மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி... உலக அரங்கிற்கு செல்லும் இந்தியாவின் ‘தல’ தமிழ்நாடு!

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழ்நாட்டின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாறு குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அப்போது சோழவரம் முதல் இருங்காட்டுக்கோட்டை வரை தமிழகத்தின் பந்தயப் பயணத்தைப் பற்றி பார்த்தோம். இன்று அதே கதைக்கு ஒரு புதிய திருப்பம் கிடைத்துள்ளது. சென்னையில் உலகத்தரமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்த திட்டம், வெறும் கார் பந்தயங்களுக்கான புதிய தடத்தை உருவாக்குவது மட்டுமல்ல. உலகத்தரமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு, வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வசதிகள் மற்றும் விளையாட்டுச் சுற்றுலாவை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இதன் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் மோட்டார் பந்தய பாரம்பரியத்திற்கு புதிய அத்யாயம் ஏற்படும்.

Motorsport City Tamilnadu

தமிழ்நாட்டு பாரம்பரியம்

தமிழ்நாட்டுக்கு மோட்டார்ஸ்போர்ட்ஸ் நெடிய பாரம்பரியம் கொண்டது. சோழவரம் பந்தய தடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஆர்வம், பின்னர் இருங்காட்டுக்கோட்டை மற்றும் கோயம்புத்தூரின் கரி மோட்டார் ஸ்பீடுவே போன்ற இடங்கள் மூலம் தொடர்ந்து வளர்ந்தது. இந்த பயணத்தில் பல திறமையான பந்தய வீரர்கள் உருவாகியுள்ளனர். ஆனால், அவர்களின் திறமைக்கு ஏற்ற உலகத்தரமான நிரந்தர கட்டமைப்பு தமிழகத்தில் இன்னும் முழுமையாக உருவாகவில்லை.

Also Read

நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக், ரஜினி கிருஷ்ணன், அர்மான் இப்ராஹிம் என தமிழகத்துடன் தொடர்புடைய பல வீரர்கள் இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸில் மட்டுமல்லாது உலக அளவில் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களின் பயணத்தைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை வீரர்களும் உருவாக வேண்டுமென்றால், அவர்களுக்கு தேவையான பயிற்சி, போட்டிக் களம், தொழில்நுட்பம் என அனைத்தும் ஒரே சூழலில் கிடைப்பது மிகவும் முக்கியம். இந்த புதிய மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் அதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும்.

Formula 1 India

இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்தில் நடந்த ஒரு நிகழ்வும் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தது. சர்வதேச பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் போட்டியிட்டுக் கொண்டிருக்க, தமிழக முதலமைச்சர் விஜய் அங்கு சென்று போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகின் புகழ்பெற்ற பந்தயத் தடத்தில் நடந்த இந்த சந்திப்பு, தமிழகத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வத்துக்கு ஒரு தனி கவனத்தை உருவாக்கியது.

Also Read

அஜித் குமார் ஒரு நடிகர் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக கார் பந்தயங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மோட்டார் பந்தய வீரர். சென்னையில் உலகத்தரமான மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கும் அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளார். இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸுக்கு இது மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும் என்ற கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குறித்து ஒரு முன்னணி பந்தய வீரரின் ஆதரவு கூடுதல் கவனத்தை உருவாக்கியுள்ளது.

Formula 1 India

ஆசியாவின் டெட்ராய்ட்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஏற்கனவே இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கார் நிறுவனங்கள், இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், உதிரிபாக நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என மிகப்பெரிய வாகனத் தொழில் சூழல் இங்கு உள்ளது.

இந்த தொழில் சூழலுடன் மோட்டார்ஸ்போர்ட்ஸ் இணைந்தால், பந்தயக் கார்களுக்கான பொறியியல், செயல்திறன் உதிரிபாகங்கள், வாகனச் சோதனை, ஓட்டுனர் பயிற்சி, கணினி மூலமான சிமுலேஷன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு போன்ற பல துறைகள் வளரக்கூடும். இதன் பலன் பந்தய வீரர்களுக்கு மட்டும் இல்லாமல், இது சார்ந்த பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திர வல்லுநர்கள் என பலருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்.

Formula 1 India

விளையாட்டுச் சுற்றுலா

இதில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு பெரிய வாய்ப்பாக விளையாட்டுச் சுற்றுலா (Sports Tourism) என்ற துறையும் ஏற்றம் பெறும். ஒரு சர்வதேச மோட்டார் பந்தயம் நடைபெறும் போது, போட்டியைப் பார்க்க வருபவர்கள் அந்த போட்டிக்கான டிக்கெட்டுக்கு மட்டும் பணம் செலவிடுவதில்லை. அவர்கள் தங்குமிடம், உணவு, போக்குவரத்து, சுற்றுலா, ஷாப்பிங் என ஒரு நகரத்தின் பல்வேறு துறைகளில் பணம் செலவிடுவர்.

இதற்கு இந்தியாவிலேயே ஒரு முக்கியமான உதாரணமாக, 2023-ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபார்முலா இ பந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த பந்தயம் அந்த நகரத்தின் பொருளாதாரத்தில் 83.7 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாக நீல்சன் ஸ்போர்ட்ஸ் ஆய்வு தெரிவித்தது. இந்திய மதிப்பில் அப்போது இது ரூ.693 கோடியாக தெரிவிக்கப்பட்டது.

பெரும் பொருளாதார வாய்ப்பு

அந்த பந்தயத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளில் 31,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில் 59 சதவீதம் பேர் ஹைதராபாத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். தங்குமிடங்களில் சுமார் 4 மில்லியன் டாலரும், உணவு மற்றும் பானங்களில் 1.8 மில்லியன் டாலரும் செலவிடப்பட்டதாக ஆய்வு தெரிவித்தது. அந்த மோட்டார் பந்தயத்தால் பல்வேறு உள்ளூர் தொழில்நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார பயன்களை பெற்றன.

உலக அளவில் இதைவிட அடுத்த முக்கிய உதாரணமாக சிங்கப்பூரை எடுத்துக்கொள்ளலாம். அங்கு 2008ம் ஆண்டு ஃபார்முலா 1 கார் பந்தயம் தொடங்கியது. 2024-ம் ஆண்டு வரை 2.2 பில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான கூடுதல் சுற்றுலா வருவாயை இந்த பந்தயம் உருவாக்கியதாக அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மோட்டார்பந்தயம் நகரின் சுற்றுலாவு வளர்ச்சியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்லலாம்.

சிங்கப்பூரின் வெற்றிக்கு பின்னால் பந்தயத் தடம் மட்டும் இல்லை. தங்குமிடங்கள், உணவகங்கள், போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சுற்றுலா தலங்கள் என பல துறைகள் அந்த பந்தய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார பலன்களை அடைந்துள்ளன. இதேபோன்ற ஒருங்கிணைந்த வாய்ப்புகள் சென்னையிலும் உருவானால், மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்ற விளையாட்டைத் தாண்டி நகரின் சுற்றுலா மற்றும் வணிக வளர்ச்சிக்கும் பெரும் பொருளாதார பலனளிக்கும்.

அடுத்த நிலைக்கு செல்லும்

எதிர்காலத்தில் சென்னையில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பந்தயங்கள் நடத்தப்பட்டால், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதைவிட முக்கியமாக, தமிழகத்தின் இளம் பந்தய வீரர்களுக்கும் பெரிய அளவிலான பலன்களை பெற முடியும். தற்போது ஒரு வீரர் கார்டிங் முதல் அடுத்தடுத்த பந்தயப் பிரிவுகளுக்குச் செல்லும்போது பயிற்சி, வாகனம், பயணம், போட்டிக் கட்டணம் என ஒவ்வொரு நிலையிலும் அதிக செலவை எதிர்கொள்கிறார். சொந்த மாநிலத்திலேயே தரமான வசதிகள் கிடைத்தால், திறமையான வீரர்களை இனம் கண்டு அவர்களை அடுத்த நிலைக்கு செல்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்க முடியும்.

ஓட்டுநர் பயிற்சி, தேசிய அளவிலான போட்டிகள், சர்வதேசப் போட்டிகளுக்கான தயாரிப்பு என ஒரு தொடர்ச்சியான பயிற்சி அமைப்பு உருவானால், திறமையான வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிய முடியும். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் இருந்து சர்வதேச அளவிலான புதிய பந்தய வீரர்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

பல ஆயிரம் பேருக்கு வேலை

பந்தய வீரர்களைத் தாண்டியும் இந்தத் துறை பல வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியது. பந்தயப் பொறியாளர்கள், வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள், இயந்திர வல்லுநர்கள், தரவு பொறியாளர்கள், வாகன இயக்கவியல் நிபுணர்கள், டயர் தொழில்நுட்ப வல்லுநர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் திறமையான பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பும் பெருகும்.

மோட்டார்பந்தய துறையில் சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூரும் நெடிய பாரம்பரியத்தையும், அதற்கான அடித்தளங்களையும் பெற்றுள்ளது. அங்கு ஏற்கனவே மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் செயல்திறன் மிக்க வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத் திறன் உள்ளது. சென்னையில் உருவாகும் புதிய மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரம், இருங்காட்டுக்கோட்டை மற்றும் கோயம்புத்தூரின் கரி மோட்டார் ஸ்பீடுவே ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டால், தமிழகத்துக்குள்ளேயே ஒரு பெரிய மோட்டார்பந்தய வலையமைப்பு உருவாக்க முடியும்.

கோவைக்கும் வர்த்தக வாய்ப்பு

சென்னை சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிக்கான மையமாகவும், கோயம்புத்தூர் பந்தய வாகனப் பொறியியல் மற்றும் தயாரிப்புக்கான மையமாகவும் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனுடன் தமிழகத்தின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் இணைந்தால், பந்தயத் தொழில்நுட்பம் மற்றும் வாகனத் தயாரிப்பு ஆகிய இரண்டுக்கும் இடையே புதிய தொடர்புகள் உருவாகலாம்.

இந்த திட்டத்தின் இன்னொரு முக்கியமான அம்சமாக சென்னை நகருக்கு உலக அளவில் முக்கிய அடையாளம் கிடைக்கும். ஒரு சர்வதேச பந்தயம் நடைபெறும் போது, போட்டியை நேரில் பார்க்க வரும் ரசிகர்களைத் தாண்டி தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் அந்த நகரத்தின் பெயர் சென்றடையும். இதனால் சென்னையின் சுற்றுலா மற்றும் வணிக அடையாளத்துக்கும் கூடுதல் கவனம் கிடைக்கலாம்.

அண்மையில் முதல்வர் விஜய், நடிகர் அஜித் பங்கேற்ற லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தய களம் இந்தியாவில் அதிக கவனம் பெற்றது. எனவே, மோட்டார்ஸ்போர்ட்ஸ் நகரம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள பந்தயத் தடத்தின் வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், போட்டி கட்டுப்பாட்டு மையம் மற்றும் வணிக செயல்பாடுகள் குறித்து தமிழக குழு பார்வையிட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காக சில்வர்ஸ்டோன் களத்தை நேரில் பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக இளைஞர்களின் பாரம்பரிய உணர்வை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அப்போது மோட்டார்ஸ்போர்ட்ஸ் பற்றிய நமது கட்டுரை தமிழகத்தின் பழைய பந்தய வரலாற்றை நினைவுபடுத்தியது. இப்போது அதே செய்திக்கு புதிய திருப்பம் கிடைத்துள்ளது. சோழவரத்தில் தொடங்கி தமிழ்நாட்டின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் பயணம் தற்போது உலகத்தரமான நகரத்தை நோக்கி நகர்கிறது.

ஒரு காலத்தில் ஜல்லிக்கட்டுக்காக உலகம் திரும்பிப் பார்த்த சென்னை, எதிர்காலத்தில் கார் பந்தயங்களுக்காகவும் உலகத்தின் கவனத்தை ஈர்க்குமா? சோழவரத்தின் மண் வாசனையில் தொடங்கிய தமிழகத்தின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் கதை, சில்வர்ஸ்டோன் வரை சென்றுவிட்டது. ஒருகாலத்தில் இந்தியாவின் முக்கிய பந்தய மையங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, அடுத்த கட்டத்தில் சர்வதேச பந்தயங்களுக்கான முக்கிய இடமாக மாறும் நிலை நிச்சயம் தமிழர்களுக்கு பெருமை தரும் விஷயமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

Article Published On: Thursday, September 17, 2026, 11:39 [IST]
English summary
Chennai motorsports city economic benefits tamil nadu sports tourism
மேலும்... #motorsports #chennai
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X