சின்ன கார்... பெரிய போட்டி! மாருதியை குறிவைக்கும் சிட்ரோனின் புதிய EV கார்?
இந்தியாவில் சிறிய கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு சிட்ரோன் நிறுவனத்தின் புதிய கார் ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய 2 CV கான்செப்ட் கார்தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. பழைய காலத்து காரின் தோற்றத்துடன் நவீன மின்சாரத் தொழில்நுட்பத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கார், உலக அளவில் தற்போது ஆட்டோமொபைல் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் இருந்த சிட்ரோன் நிறுவனத்தின் புகழ்பெற்ற 2 CV கார் ஒரு காலத்தில் எளிமையான, குறைந்த செலவிலான போக்குவரத்துக்காகப் பலராலும் விரும்பப்பட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் இருந்த அந்தப் பழைய காரின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய கான்செப்ட் கார் மாடலை சிட்ரோன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. அண்மையில் நடந்த 2026 பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் வெளியிடப்பட்ட இந்தக் கார், 2028ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி மாடலாக அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய காரின் முன்புறத்தில் வட்ட வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள், வளைந்த கூரை, தனித்துவமான பின்புற வடிவமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. பழைய 2 CV காரை நினைவுபடுத்தும் வகையில் இருந்தாலும், ஒட்டுமொத்த தோற்றம் நவீன யுகத்துக்கு தக்கவாறு மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் காரின் நீளம் 3.76 மீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எடையை ஒரு டன்னுக்குள் வைத்திருக்கவும் சிட்ரோன் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் நெரிசலான நகரச் சாலைகளில் ஓட்டுவதற்கும், குறுகிய இடங்களில் காரை நிறுத்துவதற்கும் ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்திலும் வழக்கமான கார்களிலிருந்து மாறுபட்ட அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 8 அங்குல தொடுதிரை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தனித்துவமான ஸ்டீயரிங் வீல் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிற இருக்கைகள், சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் கவரும் வகையில் உள்ளன.

ஐரோப்பாவில் இந்தக் காரின் உற்பத்தி மாடலுக்கான ஆரம்ப விலை சுமார் 15,000 யூரோவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் இது தோராயமாக ரூ.15 லட்சமாக வருகிறது. ஆனால், இது நேரடி நாணய மாற்றத்தின் அடிப்படையிலான மதிப்பீடாக கூற முடியும். அதேநேரத்தில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.6 லட்சம் என்ற அளவில் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படலாம்.
இங்குதான் இந்திய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான கேள்வி எழுகிறது. சிட்ரோன் இந்தக் காரை இந்தியாவிலும் அறிமுகப்படுத்துமா? இந்தியாவில் சிறிய கார்களுக்கு இன்னும் வாடிக்கையாளர்கள் இருப்பதால், மலிவான மின்சாரக் காராக இதை அறிமுகப்படுத்தினால் வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இந்திய அறிமுகம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தால் விலை அதிகரிக்கலாம். இந்தியாவிலேயே உற்பத்தி செய்தால் விலையைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்திய உற்பத்தித் திட்டம் குறித்தும் தற்போது உறுதியான தகவல் இல்லை.
பேட்டரி திறன், முழுமையான சார்ஜில் செல்லும் தூரம் உள்ளிட்ட முக்கிய விவரங்களும் இன்னும் வெளியாகவில்லை. எனவே, 2028ல் இந்தக் கார் அறிமுகமாகும்போது அதன் விலை, ரேஞ்ச் மற்றும் விற்பனைத் திட்டம் ஆகியவைதான் இந்தியாவுக்கான வாய்ப்பை தீர்மானிக்கும். எனினும், இந்தியாவில் ரூ.4,000 கோடி முதலீட்டுடன் புதிய கார் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்ய சிட்ரோன் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் திட்டமிட்டு இருக்கிறது. எனவே, இந்த காரும் பரிசீலிக்கப்படும் என்ற ஆவல் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications


