வெளிநாடுகளில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹைபிரிட் கார்.. இந்தியாவிலும் வெளியாகப் போகுது!
இந்தியாவில் தற்போது எம்ஜி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது JSW மோட்டார். எனினும் தனித்து ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக இந்தியாவில் உருவெடுக்க வேண்டும் என்னும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது JSW. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் தொழில்நுட்பப் பகிர்வுடன் கூட்டணி அமைப்பது குறித்து அந்நிறுவனம் ஆலோசித்து வருவதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
இறுதியில் சீனாவைச் சேர்ந்த செரி நிறுவனத்தின் கார் மாடல்களை இந்தியாவில் JSW மோட்டார் விற்பனை செய்யலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. செரி இந்த நிறுவனத்தின் பல்வேறு கார் மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட போது ஸ்பைஷாட்களில் சிக்கியது. தற்போது அதேபோல் ஜேகூ J7 (Jaecoo J7) என்ற புதிய பிளக்-இன் ஹைபிரிட் எஸ்யூவி மாடலும் இந்தியாவில் எடுத்துச் செல்லப்பட்ட போது படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

JSW மோட்டார் நிறுவனமே சோதனைக்காக இதனைக் கொண்டு செல்லலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே ஜேகூ 5 (Jaecoo 5), iCar V23 மற்றும் ஜீடூர் T2 (Jetour T2) ஆகிய கார் மாடல்கள் இதே போல் இந்தியாவில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக இந்த ஜேகூ J7 கார் மாடல் என்ன சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
முழுமையான பெட்ரோல் மற்றும் பிளக்-இன் ஹைபிரிட் என இரண்டு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் இந்தக் கார் மாடல் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட மாடலே இந்தியாவில் காணப்பட்டுள்ளது. ஜீடூர் T2 மாடலிலும், பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட வேரியன்டே முன்னர் இந்தியாவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான எரிபொருள் காராக இல்லாமல், ஹைபிரிட் அல்லது எலெக்ட்ரிக் கார்கள் மூலமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள JSW மோட்டார் நிறுவனம் விரும்புவதாகத் தெரிகிறது. எனவே அந்த வகையான வாகனங்களை இந்தியாவில் வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது. 4,500 மிமீ நீளம் மற்றும் 2,672 மிமீ நீள வீல்பேஸைக் கொண்டுள்ளது இந்தப் புதிய ஜேகூ J7 ஹைபிரிட் எஸ்யூவி.
இதன் பிளக்-இன் ஹைபிரிட் பவர்ட்ரெயினானது 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 18.3 kWh பேட்டரி பேக்கை உள்ளடக்கியதாக இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் மோடில் 90 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொண்டுள்ளது இந்தக் கார். இதன் இன்ஜினானது 141 hp பவர் மற்றும் 215 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பானது 210 hp பவர் மற்றும் 310 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.
இதுமட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கிறது இந்த எஸ்யூவி. இந்தக் காரில் 14.8 இன்ச் போர்ட்ரெயிட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட்டிங், ஹீட்டட் மற்றும் வெண்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், 540 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், ADAS, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த இந்தக் கார் மாடல் தான் கடந்த மார்ச் மாதம் யுகே-யில் அதிகம் பதிவு செய்யப்பட்ட புதிய கார் மாடலாக இருந்திருக்கிறது. அந்நாட்டில் இந்தப் பிளக்-இன் ஹைபிரிட் மாடலை இந்திய மதிப்பிற்கு ரூ.43.78 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது செரி. ஹூண்டாய் டூஸான், BMW X1, சிட்ரன் C5 ஏர்கிராஸ் ஆகிய கார் மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ஜேகூ J7.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தக் கார் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில் இந்தியாவில் வெளியாகும் பட்சத்தில், எஸ்யூவி பிரிவையே ஒரு கலக்கு கலக்கி விடும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு பிளக்-இன் ஹைபிரிட் வகையில் ஒரு தேர்வையும் இந்தக் கார் கொடுக்கும். இந்தியாவில் ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்குப் போட்டியாக இந்த ஜேகூ J7 இருக்கும்.


Click it and Unblock the Notifications








