மாருதியால கூட இவ்வளவு கம்மி விலைக்கு எலெக்ட்ரிக் கார் வெளியிட முடியாதுப்பா!

JSW மோட்டார் நிறுவனம், சீனாவைச் சேர்ந்த செரி (Chery) நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது. காரின் பாகங்களை செரி வழங்க, JSW மோட்டார் நிறுவனமானது இந்தியாவில் தங்கள் பிராண்டின் கீழ் அதனை அசெம்பிள் செய்து விற்பனை செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. 2026-ன் இறுதியில் அல்லது 2027ல் இந்த கூட்டணியின் கீழ் புதிய காரின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது விஷயம் என்னவென்றால், ஏற்கனவே இந்தக் கூட்டணியில் கீழ் சில கார் மாடல்கள் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. சீனாவில் செரி வெளியிட்ட மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல் QQ3 EV. இந்த மாடலின் டிசைனை தற்போது இந்தியாவில் காப்புரிமைக்காகப் பதிவு செய்துள்ளது செரி.

Chery QQ3 EV

எனவே இந்த மாடலை இந்தியாவில் JSW மோட்டார் நிறுவனம் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு வகையிலும் இதனை இந்தியாவிற்கு ஏற்ற கார் மாடலாக நம்மால் கூற முடியும். இதனை தற்போது இந்தியாவில் பதிவு செய்திருப்பதையடுத்து, இதனை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த QQ3 EV என்ன வகையான கார்? என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது? ஆகிய விவரங்களைப் பார்க்கலாம்.

4,195 மிமீ என்ற அளவில் இந்தியாவின் மிட்-சைஸ் கார் பிரிவில் சற்று குறைவான நீளம் கொண்ட காராக வெளியாகும் வகையில் இருக்கிறது செரி QQ3 EV. இதனை இந்திய மதிப்பிற்கு வெறும் ரூ.8.05 லட்சம் முதல் ரூ.10.78 லட்சத்திற்குள்ளான விலையில் சீனாவில் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். பட்ஜெட் முக்கியமாகக் கருதப்படும் இந்தியா போன்ற சந்தையில், இது போல விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களை வரப்பிரசாதமாகவே கூற முடியும்.

Chery QQ3 EV

மேலும், இந்திய எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தையில் மிகவும் ஹாட்டான கார் பிரிவு என்றால் அது மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவு தான். பட்ஜெட் கார்களை விற்பனை செய்யும் மாருதியே தங்களது முதல் எலெக்ட்ரிக் காருக்கு இந்தப் பிரிவைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறது. அனைத்து விதமான மேம்பட்ட வசதிகளுடன் அதிக தொடக்க விலையுடன் இந்தப் பிரிவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன.

செரியின் புதிய QQ3 EV மாடலானது ஒரு ஹேட்ச்பேக் என்றாலும், அளவில் அடிப்படையில் மிட்-சைஸ் பிரிவிலேயே இருக்கிறது. இதன் அளவை 4 மீட்டர்களுக்குள் குறைக்க முடிந்தால் இன்னும் குறைவான விலையில் இந்தக் காரை வெளியிட முடியும். ஆனால், JSW மோட்டார் ஆட்டோமொபைல் துறையில் புதிதாக நுழையவிருக்கும் ஒரு நிறுவனம். எனவே ஒரு காரை மறுவடிவமைப்பு செய்து அந்நிறுவனம் இப்போது வெளியிடும் என நாம் எதிர்பார்க்க முடியாது.

செரியின் மூலமாகவே மறுவடிவமைப்பு பணிகளை JSW மேற்கொள்ளலாம். ஆனால், இதெல்லாம் சாத்தியக்கூறுகள் தானே தவிர, JSW அந்த முடிவை எடுக்குமா என நாம் சொல்ல முடியாது. தற்போது வேறு சில கார் மாடல்களையே முதலில் வெளியிட JSW திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே இந்த QQ3 EV வெளியாகுமா என்று தெரிவதற்கு இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்கவே வேண்டும். விலையின் அடிப்படையில் இந்தியாவிற்கேற்ற காராக இந்த QQ3 இருக்கும் என்பது மட்டுமே நம்முடைய கருத்தாக இருக்கிறது.

இந்தக் காரில் 29.48 kWh மற்றும் 41.28 kWh என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகளைக் கொடுத்துள்ளது செரி. சிறிய பேட்டரி பேக்கானது 310 கிமீ வரையிலான ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக்கானது 420 கிமீ வரையிலான ரேஞ்சையும் கொண்டிருக்கின்றன. எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப்பிலும் இரண்டு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று 77 hp பவர் மற்றும் 90 Nm டார்க் கொண்ட செட்டப்.

மற்றொன்று 120 hp பவர் மற்றும் 115 Nm டார்க்கைக் கொண்டது. இந்தக் காரின் எலெக்ட்ரிக் மோட்டார்கள் ரியர் வீல் டிரைவ் வசதியைக் கொண்டது. பட்ஜெட் விலையில் ரியர் வீல டிரைவ் வசதி கொண்ட காராக இருப்பது இதன் மற்றொரு பிளஸ் பாயிண்ட். செரியின் Jetour T2 பிளக்-இன் ஹைபிரிட் கார் மாடலையே JSW முதலில் இந்தியாவில் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து Jaecoo J5 மற்றும் iCar V23 ஆகிய மாடல்கள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பட்ஜெட் செரிய QQ3 EV-யை JSW மோட்டார் பரிசீலனை செய்யுமா என்பதனை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம், JSW என்ன முடிவெடுக்கிறது என்பதனை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனை சந்தை கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருகிறது. முன்பை விட அதிகளவிலான கார் மாடல்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் கிடைக்கின்றன. ஆனால், ரூ.12 லட்சத்திற்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் கார் பிரிவில் மிகவும் குறைவான தேர்வுகளே இருக்கின்றன. அதிக தொழில்நுட்பங்களுடன், அதிக விலையிலான கார்களை வெளியிடுவது ஓகே தான்.

ஆனால், அதே நேரம் அடிப்படையாக போதுமான வசதிகளுடன் ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதும் அவசியமாகிறது. இதுபோன்ற பட்ஜெட் கார்களுக்கு (இதுவே அதிக பட்ஜெட் தான்) முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால், எலெக்ட்ரிக் கார்கள் எதிர்காலமாகவிருக்கும் நிலையில் சாமானியனுக்கு கார்கள் எட்டாக் கணியாகவே ஆகிவிடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 14, 2026, 10:44 [IST]
English summary
Chery qq3 budget electric car design patented in india may be launched soon
மேலும்... #chery motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+