஆனால் சமீப காலமாக, மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி போன்ற இந்திய கார் நிறுவனங்களும், சிட்ரோன் போன்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களும் இந்தியாவில் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்துள்ளன. அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கும் அத்தகைய எஸ்யூவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6): இந்தியாவில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்று, பிஇ 6 ஆகும். மிகவும் எதிர்கால தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த மாடர்ன் மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.18.90 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. 59kWh மற்றும் 79kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் பிஇ 6 விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris): மாருதி சுஸுகி நிறுவனத்தின் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரான இது, இந்தியாவில் ஹைப்ரீட் (Hybrid) என்ஜின் ஆப்ஷனில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார் ஆகும். ரூ.10.49 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விக்டோரிஸ் காரில் மாடர்ன் லுக்கில் கேபின் வழங்கப்படுகிறது.

டாடா கர்வ் (Tata Curvv): டாடா மோட்டார்ஸின் முதல் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரான கர்வ் ஆனது பெட்ரோல்/டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் வெர்சனிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல்/டீசல் என்ஜின் ஆப்ஷனில் ரூ.9.69 லட்சத்தில் இருந்து இந்த கார் விற்பனை செய்யப்படும் நிலையில், கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.17.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
சிட்ரோன் பசால்ட் எக்ஸ் (Citroen Basalt X): பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் அதன் பசால்ட் எக்ஸ் காரை ரூ.8.55 லட்சத்தில் இருந்து விற்பனை செய்கிறது. மேலே கூறப்பட்ட டாடா கர்வ் காருக்கு போட்டியாக சரியாக அதேநேரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பசால்ட் எக்ஸ் காரில் பியானோ கருப்பு நிறத்திலான முன்பக்க க்ரில், எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள், 3டி-எஃபெக்ட் டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor): மாருதி சுஸுகியின் ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த டொயோட்டா எஸ்யூவி காரிலும் கூபே-ஸ்டைலிலான மேற்கூரை வழங்கப்படுகிறது. அர்பன் க்ரூஸர் டைசரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.25 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. ஃபிரான்க்ஸ் காரின் சிறப்பம்சங்கள் உடன் டொயோட்டாவின் முரட்டுத்தனமான டிசைனிலான க்ரில் இந்த காரில் வழங்கப்படுகிறது.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கூபே-ஸ்டைல் எஸ்யூவி காரான ஃபிரான்க்ஸின் விலைகள் ரூ.6.85 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இது உண்மையான கூபே-ஸ்டைல் எஸ்யூவி வகை காராக இல்லாவிடினும், பார்ப்பதற்கு அதே போன்றதான மேற்கூரையை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்டைலான தோற்றத்திலான எஸ்யூவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு கூபே-ஸ்டைல் எஸ்யூவி கார்கள் ஏற்றவையாக இருக்கும். இத்தகைய தோற்றத்திலான மேலே கூறப்பட்ட எஸ்யூவி கார்களுள் எங்களது தேர்வு எதுவென்று கேட்டால், மாருதி சுஸுகி விக்டோரிஸ் ஆகும். ஏனெனில், இது லேட்டஸ்ட் மாருதி காராக விளங்குவது மட்டுமின்றி, குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேநேரம், இந்த தோற்றத்தில் எலெக்ட்ரிக் காரை தேடுபவர்களுக்கு மஹிந்திரா பிஇ 6 ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications